25/11/2025
பிரான்ஸ் நாட்டில் அண்மையில் தமிழ் தம்பதியினர் செய்த மோசடிச் செயல் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல, ஐரோப்பா மற்றும் பிரித்தானியாவில் கறுப்பு பணத்தை (Black Money) மையமாக வைத்து எம் இனத்தவர்கள் செய்து கொண்டிருக்கும ஒரு பெரும் கறுப்புபண மோசடி வலையமைப்பின் சிறு துளியில் ஒன்றே இது..
பிரான்ஸ் வொண்டி (Bondy) பகுதியில் வசித்து வந்த வவுனியாவைச் சேர்ந்த 39 வயது ஆணும், 36 வயது பெண்ணும் அரச சலுகைகளை (Benefits)ஏமாற்றிப் பெறுவதற்காக தீட்டிய திட்டம் இது.
சட்டபூர்வமாகத் திருமணம் முடித்த இவர்கள், அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கும் 'தனிநபர் பெற்றோருக்கான' (Single Parent) உதவித்தொகையைப் பெறுவதற்காகப் போலியாக விவாகரத்து (Fake Divorce) செய்துகொண்டனர்.
விவாகரத்து பெற்றதாகக் காட்டி, கணவன் ஒரு வீட்டிலும் மனைவி ஒரு வீட்டிலும் தனித்தனியாக வசிப்பதாகப் பதிவு செய்து, இருவருக்கான அரச வீட்டு வாடகை மானியத்தையும் (Housing Benefit) பெற்றுள்ளனர்.
ஆனால், உண்மையில் கணவன் தனது பெயரில் உள்ள வீட்டை விசா இல்லாத அகதிகளுக்குச் சட்டவிரோதமாக வாடகைக்கு விட்டுவிட்டு, மனைவியின் வீட்டில் அவருடன் இரகசியமாக வாழ்ந்து வந்துள்ளார். இதன் மூலம் அரச மானியம், சட்டவிரோத வாடகை வருமானம், பிள்ளைகளுக்கான பராமரிப்புத் தொகை எனப் பெரும் தொகையைச் சுருட்டியுள்ளனர்.
கடந்த வாரம் ஒருநாள் அதிகாலை 3 மணிக்கு அதிரடியாகச் சோதனையிட்ட பிரான்ஸ் பொலிஸார், இருவரையும் ஒரே வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் ஒரு உதாரணம் மட்டுமே.
இப்படி பல மோசடிகள் பிரான்ஸ் பிரித்தானியா ஜேர்மனி போன்ற நாடுகளில் எம்மவர்கள் செய்து வருகின்றனர்.
மோசமான மோசடிச்செயல்களில் ஈடுபடும் பல புலம்பெயர் தமிழர்கள் இந்த புலம்பெயர் தேசங்களில் உள்ளனர் .
பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாடுகளில் பல தமிழ் சாராயக்கடை (Off-licence/Shops) முதலாளிகள், கோழிக்கடை முதலாளிகள் மற்றும் தொழில் அதிபர்கள் இதைவிடப் பெரிய மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவரகளது கடைகளில் வரும் கொழுத்த லாபத்தை அரசாங்கத்திற்கு (HMRC/Fisc) காட்டாமல் மறைத்து வருகின்றனர்.
விசா இல்லாத மற்றும் வதிவிட உரிமையற்ற தமிழர்களை வேலைக்கு அமர்த்தி, அவர்களுக்குச் சட்டபூர்வமான குறைந்தபட்ச ஊதியத்தை (Minimum Wage) விட 50% குறைவாக, அதாவது மணித்தியாலத்திற்கு வெறும் 5 அல்லது 6 பவுண்ட்ஸ் மட்டுமே வழங்கி சுரண்டுகின்றனர்.
இவ்வாறு அரசாங்கத்திற்கு வரிகட்டாமலும், ஏழைத் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டியும் சேர்க்கும் பணத்தை “உண்டியல்” மூலமாகவும், சட்டவிரோத வழிகளிலும் இலங்கைக்குக் கடத்துகின்றனர்.
வெளிநாடுகளில் இதுபோன்று மோசடி செய்து சம்பாதித்த பணத்தை இலங்கையில் சட்டவிரோதமான முறையில் கொட்டுவதால், உள்ளூர் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த கறுப்புப் பணத்தை வைத்துக்கொண்டு இவர்கள் ஊரில் உள்ள காணிகள், மாடி வீடுகள் மற்றும் வியாபாரத் தலங்களை எந்த விலை கொடுத்தும் வாங்குகிறார்கள். இதனால் காணிகளின் விலை பல மடங்கு உயர்கிறது.
இலங்கையில் நேர்மையாகக் கஷ்டப்பட்டு உழைக்கும் சாமானிய மக்களால், இந்த விலையேற்றத்தால் ஒரு துண்டு நிலம் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உள்ளூர் உழைப்பாளிகள் சொந்த மண்ணிலேயே சொந்தமாக ஒரு காணி வாங்க முடியாத நிலையை இந்த "வெளிநாட்டு கறுப்புப் பணம்" உருவாக்குகிறது.
இந்த அநீதியைத் தடுத்து நிறுத்த இலங்கை அரசு உடனடியாகப் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்:
வெளிநாட்டிலிருந்து வந்து இலங்கையில் பெருமளவில் சொத்துக்களை வாங்குபவர்களின் வருமான மூலத்தை (Source of Funds) இலங்கை அரசு ஆராய வேண்டும்.
அந்தப் பணம் எவ்வாறு சம்பாதிக்கப்பட்டது என்பதற்கான சட்டபூர்வமான வங்கிப் பரிமாற்றங்கள் மற்றும் வரி கட்டியதற்கான ஆதாரங்களைக் இலங்கை அரசு கோர வேண்டும்.
வருமானத்திற்கான முறையான ஆதாரம் காட்டத் தவறினால், அந்தச் சொத்துக்களை இலங்கை அரசு உடனடியாகப் பறிமுதல் (Confiscate) செய்ய வேண்டும்.
கணக்கில் காட்டப்படாத வருமானம் மூலம் இலங்கையில் சொத்து வாங்கியவர்களின் விபரங்களை, வங்கிகளில் உள்ள பணங்கள் போன்ற விபரங்களை உடனடியாகப் பிரித்தானிய (HMRC) மற்றும் பிரான்ஸ் வரித் திணைக்களங்களுக்கு இலங்கை அரசு அனுப்பி வைக்க வேண்டும்.
இலங்கை அரசு எடுக்கும் இந்த அதிரடி நடவடிக்கைகளால், வெளிநாடுகளில் வரி ஏய்ப்பு செய்து, அரசாங்கத்தை ஏமாற்றிச் சேர்க்கும் கறுப்புப் பணத்தை இலங்கைக்குக் கொண்டுவரப் பயப்பட வேண்டும்.
நேர்மையான உழைப்பை மதிப்போம்; மோசடிகளை வேரறுப்போம்.