29/04/2023
கடவுள்,தெய்வம் என்கிற சொல்லாடல் எல்லாம் நிலத்தில் ஒரு குறிப்பிட்ட பண்பாட்டை நிறுவ முயல்வன...
கடவுள் - நகரமயமானவன்,பெருங்கோயிலில் குடி கொண்டவன்,ஆண்டு முழுதும் உற்சவம் காண்பவன்..அழகழகான அணிகலன் பூண்டவன்..புளிச்சோறை படையலெனக் கொண்டவன்..
தெய்வம் - கிராமமயமானவன்,காட்டுக்குள் குடி கொண்டவன்,ஆண்டுக்கொரு முறை உற்சவம் காண்பவன்.கள்ளையும்,
கறிச்சோறையும் படையலெனக் கொண்டவன்..
இவர்கள் இருவருக்கும் நிலவுலகில் எப்போதும் ஒரு முட்டலும்,மோதலும் உண்டு..
மண்சார்ந்து இருப்பதால் மண்சார்ந்த அரசியலிலும் இவர்கள் பங்கு கொள்ளத் தவறுவதில்லை.
ஆனால் இவர்கள் இருவருக்கும் அப்பால் செல்ல இங்கு எத்தனை பேருக்கு எண்ணமுண்டு???
இவர்கள் இருவருக்கும் அப்பால் தான் அந்தப் பரவெளி உண்டு..
நகரத்தையோ,கிராமத்தையோ இருப்பிடமாக கொண்டவன் அல்ல பேரண்டத்தை நிரப்பிக் கொண்ட பிரபஞ்சமயமானவன்.
உற்சவம் கடந்தவன்,உடுதிரள்கள் என்னும் கேலெக்ஸிக்கெல்லாம் (Galaxy) மூல காரணம்.
நன்றி,என்கிற சொல்லை தவிர அவனுக்கு நாம் சூட்டும் அணிகலன் ஒன்றுமேயில்லை.அது கூட நம் விருப்பே..தேவையற்றவன்.
புளிச்சோறுமில்லை,கறிச்சோறுமில்லை மொத்தத்தில் படையலே இல்லை. அந்தப் பெருவெளிக்குள் செல்ல செல்ல வார்த்தையே ஊமையாகும் போது சோறா விசயம்???சோற்று அரசியலுக்கு அப்பால் நிற்பவன்.
அவனே முழுமையானவன் எம் ஆதி முதல்வன்.
பூசாரியின் துணையோடு கை தொழுத கிராமத்து தெய்வத்திடமிருந்தும்,
அர்ச்சகரின் துணையோடு விழுந்து ஏத்திய நகரத்து கடவுளிடமிருந்தும்,விடைபெற்று
புத்தியின் துணையோடு விழுந்து எழாமலும்,ஆடி அரற்றாமலும் அமைதியொடு அமர்ந்து கண்ணீர் மட்டுமே சிந்தும் நன்றி பகிர்தலே அந்த வழிபாடு.
கிராமம்,நகரம் என நிலவுலக சண்டைக்கு விடைகொடுத்து வெளிக்குள் வெளி கடந்து சும்மா இருக்கும் சுகம்.
எல்லை வகுத்து வைத்திருக்கும் மண் அல்ல..எவர் எக்ஸ்பேன்ட் (Ever expand)என்னும் எல்லையிலாப் பெருவெளி.
ஆதி முதலே...பிரபஞ்சப் பேரன்பே வாழி நின் பேரருள்.