01/05/2025
உலகத்தை உயர்த்துவதற்காக உழைக்கும் பாட்டாளிகளை போற்றும் மே நாளைக் கொண்டாடும் உலகெங்குமுள்ள பாட்டாளிகளுக்கு தொழிலாளர்கள் நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகத்தின் ஆக்கும் சக்திகள் என்றால் அவர்கள் தொழிலாளர்கள் தான். தேனீக்கள் எவ்வாறு காடுகள் தோறும், தோட்டங்கள் தோறும் சுற்றிச்சுழன்று தேனை சேகரித்து வந்து தேன் கூடுகளை அமைக்கின்றனவோ, அதே போல் தான் தொழிலாளர்கள் இந்த உலகின் முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்துக் கட்டமைப்புகளையும் உருவாக்கியுள்ளனர். உழைப்பாளர்கள் இல்லை என்றால் உலகம் இல்லை என்பது தான் உண்மை. அவர்கள் அனைத்து உரிமைகளும் வாழ வேண்டும் என்பதே எனது நோக்கம்.
உலகம் வளர, வளர உழைப்பாளர்களும் வளர வேண்டும் என்பது தான் இயற்கை நியதி. ஆனால், களச்சூழல் அத்தகையதாக இல்லை. உலகம் முன்னேறிக் கொண்டே இருக்கிறது; பெரு நிறுவனங்கள் வளர்ந்து கொண்டே செல்கின்றன. ஆனால், இந்த வளர்ச்சிக்கு காரணமான தொழிலாளர்களின் நிலை மட்டும் மாறவில்லை. அவர்கள் இன்னும் சுரண்டப்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றனர். இன்னும் கேட்டால் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராட வேண்டியத் தேவை 19&ஆம் நூற்றாண்டில் எந்த அளவுக்கு இருந்ததோ, அதை விட அதிகத் தேவை இன்றைக்கு இருக்கிறது. உலகம் பல்வேறு தளைகளிலிருந்து விடுதலை பெற்று வரும் நிலையில் தொழிலாளர்களின் விலங்கு மட்டும் உடையவில்லை.
உழைக்கும் தொழிலாளர்களுக்கு உரிமைகளை வழங்குவது தான் உண்மையான சமூகநீதியாகும். நாட்டின் வளர்ச்சியாக இருந்தாலும், நிறுவனங்களின் வளர்ச்சியாக இருந்தாலும் அதற்கு அடித்தளமாக திகழ்பவர்கள் தொழிலாளர்கள் தான். அவர்கள் வலிமையாக இல்லாவிட்டால், அவர்களை அடிப்படையாக வைத்துக் கட்டப்பட்ட எந்த சாம்ராஜ்யமும் சரிந்து விடும். இதை உணர்ந்து தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நியாயமான ஊதியம், விடுமுறை, 8 மணி நேர பணிக்காலம், ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புகள் என அனைத்தும் வழங்கப்படுவதை அரசுகள் உறுதி செய்ய வேண்டும்; இல்லாவிட்டால் 136 ஆண்டுகளுக்கு முன்னெடுக்கப்பட்டது போன்ற போராட்டத்தை மீண்டும் முன்னெடுக்க பாட்டாளிகள் அனைவரும் தயாராவோம் என்று கூறி, மீண்டும் ஒரு முறை நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.