19/08/2025
ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை, அதிகாரத் திமிரில், ஆளுங்கட்சி என்ற மமதையில், தவறாகப் பயன்படுத்தும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சங்கம் கடும் கண்டனம்.
எதிர்க்கட்சி தலைவர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் பிரச்சாரம் செய்யும் இடமெல்லாம், ஆளுங்கட்சியினர் ரவுடிகளுடன், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களிடம் வந்து, நாங்கள் சொல்லும்போது, சரியாக கூட்டத்தின் நடுவே சென்று, இடையூறு செய்ய மறுத்தால், ஆம்புலன்ஸை அடித்து நொறுக்கி விடுவோம் என்றும், கொளுத்தி விடுவோம் என்றும் மிரட்டியதால், நாங்களும் இதுவரை ஒரு 18 கூட்டங்களின் நடுவே சென்று எடப்பாடி பழனிசாமியின் பேச்சிற்கு இடையூறு செய்தோம்.
அதிமுக தொண்டர்களும் இதைக் கவனித்தும் விட்டார்கள். இதை எடப்பாடி பழனிசாமியிடம் முறையிட்டும் இருக்கிறார்கள். அவரும் விடுங்கப்பா எனச் சொல்லி இருக்கிறார். மீண்டும் மீண்டும் இதே போல் நாங்கள் மிரட்டப்பட்டு, இடையூறு ஏற்படுத்தியபோது, நேற்று, கையும் களவுமாய் சிக்கிக் கொள்ள நேரிட்டது.
எங்களை, அதிகாரத் திமிரில் அடக்கி, இழிசெயலைச் செய்யச் சொல்லும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கடும் கண்டனத்தை மீண்டுமொருமுறை பதிவு செய்கிறோம்.
இனியாவது உங்கள் அரசியல் அரிப்புக்கு எங்களை வைத்து சொறியும் இழிவானச் செயலைச் செய்யாதீர்கள் எனவும் வலியுறுத்துகிறோம்.
இனியும் மிரட்டினால், தனிப்பட்ட அரசியல் வன்மத்தை, ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை வைத்து தீர்த்துக் கொள்ள முயற்சிக்கும், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக மாநிலம் முழுக்க போராட்டம் வெடிக்கும் என்பதை எச்சரிக்கையாகச் சொல்லிக் கொள்கிறோம்.
தொ. ரவி
தலைவர்,
தமிழ்நாடு ஆம்புலன்ஸ் சங்கம்
பதிவு எண் : DS56374
சென்னை - 600053.