04/02/2025
சேலம் மாவட்டம் எடப்பாடியில் சொத்துக்கு ஆசைப்பட்டு, உயிருடன் இருக்கும் கணவனுக்கு இறப்பு சான்றிதழ் வாங்கிய மனைவி
⚠️விளக்கம் : சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சி தாவாந்தெரு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 50). இவருக்கும், திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியை சேர்ந்த ரேவதி (43) என்பவருக்கும் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. விஜயகுமார் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கரூர் பகுதியில் தனது பெயரில் நிலம் ஒன்றை வாங்கினார். 10 ஆண்டுக்கு முன்பு விஜயகுமார் மலேசிய நாட்டிற்கு சென்று வேலை பார்த்து அதில் கிடைக்கும் வருமானத்தை தனது மனைவிக்கு அனுப்பி வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 6 மாதத்திற்கு முன்பு சொந்த ஊர் திரும்பிய விஜயகுமார் மனைவியிடம் தான் வெளிநாட்டில் வேலை பார்த்து 10 ஆண்டுகளாக அனுப்பிய பணம் குறித்து கேட்டுள்ளார். அப்போது, பணம் அனைத்தும் குழந்தைகளை வளர்ப்பதற்கு செலவாகி விட்டது. கரூரில் உள்ள நிலத்தை விற்று தனக்கு மேலும் பணம் தரும்படி விஜயகுமாரிடம் மனைவி ரேவதி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த விஜயகுமார், மனைவியிடம் கோபித்து கொண்டு ஓசூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தங்கி கடந்த 6 மாதங்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கணவர் பெயரில் உள்ள சொத்தை அபகரிக்க திட்டம் போட்ட ரேவதி, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு எடப்பாடி போலீஸ் நிலையத்தில் தனது கணவர் மாயமாகி விட்டதாக புகார் செய்தார். தொடர்ந்து கடந்த மாதம் ஈரோடு மாவட்டம் பவானி பகுதியில் காவிரி ஆற்றங்கரை ஓரத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்றை பவானி போலீசார் கைப்பற்றி இருப்பதை அறிந்த ரேவதி, அது தனது கணவரது உடல் எனக்கூறி நாடகமாடினார். தொடர்ந்து தனது கணவர் பெயரில் இறப்பு சான்றிதழும் ரேவதி பெற்றுள்ளார். உயிருடன் உள்ள தனது கணவர் பெயரில் வாங்கிய இறப்பு சான்றிதழை வைத்து வாரிசு சான்று பெறுவதற்காக கடந்த சில தினங்களாக ரேவதி எடப்பாடி தாலுகா அலுவலகத்திற்கு வந்து சென்றுள்ளார்.
இதனிடையே இறந்ததாக சான்று அளிக்கப்பட்ட விஜயகுமார் தனது ஆதார் அட்டையை புதுப்பிப்பதற்காக ஓசூரில் இருந்து எடப்பாடி தாலுகா அலுவலகத்திற்கு நேற்று (பிப்.3) வந்துள்ளார். அப்போது தனது மனைவி ரேவதி தனது பெயருக்கு இறப்பு சான்றிதழ் பெற்று இருந்த விவரம் அறிந்து விஜயகுமார் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து எடப்பாடி தாசில்தார் வைத்தியலிங்கத்திடம் நேரில் சென்று அவர் முறையிட்டார். இதையடுத்து வருவாய்த்துறையினர் ரேவதியை நேரில் அழைத்து விசாரணை நடத்தினர். கணவர் உயிருடன் இருக்கும் போது இறப்பு சான்றிதழ் பெற்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.