30/06/2025
மருத்துவர்களின் சேவையை பாராட்டி மாட்டு வண்டியில் வந்த சீர்வரிசை... தஞ்சையில் நெகிழ்ச்சி சம்பவம்
மருத்துவர்களின் சேவையை பாராட்டி நெல், வாழை, மா, பலா என 101 வகையான பொருட்களுடன் தஞ்சை மக்கள் தடபுடலாக சீர்வரிசை கொண்டு சென்ற நிகழ்வு பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது
தஞ்சாவூர்: தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவர்களின் மகத்தான சேவையை பாராட்டி, அப்பகுதி மக்கள் மாட்டு வண்டி பூட்டி, சீர்வரிசை எடுத்து வந்து பாராட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மருத்துவர்களை கடவுளுக்கு நிகராகவே மக்கள் பார்க்கின்றனர். அந்த வகையில், மக்களின் நலனை காக்க மகத்தான சேவை புரியும் மருத்துவர்களை போற்றும் விதமாக, முன்னாள் மேற்கு வங்க மாநில முதலமைச்சரும், சுதந்திரப் போராட்ட தியாகியுமான டாக்டர் பி.சி. ராய்-யின் பிறந்தநாளான ஜூலை 1ஆம் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது
இந்த நிலையில், தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களின் சேவையை பாராட்டும் விதமாகவும், தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டும் அப்பகுதி மக்கள் ஒரு நெகிழ்ச்சிகரமான செயலை செய்துள்ளனர்.
அதவாது, நேற்று (ஜூன் 27) அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் என 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று சேர்ந்து மாட்டு வண்டி பூட்டி சீர்வரிசை எடுத்து வந்தனர்.
பின்னர், அந்த சீர்வரிசை பொருட்களை மருத்துவமனைக்குள் கொண்டு சென்று, அங்கிருந்த மருத்துவர்களுக்கு ஆரத்தி எடுத்தும், சால்வை அணிவித்தும் பாராட்டுக்களை தெரிவித்தனர். அதனைக் கண்ட மருத்துவர்கள் மகிழ்ச்சியில் பூரித்தனர்.
இந்த நிகழ்வு குறித்து தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் கூறியதாவது; மருத்துவர்களான நாங்கள் எங்கள் பணியை சிறப்பாக செய்து வருகிறோம். இதுபோல, பொதுமக்கள் சீர்வரிசை எடுத்து வந்து பாரட்டுவது என்பது, தங்களது பணியை மேலும் சிறப்பாக செய்ய ஊக்குவிக்கும் வகையில் உள்ளது என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.