03/11/2025
பனையூருக்கு வந்த சிபிஐ அதிகாரி! அவசரமாக Vellfire காரில் நீலாங்கரையில் இருந்து வெளியே சென்ற விஜய்!
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை விசாரிக்க சிபிஐ அதிகாரி பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு வந்த நிலையில் நீலாங்கரை வீட்டிலிருந்து அவசர அவசரமாக விஜய் தனது காரில் வெளியே கிளம்பிச் சென்றார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக பிரச்சார கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் விஜய் பிரச்சாரம் செய்தார். அவரை பார்க்க ஏராளமானோர் அங்கு கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகிவிட்டனர்.
இந்த சம்பவத்திற்கு விஜய் தலா ரூ 20 லட்சம் இழப்பீடாக வழங்கினார். விஜய் கரூர் செல்லாமல் அவரவர் வங்கிக் கணக்குகளில் அந்த பணத்தை வரவு வைத்துவிட்டார். மேலும் கடந்த 27ஆம் தேதி விஜய், கரூர் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களை சென்னைக்கு வரவழைத்து அவர்களுடன் சந்திப்பு கூட்டத்தை நடத்தி ஆறுதல் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. கரூர் வழக்கில் முதல் கட்ட விசாரணையை நிறைவு செய்த அதிகாரிகள் குழு, தற்போது இரண்டாம் கட்ட விசாரணையை தீவிரப்படுத்தி வருகிறது.
அதன்படி கடந்த 31 ஆம் தேதி சிபிஐ ஏஎஸ்பி மகேஷ் குமார், சிபிஐ எஸ்பி பிரவீன் குமார், டிஎஸ்பி ராமகிருஷ்ணன், ஆய்வாளர் மனோகரன் உள்ளிட்ட 15 பேர் கொண்ட சிறப்பு அதிகாரிகள் குழு, கரூர்-ஈரோடு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேலுச்சாமிபுரம் பகுதிக்கு வந்தடைந்தனர்.
பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்திற்கு சிபிஐ அதிகாரி ஒருவர் வருகை தந்துள்ளார். அவர் விஜய் பயன்படுத்த பிரச்சார வாகனத்தை ஆய்வு செய்தார். மேலும் தவெக அலுவலகத்தில், கரூர் கூட்டம் குறித்த சில ஆவணங்களையும் அந்த அதிகாரி கேட்டார். இந்த விசாரணை நிறைவுற்று அந்த அதிகாரி பனையூர் அலுவலகத்தில் இருந்து வெளியே சென்றுவிட்டார்.
இந்த நிலையில் பனையூர் கட்சி அலுவலகத்திற்கு சிபிஐ அதிகாரி சென்ற அதே நேரத்தில் தனது வெல்ஃபயர் (Lexus Vellfire) காரில் விஜய், நீலாங்கரை வீட்டில் இருந்து வெளியேறிவிட்டதால் பரபரப்பு எழுந்தது.