Kolly Nxt

Call Contact the business

Kolly Nxt Tamil Cinema News updates

கில்ட் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில்,  “ஹபீபி” படத்திற்கு பாராட்டு விழா ! தமிழ் முஸ்லிம் மக்களின் வாழ்வ...
14/10/2026

கில்ட் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், “ஹபீபி” படத்திற்கு பாராட்டு விழா !

தமிழ் முஸ்லிம் மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்த ‘ஹபீபி’ திரைப்படம் – படக்குழுவினருக்குப் பாராட்டு விழா!

மீரா கதிரவன் இயக்கத்தில் உருவான ‘ஹபீபி’ திரைப்படம், தமிழ் முஸ்லிம் மக்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட காதல் மற்றும் குடும்பப் பின்னணியிலான திரைப்படமாகும். ரோமியோ பிக்சர்ஸ், நேசம் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஜிகேஎஸ் பிரதர்ஸ் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் கஸ்தூரி ராஜா, ஈசா, மாளவிகா மனோஜ், தனஸ்ரீ சுதாகரன், அனுஸ்ரேயா ராஜன், அருள்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்; மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

1980-களில் தொடங்கி நிகழ்காலம் வரை ஒரு குடும்பத்தின் வாழ்க்கைப் பயணத்தைப் பதிவு செய்யும் இப்படம், தென் தமிழகத்தின் முஸ்லிம் சமூகத்தின் கலாசாரம், நம்பிக்கைகள், குடும்ப உறவுகள், காதல், ஆசைகள் மற்றும் கைத்தறி நெசவுத் தொழிலின் பின்னணியில் உருவாகும் வாழ்க்கை மாற்றங்களைப் படம்பிடித்துள்ளது. தமிழ் சினிமாவில் முஸ்லிம் மக்களின் அன்றாட வாழ்வியலை விரிவாகவும் நெருக்கமாகவும் பதிவு செய்த படைப்பாக ‘ஹபீபி’ கவனம் பெற்றுள்ளது. வெளியானதைத் தொடர்ந்து இப்படத்தின் கதைக்களம், கலாசாரப் பதிவுகள் மற்றும் கதாபாத்திரங்களின் இயல்பான சித்தரிப்பு குறித்து விமர்சனங்கள் வெளியாகின.

திரையரங்குகளில் வெளியானதைத் தொடர்ந்து தற்போது சோனி லிவ் ஓடிடி தளத்திலும் வெளியாகியுள்ள ‘ஹபீபி’ திரைப்படத்திற்குக் 125 வது நாள் கிடைத்து வரும் வரவேற்பைத் தொடர்ந்து, படக்குழுவினரைப் பாராட்டும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. கில்ட் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திரைப்படத்தின் சிறப்புத் திரையிடலும் இடம்பெற்றது. திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு படக்குழுவினரைப் பாராட்டினர்.

இந்நிகழ்வினில்

கில்ட் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சக்கரவர்த்தி பேசியதாவது..,

“‘ஹபீபி’ ஒரு காவியத்தைப் போன்ற படைப்பு. இத்தகைய படத்தை உருவாக்கிய இயக்குநருக்கும் படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் படத்திற்குப் பாராட்டு விழா நடத்துவது எனக்குப் பெருமையாக இருக்கிறது. இதுபோன்ற படைப்புகளுக்கு இன்னும் அதிகமான அங்கீகாரம் கிடைக்க வேண்டும்.

எனக்கு இஸ்லாமிய நண்பர்கள் பலர் இருக்கிறார்கள். நான் பத்தாம் வகுப்பு படித்தபோது ஹர்ஷத் என்ற நண்பர் இருந்தார். சென்னையில் சமீர் என்ற நண்பரும் இருக்கிறார். அவர்கள் என்னுடன் பழகியது மதத்தின் அடிப்படையில் அல்ல; அன்பும் நட்புமாகத்தான். அந்த அன்பும் பாசமும் இப்போது எங்கே போய்விட்டன என்று தெரியவில்லை.

இஸ்லாமியர்களைப் பற்றிய தவறான பிம்பங்களைத் தாண்டி, அவர்களின் உண்மையான வாழ்வியலையும் அன்பையும் மனிதநேயத்தையும் இந்தப் படம் உணர்வுபூர்வமாகச் சொல்லியிருக்கிறது. நாம் அனைவரும் மத வேறுபாடுகளைக் கடந்து சகோதரர்களாகவும் தமிழர்களாகவும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்பதையே இந்தப் படம் உணர்த்துகிறது.

நான் தயாரித்து நடித்த படங்கள் மூலம் எதிர்பார்த்த அளவுக்குப் பெரிய அங்கீகாரம் கிடைக்காதது எனக்கு வருத்தம்தான். இருப்பினும், ‘ஹபீபி’ போன்ற படைப்பைப் பாராட்டுவதற்கான இந்த மேடை எனக்கும் கில்ட் சங்கத்திற்கும் பெருமை சேர்த்திருக்கிறது. படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். நன்றி, வணக்கம், ஜெய்ஹிந்த்!”

பத்திரிகையாளரும் இயக்குநருமான கோடங்கி பேசியதாவது..,

“இது ஆடம்பரமான விழா இல்லை; ஆனால் அற்புதமான, அழகான விழா. ‘ஹபீபி’ போன்ற படைப்புகளை நாம் எந்த அளவுக்கு உயர்த்திப் பிடிக்கிறோம் என்பதுதான் முக்கியம். இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் மீரா கதிரவன் சொல்லியிருப்பது அன்பு. அன்புக்கு மதம் கிடையாது, ஜாதி கிடையாது, மொழி கிடையாது. ஆனால் அந்த அன்பு வெற்றி பெறுவதற்குப் பல நேரங்களில் அதிகமான போராட்டங்கள் தேவைப்படுகின்றன. இந்தப் படத்தை நான் இரண்டாவது முறையாகப் பார்க்கிறேன். ஒவ்வொரு காட்சியிலும் இயக்குநரின் நோக்கத்தையும் உழைப்பையும் உணர முடிகிறது.

“ஒரு படத்தைத் தயாரிப்பவர், இயக்குநர், நடிகர்கள் ஆகியோர் நல்ல படைப்பைக் கொடுப்பதற்காக எவ்வளவு போராடுகிறார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும். நானும் பத்திரிகையாளராக 30 ஆண்டுகளாகப் பணியாற்றியிருக்கிறேன்; படங்களைத் தயாரித்தும் இயக்கியும் இருக்கிறேன். ஒரு படம் பாதியில் நின்றுவிட்டால் தயாரிப்பாளருக்கு ஏற்படும் வலியும், ஒரு நல்ல படைப்பை மக்களிடம் கொண்டு சேர்க்க இயக்குநர் படும் வேதனையும் எனக்குத் தெரியும். இந்தப் படத்தில் கஸ்தூரி ராஜா தனது கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்திருக்கும் விதம் மிகவும் பாராட்டுக்குரியது. இயக்குநரின் பார்வையைப் புரிந்துகொண்டு அந்தக் கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார்.

“தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான சிறு முதலீட்டுத் திரைப்படங்கள் வெளியாகின்றன. பல தயாரிப்பாளர்கள் காணாமல் போகிறார்கள்; பல இயக்குநர்களுக்கும் நடிகர்களுக்கும் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இத்தகைய சூழலில் நல்ல படைப்புகளை உருவாக்குபவர்களை அவர்கள் இருக்கும்போதே பாராட்ட வேண்டும். நல்ல திரைப்படங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்தால்தான் தொடர்ந்து இதுபோன்ற படங்களை உருவாக்கும் உற்சாகம் அவர்களுக்குக் கிடைக்கும். கமர்ஷியல் வெற்றி முக்கியம்தான்; அதே நேரத்தில் உணர்வுபூர்வமான, அழகான படைப்புகளையும் நாம் கொண்டாட வேண்டும்.

“இஸ்லாமியர்களைப் பற்றிய கதையாக இருப்பதால் மட்டும் ஒரு திரைப்படத்தை வேறுபடுத்திப் பார்க்க வேண்டிய அவசியம் என்ன? இந்து மதம், கிறிஸ்தவ மதம் சார்ந்து பல திரைப்படங்கள் வருகின்றன. இஸ்லாமியர்களின் வாழ்க்கையைப் பேசும் படங்களுக்கும் அதே அளவிலான கவனமும் ஆதரவும் கிடைக்க வேண்டும். ‘ஹபீபி’ போன்ற திரைப்படங்களைத் திரையுலகினர் பெரிய அளவில் கொண்டாட வேண்டும். இந்தப் படத்தில் உழைத்த இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

தயாரிப்பாளர் கோவை இப்ராஹிம் பேசியதாவது..,

“அனைவருக்கும் வணக்கம். இந்த விழாவில் கலந்துகொண்டுள்ள ‘ஹபீபி’ படக்குழுவினர், இயக்குநர் மீரா கதிரவன், கஸ்தூரி ராஜா சார் மற்றும் அனைவருக்கும் எனது மாலை வணக்கங்கள். கில்ட் உறுப்பினர்களாக இருந்து எங்களுடைய திரைப்படத்தைக் கொண்டாடி, பாராட்டி வரும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

“அதிக நேரம் பேச விரும்பவில்லை. இங்கு பல பெரியவர்கள் பேச இருப்பதால் சுருக்கமாக ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். சிறிய படங்கள் மட்டுமல்ல, பெரிய படங்களையும் தரமான படைப்புகளாக நம்மால் வழங்க முடியும். எங்களைப் போன்ற தயாரிப்பாளர்கள் தொடர்ந்து திரைப்படங்களை உருவாக்குவதற்கு இதுபோன்ற பாராட்டு விழாக்கள் நிச்சயமாகத் தேவைப்படுகின்றன. இத்தகைய அங்கீகாரம் எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. விரைவில் எங்களுடைய அடுத்த திரைப்படத்தின் அறிவிப்புடன் உங்களைச் சந்திக்கிறோம். மற்ற விஷயங்களைப் படத்தின் இயக்குநரும் குழுவினரும் விரிவாகப் பேசுவார்கள். நன்றி, வணக்கம்” என்றார்.

தயாரிப்பாளர் சாகுல் ஹமீத் பேசியதாவது..,

“நேசம் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் இதற்கு முன்பு பத்துக்கும் மேற்பட்ட சிறந்த திரைப்படங்களைக் கொண்டாடியிருக்கிறோம். அந்த வரிசையில் ‘டூலெட்’, ‘பரியேறும் பெருமாள்’ ।மற்றும் “கொட்டுக்காளி” உள்ளிட்ட படங்களும், இடம்பெற்றன. இதுபோன்ற நிகழ்வுகளை நடத்துவதன் நோக்கம், நல்ல திரைப்படங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான். இன்று தமிழ் சினிமா ஒரு சவாலான சூழலைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. மலையாள சினிமா நமக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருக்கிறது. மொழி தெரியாதவர்களும் ஓடிடி தளங்கள் வழியாகப் படங்களைப் பார்த்து, அவற்றில் சொல்லப்படும் கருத்துகளைப் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்கிறார்கள். சிறிய பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படங்கள்கூட மிகச் சிறந்த கருத்துகளை உலகளவில் கொண்டு சேர்க்க முடியும் என்பதற்கு அது சான்றாக இருக்கிறது.

“எங்களுடைய முதல் திரைப்படம் உலகளவில் பல விருதுகளைப் பெற்றது. அதன் மூலம் கேன்ஸ் திரைப்பட விழாவிலிருந்தும் அழைப்பு கிடைத்தது. அந்த அனுபவம் எனக்குப் புதிய உலகத்தை அறிமுகப்படுத்தியது. ஆனால், ‘ஹபீபி’ சாதாரணமான படைப்பு அல்ல. இது இயக்குநர் மீரா கதிரவனின் நீண்டகாலக் கனவு. கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக அவர் இந்தப் படத்திற்காகக் கடுமையாக உழைத்திருக்கிறார். அவருடன் பயணித்த அனுபவத்தில், இந்தப் படைப்பை உருவாக்குவதற்காக அவர் எவ்வளவு உழைத்தார் என்பதை நேரில் பார்த்திருக்கிறேன். அவர் எப்போது ஓய்வெடுக்கிறார் என்றே கேட்கும் அளவுக்கு அவரது உழைப்பு இருந்தது. அத்தகைய அர்ப்பணிப்பின் விளைவாக இன்று ஒரு சிறந்த படைப்பை நம்மால் கொண்டாட முடிகிறது. இந்தப் படம் உலகின் பல இடங்களில் திரையிடப்பட்டிருப்பது சாதாரணமான விஷயமல்ல. ரோமியோ பிக்சர்ஸ், ஜி.கே.எஸ். பிரதர்ஸ் உள்ளிட்ட தயாரிப்பு நிறுவனங்களின் பங்களிப்பும் இந்தப் பயணத்தில் முக்கியமானது. கில்ட் அமைப்பு இந்தப் படத்தைக் கொண்டாடியிருப்பதை எனது வாழ்நாளில் கிடைத்த அற்புதமான தருணங்களில் ஒன்றாகப் பார்க்கிறேன்.

“தமிழ் சினிமாவில் குறைந்த பட்ஜெட் படங்களுக்குத் திரையரங்குகள் கிடைப்பதே மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. எங்களுடைய படம் நான்கு வாரங்கள் ஓடியது. ஆனால், அது இன்னும் பல இடங்களைச் சென்றடைய வேண்டியிருந்தது. அருப்புக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து படத்தைத் திரையிடக் கேட்டு அழைப்புகள் வந்தன. ஆனால், அடுத்தடுத்த வாரங்களில் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் வெளியானதால், அந்தப் பகுதிகளில் எங்களால் படத்தைக் கொண்டு சேர்க்க முடியவில்லை. ஒரு படம் பெரிய திரையரங்குகளில் வெற்றிபெற்று, அடுத்தடுத்த மையங்களுக்குச் செல்லும் நேரத்தில் புதிய பெரிய படங்கள் வெளியாவதால், சிறிய படங்களுக்கான வாய்ப்புகள் குறைந்துவிடுகின்றன. இதற்குத் தீர்வு காண வேண்டிய பொறுப்பு திரைப்படத் துறையின் சங்கங்களுக்கு இருக்கிறது. குறைந்த பட்ஜெட் திரைப்படங்களுக்கும் உரிய திரையரங்குகளும் வெளியீட்டு வாய்ப்புகளும் கிடைப்பதை உறுதிசெய்வதே முக்கியமான பணியாக இருக்க வேண்டும். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படுமா என்ற கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன். ‘ஹபீபி’ படத்தைக் கொண்டாட இந்த வாய்ப்பை ஏற்படுத்திய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. வணக்கம்” என்றார்.

நடிகர் கஸ்தூரி ராஜா பேசியதாவது..,

“‘ஹபீபி’ படத்துக்காகக் கிட்டத்தட்ட 40, 50 மேடைகளில் பங்கேற்றிருக்கிறோம். பல இடங்களுக்குக் காரிலும், ரயிலிலும், விமானத்திலும் பயணம் செய்திருக்கிறோம். மகிழ்ச்சியையும் வலியையும் அனுபவித்திருக்கிறோம். இன்றுவரை தொடர்ந்து பாராட்டுகள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. கஸ்தூரி ராஜா சிறப்பாக நடித்திருக்கிறார், என்று பலரும் பாராட்டுகிறார்கள். இவை அனைத்தையும் எங்களுக்குத் தாய்ப்பால் போல ஊட்டி, எங்களை வழிநடத்தியவர் இயக்குநர் மீரா கதிரவன். ஒரு இயக்குநரின் பார்வையும் வழிகாட்டுதலும் இல்லாமல் ஒரு படத்தில் எதையும் சாதிக்க முடியாது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். கிட்டத்தட்ட 48 ஆண்டுகளாகச் சினிமாவில் இருக்கிறேன்; 25 படங்களை இயக்கியிருக்கிறேன். அந்த அனுபவத்தில் சொல்கிறேன், ஒரு படத்தின் ஒவ்வொரு அசைவிலும் இயக்குநரின் பங்களிப்புதான் முக்கியமானது.

“இந்தப் படத்தில் நடித்த அனுபவம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியானது. படப்பிடிப்பில் யாருக்கும் ஏற்றத்தாழ்வு காட்டப்படவில்லை; அனைவரும் சாதாரண மனிதர்களாகவே நடத்தப்பட்டோம். எனக்கு ஒரு விஷயத்தில் ஈகோ இருந்தது உண்மைதான். இத்தனை ஆண்டுகள் சினிமாவில் இருந்திருக்கிறேன்; உதவி இயக்குநராக இருந்து இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் வளர்ந்திருக்கிறேன். பல புதிய முயற்சிகளை அறிமுகப்படுத்தியிருக்கிறேன். குடும்பத்தையும் நல்லபடியாகக் கவனித்துவிட்டோம்; இனி நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில் மீரா கதிரவன் என் வீட்டுக்கு வந்தார். நீங்கள் நடிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், எனக்கு நடிப்பதில் ஆர்வம் கிடையாது. திரையிலும் வாழ்க்கையிலும் என்னால் நடிக்க முடியாது; என் மனதில் என்ன தோன்றுகிறதோ, அதை அப்படியே சொல்லிவிடுவேன். அதனால், ‘எனக்கு நடிக்கத் தெரியாது; என்னை நடிக்க வைத்தால் நீங்கள் வருத்தப்படுவீர்கள்’ என்றுகூட அவரிடம் சொன்னேன்.

“ஆனால், அவர் விடாமல் பேசினார். வீட்டில் உள்ளவர்களிடமும் ஆலோசித்தேன். பின்னர் அவர் கொடுத்த திரைக்கதையை இரண்டு, மூன்று நாட்கள் கழித்துத்தான் எடுத்துப் படித்தேன். படிக்கப் படிக்க, இந்த இயக்குநர் கதைக்காக எவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார் என்பது புரிந்தது. கதையில் ஏதோ ஒரு சிறப்பு இருக்கிறது என்று தோன்றியது. இஸ்லாமியர்களின் வாழ்க்கை மற்றும் கோட்பாடுகள் குறித்து எனக்கு முழுமையான புரிதல் இல்லாதபோதிலும், இந்தக் கதையை முயற்சி செய்து பார்க்கலாம் என்று அரைமனதுடன் ஒப்புக்கொண்டேன். ஆனால், அந்த முடிவு இவ்வளவு சிறப்பான அனுபவத்தைத் தரும் என்று எதிர்பார்க்கவில்லை. இன்றுவரை எங்களுக்குள் எந்தவிதமான உரசலும் ஏற்பட்டதில்லை. இந்தப் படத்தை மீரா கதிரவனைத் தவிர வேறு யாருடைய இயக்கத்திலும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அவர் அனைவரையும் சமமாக நடத்தும் விதத்தையும் நேரில் பார்த்திருக்கிறேன். இந்தப் படம் எனக்கு மீண்டும் ‘கஸ்தூரி ராஜா’ என்ற பெயரையும் அடையாளத்தையும் பெற்றுத் தந்திருக்கிறது. இதற்கு முன்பு பலரும் என்னை ‘யூசுப் பாய்’ என்றுதான் அழைத்தார்கள். இப்போது மீண்டும் ‘கஸ்தூரி ராஜா சார்’ என்று அழைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

“நான் நூறு சதவீதத்துக்கும் மேலாக இந்து மதத்தைச் சார்ந்தவன். ஆனால், இந்தப் படத்தில் நடித்ததற்காக என்னை வேறு ஒருவராக மாற்ற வேண்டும் என்று இயக்குநர் எந்தவிதத்திலும் வற்புறுத்தவில்லை. கதையையும் கதாபாத்திரத்தையும் தெளிவாகப் புரியவைத்தால், தேவையான உணர்வுகள் இயல்பாகவே வந்துவிடும் என்பதை இந்தப் படம் உணர்த்தியது. இந்தப் படத்துக்காக உழைத்த தயாரிப்பாளர்கள், கலைஞர்கள், தொழில்நுட்பக் குழுவினர் என அனைவருக்கும் நன்றி. இன்றைய சூழலில் ஒரு படத்தை உருவாக்குவதற்குப் பெரும் துணிச்சல் தேவைப்படுகிறது. இப்படிப்பட்ட படங்களைத் தொடர்ந்து உருவாக்கவும், என்னை மீண்டும் மீண்டும் நடிக்க அழைக்கவும் அனைவரும் முன்வர வேண்டும். இந்தப் படத்தின் வெற்றிக்கும் பாராட்டுகளுக்கும் காரணமான இயக்குநர் மீரா கதிரவன் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்”.

இயக்குநர் மீரா கதிரவன் பேசியதாவது:

“‘ஹபீபி’ திரைப்படத்துக்கு இதுவரை 50-க்கும் மேற்பட்ட பாராட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. தொடர்ந்து பல இடங்களில் இப்படத்துக்குப் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. இயக்குநர் ராம் சார், படம் வெளியான பிறகு குறைந்தது மூன்று மாதங்களுக்குப் பாராட்டுகளைப் பெற்றுக்கொண்டிருப்பீர்கள் என்று சொன்னார். அவர் எந்த முகூர்த்தத்தில் சொன்னாரோ தெரியவில்லை; இன்றுவரை உலகம் முழுவதும் இப்படத்துக்குப் பாராட்டுகள் வந்துகொண்டிருக்கின்றன. இதற்குக் காரணம், உங்கள் அனைவரின் அன்புதான். இதற்கு முன்பு எழுத்தாளர்கள், மகளிர் அமைப்புகள், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் சாதி, மதங்களைக் கடந்து செயல்படும் அமைப்புகள் இப்படத்தைப் பாராட்டியுள்ளன. இப்போது தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து இப்படத்தைப் பாராட்டுவது எனக்கு மிகவும் சிறப்பான தருணம். தயாரிப்பாளர்கள் இல்லையென்றால் என்னுடைய கதை வெறும் காகிதத்தில்தான் இருந்திருக்கும். தென்னிந்திய திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் இணைந்து ‘ஹபீபி’ படத்தைப் பாராட்டுவது தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான நிகழ்வாக நான் பார்க்கிறேன்.

“என்னுடைய முதல் படத்துக்குப் பிறகு, இரண்டாவது படத்தை நானே தயாரிக்கும் அளவுக்கு ஒரு சூழல் உருவானது. ஆனால் ஒரு படத்தைத் தயாரித்த பிறகுதான் தயாரிப்பாளரின் முக்கியத்துவம் முழுமையாகப் புரிந்தது. தயாரிப்பாளர்கள் அளிக்கும் இந்த ஊக்கமும் அங்கீகாரமும் தொடர்ந்து நல்ல படங்களை உருவாக்க வேண்டும் என்ற நம்பிக்கையைத் தருகிறது. ‘ஹபீபி’ படத்தில் நடித்த கஸ்தூரி ராஜா சார் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் மிகப்பெரிய ஒத்துழைப்பைக் கொடுத்தார்கள். தனஸ்ரீ, மாளவிகா மனோஜ் உள்ளிட்ட பலருக்கு இந்தப் படம் முக்கியமான வாய்ப்பாக அமைந்தது. விஜயகுமார், ஜெயஸ்ரீ, மலர், ரிஸ்வானா, மஷூக் உள்ளிட்ட நடிகர்களும், உதய், மதி உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்களின் பங்களிப்பைச் சிறப்பாக வழங்கியுள்ளனர். இந்தப் படத்துக்காக உழைத்த உதவி இயக்குநர்கள் உட்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

“தமிழ் சினிமாவுக்கு 110 ஆண்டுகால வரலாறு இருக்கிறது. தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் தனித்துவமான மொழியும் வாழ்வியலும் இருக்கின்றன. கொங்கு மக்களின் வாழ்க்கை, கரிசல் நிலத்தின் வாழ்க்கை, வடசென்னையின் வாழ்க்கை எனப் பல்வேறு கதைகள் திரையில் வந்துள்ளன. அதுபோல, இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றினாலும் தமிழையே தாய்மொழியாகக் கொண்டு வாழும் தமிழ் முஸ்லிம்களின் வாழ்க்கையைப் பேசும் திரைப்படம்தான் ‘ஹபீபி’. இத்தகைய கதையை இயக்குவதற்கு நான் ஒரு கருவியாக இருந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். அதற்காக இறைவனுக்கு நன்றி கூறுகிறேன்.

“இந்தப் படத்தின் உருவாக்கத்தில் மிக முக்கியமானவர் வி.எஸ். முஹம்மத் அமீன். அவரை இந்தப் படத்தின் இயக்குநர், எழுத்தாளர் அல்லது தயாரிப்பாளர் என்று மட்டும் குறிப்பிட முடியாது; அவர் இந்தப் படத்தின் சகலகலா வல்லவர். இஸ்லாமிய வாழ்வியலை மையமாகக் கொண்டு ஒரு திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு சுமார் 20 ஆண்டுகளாக இருந்தது. அந்தக் கனவைச் சாத்தியப்படுத்தியவர் அமீன்தான். அவர் இல்லையென்றால் ‘ஹபீபி’ இந்த மேடையை அடைந்திருக்காது. நாங்கள் இருவரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதால், எங்களுக்குள் அந்த வாழ்க்கை அனுபவங்கள் குறித்த நெருக்கமும் புரிதலும் இருந்தன. இந்தப் படத்தை உருவாக்க உதவிய அனைவருக்கும், தொடர்ந்து ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

‘ஹபீபி’ திரைப்படத்தின் கதைக்களம், கலைஞர்களின் பங்களிப்பு மற்றும் தமிழ் முஸ்லிம் மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்த விதம் குறித்துப் பங்கேற்பாளர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துகளுடன் நிகழ்ச்சி நடைபெற்றது. படக்குழுவினரின் முயற்சியைப் பாராட்டும் விதமாக அமைந்த இந்நிகழ்ச்சியில் திரையுலகினர் பலரும் கலந்துகொண்டனர்.

*ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்...
12/10/2026

*ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!*

சென்னை தியாகராயா நகரில் உள்ள அகரம் ஃபவுண்டேஷன் அலுவலகத்தில் ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் ப்ளஸ்-டூ முடித்து கல்லூரி சேர்ந்திருக்கும் 25 மாணவ, மாணவிகளுக்கு நிதியுதவியும், மூத்த ஓவியர் ஒருவருக்கு நிதியும், விருதும், விளிம்புநிலை மக்களின் கல்வி மேம்பாட்டிற்காகத் தன்னலமற்று உழைத்து வரும் மூன்று முக்கிய அமைப்புகளுக்கு நிதியுதவியும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன.

1979-ஆம் ஆண்டு திரைக்கலைஞர் திரு. சிவகுமார் அவர்களின் 100-வது திரைப்படமான ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்திற்காகப் பெற்ற முழுச் சம்பளமான ரூ.25,000-ஐ வங்கியில் முதலீடு செய்து, அதன் வட்டித் தொகையைக் கொண்டு மாணவர்களுக்கு உதவும் நோக்கில் இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்ட நிலையில், பின்னர் சிவகுமார் அவர்களின் சொந்த நிதியில் இருந்து உதவித்தொகைகள் வழங்கப்பட்டன. 2006-ஆம் ஆண்டு முதல் 'அகரம் ஃபவுண்டேஷன்' இந்த அறக்கட்டளையின் பொறுப்பை முழுமையாக ஏற்று, ஆண்டுதோறும் உதவித்தொகைகளையும் விருதுகளையும் வழங்கி வருகிறது.

ஓவியர் ஜீவானந்தனுக்கு விருது:
கல்வியில் சிறந்த மாணவர்களை ஊக்குவிப்பதோடு, ஓவியத் துறையில் நீண்ட காலம் சிறப்பாகப் பங்காற்றிய மூத்த கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் பரிசுத்தொகையுடன் சிவகுமார் கல்வி அறக்கட்டளை விருது வழங்கி வருகிறது. இதுவரை ஓவியர்கள் அம்புலிமாமா சங்கர், ராமு, ஜெயராஜ், மாயா, மணியம் செல்வன் ஆகியோர் பெற்றுள்ள நிலையில், இந்த 47-வது ஆண்டு விழாவில் சிறந்த ஓவியரும் கலைத்துறையின் குறிப்பிடத்தக்க ஆளுமையுமான ஓவியர் ஜீவானந்தன் அவர்களுக்கு ரூ.1 லட்சம் பொற்கிழியுடன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

25 மாணவ, மாணவியருக்குக் கல்வி ஊக்கத்தொகை!
பொருளாதாரச் சவால்களையும் பல்வேறு தடைகளையும் கடந்து, பிளஸ் டூ பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று கல்லூரியில் சேர்ந்துள்ள 25 மாணவ, மாணவியர் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10,000 வீதம் மொத்தம் ரூ.2,50,000 கல்வி ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது. மாணவர்களின் சாதனையைப் பாராட்டி, அவர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

தொடர்ந்து, விளிம்புநிலை மாணவர்களின் கல்விக்காகச் செயல்படும் கீழ்க்கண்ட மூன்று அமைப்புகளின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டி, அகரம் ஃபவுண்டேஷன் சார்பில் நிதியுதவிகள் வழங்கப்பட்டன :

1. திண்டிவனம் ‘தாய் தமிழ்ப் பள்ளிக்கு’ ரூ. 6,28,000/- நிதியுதவி:
திண்டிவனம் ரோசனை பகுதியில் 'தாய்மொழிக் கல்வியே சிறந்த கல்விமுறை' என்ற உயரிய சிந்தனையோடு கடந்த 25 ஆண்டுகளாக இயங்கி வரும் பள்ளி 'தாய் தமிழ் தொடக்கப்பள்ளி'. இப்பள்ளி மாணவர்களுக்கு இலவசக் கல்வியோடு மதிய உணவுத் திட்டத்தையும் வழங்கி வருகிறது. இப்பள்ளியின் சீரிய பணிகளுக்குக் கடந்த 16 ஆண்டுகளாக அகரம் துணைநின்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக, 2026 - 2027 கல்வியாண்டில் அங்கு பணியாற்றும் ஆசிரியர்களின் மாதச் சம்பளப் பங்களிப்பிற்காக ரூ. 6,28,000/- வழங்குவதற்கான உறுதியேற்பு கடிதம் தாய் தமிழ்ப் பள்ளி நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது.

2. ஈரோடு ‘சுடர்’ அமைப்புக்கு ரூ. 2,00,000/- நிதியுதவி:
ஈரோடு மாவட்டப் பழங்குடி குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்காக கடந்த 20 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் அமைப்பு 'சுடர்'. சத்தியமங்கலம் மற்றும் பர்கூர் மலைப்பகுதிகளில் பள்ளி இடைநின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு வரவழைக்கவும், கற்றல் இடைவெளியைப் போக்கவும் 25 மாலை நேரப் படிப்பகங்களை நடத்தி வருகிறார்கள். இந்த நற்பணிகளுக்குத் தேவைப்படும் நிதி ஆதாரத்தின் சிறு பகுதியாக ரூ. 2,00,000/-க்கான காசோலை சுடர் அமைப்பின் நிறுவனர் திரு. நடராஜன் அவர்களிடம் வழங்கப்பட்டது.

3. ‘வாழை’ அமைப்புக்கு ரூ. 3,00,000/- நிதியுதவி:
சென்னை மாநிலக் கல்லூரி முன்னாள் மாணவர்களால் தொடங்கப்பட்டு, தருமபுரி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டும் (Mentoring) பணிகளை மேற்கொண்டு வந்த 'வாழை' அமைப்பு. தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் அய்யூர் வனப்பகுதியில் அமைந்துள்ள 7 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமித்து கல்வி மேம்பாட்டு பணிகளை முன்னெடுத்து வருகிறார்கள். இவர்களின் தன்னார்வப் பணிகளுக்கு உதவும் வகையில், மாதந்தோறும் ரூ.25,000/- வீதம் இந்த ஆண்டிற்கான பங்களிப்பாக ரூ. 3,00,000/- வழங்குவதற்கான உறுதியேற்பு கடிதம் வாழை அமைப்பின் தன்னார்வலர்களிடம் வழங்கப்பட்டது.

விழாவில் மாணவர்களைப் பாராட்டி, திரைக்கலைஞர் சிவகுமார் அவர்கள் பேசியதாவது:
மாணவ - மாணவிகளுக்கு நான் ஒன்னு சொல்லிக்கிற ஒரே ஒரு விஷயம் — கல்வியும் ஒழுக்கமும் இருந்தால், உலகத்திலே எந்த மூலையில் போய் வேண்டும் என்றாலும் நீங்கள் சாதிக்க முடியும். அந்த ஒன்றுதான் அடிப்படை. நீங்கள் ஏழைப் பெற்றோருக்கு பிறந்தீர்களா, பெற்றோர் இழந்த குழந்தைகளா, கிராமத்தில் பிறந்தீர்களா — எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். உங்களுக்குக் கல்வியும் ஒழுக்கமும் இருந்தால், உலகத்திலே எந்த மூலையிலும் போய் சாதிக்க முடியும் என்பதை நீங்கள் மனதில் புரிந்து கொள்ளுங்கள். அதற்கு ஒரு சின்ன, மிகச் சின்ன உதாரணம் நான்.

நாங்க படிச்ச காலத்துல பள்ளிக்கூடம் என்று ஒன்று கிடையாது, பள்ளிக்கூட கட்டிடம் கிடையாது, வாத்தியார்கள் முறையா கிடையாது. எல்லாம் பிரைவேட் பள்ளிக்கூடம், பிரைவேட் வாத்தியாரு. 'கலங்கள்' என்பது எங்க கிராமத்துல இருந்து கரெக்டா நாலு ஃபர்லாங் தூரத்துல இருக்குது. அதுல ஜி.டி. நாயுடு பிறந்த ஊரு. அதுல ஊருக்கு நடுவுல ஒரு மொட்டை மண்டபம், 30 அடிக்கு 60 அடி நீளத்துல ஒரு மண்டபம். அந்த மண்டபத்துல தரையெல்லாம் தூசி படிஞ்சுட்டு இருக்கும். நாங்க ஊர்ல இருந்து வரும்போது வழியில மாடு சாணம் போட்டுருக்கும். அந்த சாணத்தை எல்லாம் நாங்க எடுத்துட்டு வந்து, கூடையில் போட்டு, ஒரு சட்டிக்குள்ள போட்டு நல்லா கரைச்சு, அந்த சாணத்துல நாங்க தான் தரையில மெழுகி குடுப்போம், இல்லைன்னா உள்ள புழுதி பறக்கும். அதை மெழுகி விட்டு, அதுலதான் நான் உட்கார்ந்து படிச்சோம். சைடுல யார் வேடிக்கை பார்ப்பாங்கன்னு மூங்கில் தட்டி அடிச்சு, ஒரு மூணு மூங்கில் தட்டி சுத்தியும் மறைச்சிருப்போம்.

எங்க வாத்தியார் கல்யாணசுவாமி நாயுடு. அவர் 1940-களிலேயே ஸ்டேட் மேத்ஸ்ல ஸ்டேட் செகண்ட் வாங்கினவர். 1940-கள்ல மேத்ஸ்ல மிகப்பெரிய ஆளு. அவரு பிரைவேட் பள்ளிக்கூடம் வச்சிருக்காரு. ஒன்னாம் கிளாஸுக்கு 1 ரூபாய், ரெண்டாம் கிளாஸுக்கு 2 ரூபாய், மூணாம் கிளாஸுக்கு 3 ரூபாய், நாலாம் கிளாஸுக்கு 4 ரூபாய்—இதான் மாச ஃபீஸ். நான் ரெண்டாம் கிளாஸ் படிச்சேன், எங்க அக்கா மூணாம் கிளாஸ் போனாங்க. நாங்க படிச்ச காலத்துல ஒரு சவரன் தங்கம் வந்து 12 ரூபாய். அப்போ அக்காவுக்கு 3 ரூபாய், எனக்கு 2 ரூபாய்னா 5 ரூபாய், கிட்டத்தட்ட பாதி சவரன் விலை. நான் பிறந்து 10 மாச குழந்தையா இருக்கும்போது எங்க அப்பா இறந்துட்டார். காலம் பூரா எங்க அம்மா வெள்ளைச் சேலையில தான் நான் பார்த்திருக்கேன். நம்ம காடு கரையில பாடுபட்டு, ஒரு காய்ஞ்சு போன பூமியை எங்க அப்பா விட்டுட்டு போயிருந்தாரு. அதுல பாடுபட்டு தான் எங்க அம்மா படிக்க வச்சாங்க. அதனால 5 ரூபாய் மாசத்துக்கு செலவு பண்ண முடியாதுனு எங்க அக்காவை மூணாம் கிளாஸோட நிறுத்திட்டாங்க.

கிராமப்புறங்களில் ஏழ்மையான குடும்பங்களில் பிறந்து வளர்ந்து, கல்வி கற்பதற்காக மாணவர்கள் எவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். கல்வி ஒருவருடைய வாழ்க்கைத் தரத்தை எந்த அளவுக்கு உயர்த்த முடியும் என்பதையும் நான் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். என்னைப் போலவே ஏழ்மையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்து, நன்றாகப் படித்து முன்னேறத் துடிக்கும் மாணவர்களுக்கு என்னால் இயன்ற உதவியைச் செய்வதில் எனக்கு மிகுந்த மனநிறைவு கிடைக்கிறது. தடைகளைத் தாண்டி அவர்கள் பெறும் ஒவ்வொரு வெற்றியும் அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு புதிய தொடக்கமாக அமையும். இந்த பயணத்தில் உங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி மட்டுமே. இனி கடக்க வேண்டிய பாதை இன்னும் நீண்டது. மாணவர்கள் தங்களுடைய இலக்கில் உறுதியாக இருந்து, ஒழுக்கத்துடன், கவனம் சிதறாமல் தொடர்ந்து உழைத்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். கல்வி தரும் வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தி, தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும். கவனம் சிதறாமல் தொடர்ந்து உழைத்து சமூகத்திற்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.

நிகழ்வில் திரைக்கலைஞர் சூர்யா பேசியதாவது, இது ஒரு குடும்ப நிகழ்ச்சி. இது வந்து 47 வயசுன்னா வந்து வீட்ல எப்படி ஒரு பிறந்தநாள் நடக்குமோ, அந்த மாதிரி ஒரு ஒரு முறையும் இது குடும்ப நிகழ்ச்சியா மட்டுமே தான் பார்க்கிறோம். ஒரு ஒரு முறையும் இந்த குடும்பம் இன்னும் விரிவடைந்துகொண்டே தான் இருக்குது. இங்க வந்திருக்கிற, இன்னைக்கு வந்திருக்கிற மாணவ - மாணவிகள் அவங்களோட சாதனைகளைச் சொல்லி, ஒரு ஒரு வாட்டியும் பரிசு எடுத்துட்டு போகும்போது, எவ்வளவு விஷயங்கள் தாண்டி வந்திருக்காங்க, எவ்வளவு விஷயங்கள் கடந்து வந்திருக்காங்க அப்படின்னு பிரம்மிப்பா பார்க்கிறேன். அப்பாவோட வழிகாட்டுதல் தான். இவ்வளவு வருஷத்துக்கு அப்புறமா வந்து இதை எடுத்துட்டு போக முடியுது. இது ஒரு உணர்வு. இப்படித்தான் நாங்க வளர்க்கப்பட்டிருக்கோம். இப்படித்தான் வந்து எங்களை எல்லா விஷயத்தையும் இங்க கண் முன்னாடி வந்து நிப்பாட்டி இருக்காங்க.

அகரம் வந்து 20 வருஷம் கடந்தாச்சு. கிட்டத்தட்ட முதல் தலைமுறை மாணவர்கள், மாணவிகளோட குடும்பத்துல ஒரு 7,000 பேரை எங்களால வந்து தொட முடிஞ்சிருக்கு. இன்னும் இன்னும் இன்னும் பல விஷயங்கள் வந்து அகரம் மூலமா நடந்துட்டே இருக்குது. இன்னும் வந்து அதோட எடுத்துக்கிட்ட நோக்கம் வந்து குறையாம இருந்திருக்குது. இன்னும் அது இன்னும் சிறப்பா நடந்துட்டு இருக்கு அப்படின்னா, அதுக்கு முக்கியமா வந்து கல்யாணி ஐயா மாதிரி முக்கியமானவங்க வந்து நம்ம கூடவே கை கோர்த்து நின்னுட்டு இருக்காங்க. சமூகப் பார்வைனா என்ன? யாருக்காக பண்ண போறோம்? எதுக்காக பண்ண போறோம்? அப்படிங்கிற மறுபடியும் மறுபடியும் அவங்க வச்ச கேள்விகள், நம்ம கூட இருக்கிற வழிகாட்டிகளும் சரி, மாணவர்களும் சரி... இப்ப அகரமை முன்னெடுத்துட்டு போற முன்னாள் மாணவர்கள் அத்தனை பேருக்கும் அந்த பார்வையை சரியா பாத்துக்கிட்டது வந்து இவங்கள மாதிரி நிறைய வழிகாட்டிகள் தான். அதனாலயே எங்க ஆரம்பிச்சமோ, அங்க மட்டுமே அதை மட்டுமே பண்ணிராம, இன்னும் யார் யாருக்குத் தேவை? இன்னும் யார் யார் தேவைப்படும் குழந்தைகள்? இன்னும் யாரை எல்லாம் கை பிடிச்சு கூட்டிட்டு வரணும் அப்படின்னு தேடும்போது வந்து, நிறைய இஸ்லாமிய சமூகத்திலும் சரி, நிறைய மாணவிகள் நிறைய கல்வி இடைநிற்றல் எல்லாம் இருக்காங்க அப்படிங்கிறது தெரிய வந்துச்சு. அங்க போய் சில வேலைகள் பண்ண முடிஞ்சுச்சு. மலைக் கிராமத்துல போய் வேலைகள் பண்ண முடிஞ்சது. கடலோர பகுதிகளில் வேலைகள் பண்ண முடிஞ்சது. அதுமாதிரி தேவைகள் அப்படின்னு பார்த்தா இன்னும் ஏராளமா ஏராளமா இருக்கு.

2006-ல மாணவர் பத்திரிக்கையாளரா அறிமுகம் ஆன ஞானவேல் அவர்கள் கேட்ட அந்த ஒரே கேள்விதான்: "முதல் தலைமுறை மாணவர்கள் இன்னும் இருக்காங்க. 12த் ஸ்டாண்டர்ட் எக்ஸாமை ஒரு மலைக் கிராமத்துல இருக்கிற ஒரு மாணவியும் எழுதுறாங்க, ஒரு மீனவ கிராமத்துல இருந்து ஒரு மாணவி எழுதுறாங்க. அங்க பல பகுதிகளில் ஆசிரியரே கிடையாது. ஆனா எல்லாரும் ஒரே பரீட்சைதான் எழுதுறாங்க. அவங்களை நீங்க பார்க்கிறீங்களா? அவங்க இருக்காங்கன்னு தெரியுமா? அதுலயும் முதல் தலைமுறை மாணவர்கள் இருக்காங்கன்னு தெரியுமா?"ன்னு ஒரு கேள்வி கேட்டாரு. ஏன் எங்க அப்பா வந்து அப்போ 60-ல 50-ல எல்லாம் வந்து மெட்ராஸ்க்கு கிளம்பி வந்தாங்க. நீங்க சொல்றது எல்லாம் வந்து 50 வருஷத்துக்கு முன்னாடிங்க. இப்ப எல்லாம் எங்க முதல் தலைமுறை மாணவர்கள் இருக்காங்க? அப்படின்னு சாதாரணமா பேசினோம். "இல்லைணா, முதல் தலைமுறை மாணவர்கள் இருக்காங்கணா" அப்படின்னு 2006-ல சொன்னாரு. இப்ப 2026. இப்போதும் முதல் தலைமுறை மாணவர்கள் வந்து படிச்சு வெளியில வந்துட்டு இருக்காங்க. அகரம் அவங்களை தேடி போயி, அவங்களை வெளியில கொண்டு வந்து, யார் யாருக்கு உதவி தேவைப்படுதோ அவங்க கேட்கக் கூட வேண்டாம், அகரம் அங்க போய் அவங்களை வெளியில கூட்டிட்டு வந்து, அவங்களுக்கு வந்து இந்த உலகத்தை, இந்த வெளிச்சத்தைக் காமிக்குதுன்னு நினைக்கும்போது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதுக்கு அத்தனை பேருக்கும் நான் நன்றியை சொல்லிக்கிறேன்.

சினிமாலயே வந்து கிட்டத்தட்ட இப்போ 28, 29 வருஷம் ஆகப்போகுதுன்னு சொல்றாங்க. சினிமால இருந்து நான் கத்துக்கிட்ட விஷயத்தை உங்களுக்கு சொல்லணும் பார்க்கிறேன். சினிமால வந்து 'ரீடேக்ஸ்' (Retakes) அப்படின்னு சொல்லுவாங்க. ஒரு காட்சி வந்து ஒரே ஷாட்ல முடியறது கிடையாது. சில டைம் அஞ்சு டேக், ஆறு டேக் ஆகும். ஷாட் நல்லா வரணும் அப்படிங்கிறதுக்காக 18, 30 வாட்டி கூட 'ரீடேக்ஸ்' போவோம். ஒரு ஒரு வாட்டியும் அது தப்பாகும்போது வந்து டைரக்டர் வந்து "நீ ஃபெயில்" அப்படின்னு சொல்ல மாட்டாரு. "ஒன் மோர்" அப்படிம்பாரு. நான் டைரக்டரை வந்து வாழ்க்கையா பார்க்கிறேன். வாழ்க்கை எப்பவுமே உங்களை ஃபெயில்னு சொல்றது கிடையாது. நீங்க அப்படி நினைச்சுக்கலாம், ஆனா வாழ்க்கை அப்படி கிடையாது. நீங்க எப்பவுமே வாழ்க்கைக்கிட்ட "இன்னொரு வாட்டி பண்ண போறேன், ஒன் மோர்"னு சொல்லுங்க. "இன்னொரு வாட்டி பண்ண முடியும்"னு சொல்லுங்க. அது உங்களோட மார்க்கா இருக்கலாம், இல்லாட்டி காலேஜ்ல சேர்ற ஒரு சீட்டா இருக்கலாம், இல்லாட்டி நீங்க போற முதல் வேலையா இருக்கலாம். உங்களுக்கு திருப்தியா இல்லாட்டி அதுவே கடைசி கிடையாது, அதுவே முடிவு கிடையாது. நீங்க சொல்ல வேண்டிய ஒரே விஷயம் "ஒன் மோர்". இன்னொரு வாட்டி அதை சரி பண்ண முடியும், இன்னொரு வாட்டி இன்னொரு சான்ஸ் எடுத்துக்க முடியும், அதை இன்னும் மேம்படுத்த முடியும். So, there is always "one more" அப்படிங்கறதை வந்து ஞாபகம் வச்சுக்கோங்க. எதுவுமே முடிவு கிடையாது அப்படிங்கிறதை தயவுசெஞ்சு மறந்துடாதீங்கன்னு சொல்லுவேன்.

இன்னொன்னு ரிஹர்சல்ஸ் (Rehearsals). நீங்க ஒரு ரெண்டரை மணி நேரம் படம் பார்த்துடுறீங்க, ஆனா கைதட்டலே வாங்காத பல வாட்டி வந்து அந்த விஷயத்தை நாங்க வந்து ரிஹர்ஸ் பண்ணிருப்போம். பல வாட்டி ரிஹர்சல் போயிட்டே இருப்போம், அதுக்கெல்லாம் கைதட்டல் எல்லாம் கிடையாது. சோ, அதுதான் வந்து உங்களை உருவாக்குறதுன்னு நான் சொல்லுவேன். அந்த ரிஹர்சல்ஸ் ரொம்ப ரொம்ப முக்கியம். நமக்கு என்ன ரொம்ப பிடிக்குமோ அதுக்கு முழு மனசோட, முழுசா சரண்டர் ஆகி பண்ணிட்டே இருந்தா என்ன முடியாதோ அதை நாம பண்ண முடியும். நீங்க எடுத்த உடனே வந்து ஒரு ஒரு சின்ன கலையோட, ஒரு ஸ்கில்லோட வந்து வரணும் அப்படிங்கிறது அவசியம் கிடையாது. அது வந்து ஒரு 'கன்சிஸ்டன்சி' (Consistency) அப்படின்னு சொல்லுவாங்க. திரும்ப திரும்ப திரும்ப திரும்ப ஒரு விஷயத்தை பண்ணா அதுல நம்ம வந்து மேம்பட முடியும், அதுல முதன்மையா வர முடியும். அது வந்து ஒரு கோடிங்கா (Coding) இருக்கலாம், இல்லாட்டி டிராயிங்கா (Drawing) இருக்கலாம், அல்லது ஓட்டப் பயிற்சியா இருக்கலாம், வேறு எதுவா வேணாலும் இருக்கலாம். கன்சிஸ்டன்சி திரும்ப திரும்ப திரும்ப அதை ரிஹர்சல்ஸ் பண்ணும்போது அதுதான் நம்ம உருவாகுற இடம் அப்படின்னு நான் சொல்லுவேன். எல்லாத்துக்குமே ஒரு முதல் படிக்குன்னு ஒன்னு இருக்குது. நான் சினிமாக்கு வரும்போது நடிக்கவெல்லாம் தெரியாது, எதுவுமே தெரியாது. திரும்ப திரும்ப பண்ண ரிஹர்சல்ஸ்தான் இங்க 29 வருஷத்துக்கு அப்புறமா நிக்க வச்சிருக்கு. என்னால வர முடியும்னா நீங்க எதுல எல்லாம் ஆசைப்படுறீங்களோ அது எல்லாத்துலயும் உங்களால வர முடியும்.

அப்புறம் 'கிரெடிட்ஸ்'னு (Credits)... படம் முடிஞ்சதுக்கு அப்புறமா ஒரு கிரெடிட்ஸ்னு வந்து எவ்வளவு பேர் அந்த படத்துக்காக வேலை செஞ்சிருக்காங்க அப்படிங்கிறது அவங்களோட பேரோட வரும். ஒரு ஹீரோங்கிறது தனியா நான் அப்படியே நடந்து அப்படியே வெளியில வந்துறது இல்லை. அவ்வளவு உதவி இயக்குநர்கள் இருப்பாங்க, எழுத்தாளர்கள் இருப்பாங்க, காஸ்ட்யூம்ஸ் இருப்பாங்க, மேக்கப் இருப்பாங்க, டிரைவர்ஸ் இருப்பாங்க, ஆயா இருப்பாங்க, லைட்மேன் இருப்பாங்க. இவங்க எல்லாரோட உழைப்பின் மூலமாதான் வந்து ஒருத்தனால வந்து வெளியில வர முடியுது.

நம்ம ஒரு வாழ்க்கையில மேல வந்துட்டோம் அப்படின்னா வெறும் ரீல்ஸை மட்டும் பார்க்காம, பக்கத்துல லெஃப்ட்ல, ரைட்ல நம்ம கூட யார் இருந்திருக்காங்க? நம்ம இங்க வர்றதுக்கு யார் உதவியா வந்திருக்காங்க? நமக்கு யார் நமக்கு இந்த அடையாளத்தைக் கொடுத்திருக்காங்க அப்படிங்கிற அவங்களை மறந்துட வேண்டாம். அவங்களை தயவுசெஞ்சு ஞாபகம் வச்சுக்கோங்க. அதே மாதிரி ஒரு இடத்துக்கு வந்ததுக்கு அப்புறமா, நம்ம ஒருத்தரையாவது மேல உயர்த்தணும். அவங்களோட கிரெடிட்ல வந்து நம்ம பெயர் இருக்கணும்.

நீங்க இன்ஸ்டாகிராம், அதாவது ரீல்ஸ் (Reels) பார்த்துட்டு இருந்தீங்கன்னா அந்த ரீல்ஸ்ங்கிறது ஒரு கதைதான். அதனால வந்து நம்ம ஒண்ணுமே கத்துக்க போறதே கிடையாது. யாரை ஃபாலோ பண்றோம் அப்படிங்கிறது ரொம்ப முக்கியம். கனவு உலகமா பார்த்துட்டு இருந்தீங்கன்னா, அந்த கனவு உலகத்துலயே தான் நாம இருப்போம். எலான் மாஸ்க் எங்கிருந்து ஆரம்பிச்சாரு? 24 மணி நேரத்துல 23 மணி நேரம் வேலை செய்வாராம். ஒரு மணி நேரம் தான் வந்து தூங்குவாராம். அந்த மாதிரி எங்கிருந்து ஆரம்பிச்சாங்க? ஆரம்பிச்ச பயணம் எங்கிருந்து இங்க வந்தாங்க அப்படிங்கிறதை வந்து வெறும் ரீல்ஸ் மட்டும் பார்க்காம, நிறைய பாட்காஸ்ட் (Podcast) இருக்கும், அவங்களை பத்தின நிறைய ரிசர்ச் வொர்க் இருக்கும், அதெல்லாம் எடுத்துக்கிட்டீங்கன்னா, உங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும். உங்கக்குள்ள இருக்கிற டேலன்ட்டை (Talent) வெளியில எடுத்துட்டு வர்றதுக்கு அவை உதவும்.

சினிமால இருந்து நான் கத்துக்கிட்டது மறுபடியும் 'ரீடேக்'—ஒன் மோர் கேளுங்க, 'ரிஹர்சல்' பண்ணுங்க, 'கிரெடிட்ஸ்'—நம்ம யாருக்காக எதுனால இங்க வந்தோமோ, எதுனால இவ்வளவு தூரம் வந்தோமோ அதை மறந்துட வேண்டாம். So, always ask for one more அண்ட் ஒருத்தரையாவது நாம் மேல உயர்த்தறதுக்கு முயற்சி பண்ணுவோம். வாழ்க்கை ரொம்ப ரொம்ப அழகானது, நம்புங்க. என்ன நினைக்கிறீங்களோ அதுவாவே நாம் ஆக முடியும். ரொம்ப ரொம்ப நன்றி. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள், கலைஞர்கள், மாணவ, மாணவியர், அகரம் ஃபவுண்டேஷன் தன்னார்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Address

Chennai

Telephone

+919566068446

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kolly Nxt posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kolly Nxt:

Shortcuts

Share

Category