29/10/2025
💞 கொடைவள்ளர், சொர்க்கவாசி அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்களின் வாழ்கை வரலாறு சுருக்கம் 💞
• அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) இவரின் தந்தையின் பெயர் அவ்ஃப், தாயார் பெயர் ஷிஃபா. குறைஷிக் கிளையில் ஜுஹ்ரா கோத்திரத்தை சேர்ந்தவர்கள்.
• நபி (ஸல்) அவர்களின் மனைவியான ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரழி) அவர்களின் சகோதரி உம்மு ஹபீபா பின்த் ஜஹ்ஷ் (ரழி) அவர்களையே அப்துர்ரஹ்மான் (ரழி) அவர்கள் நிக்காஹ் செய்திருந்தார்கள்!
• இவர்கள் துவக்கத்தில் அப்து அம்ர் (அம்ர் அடிமை) என்றோ அழைக்கப்பட்டனர். இவர்களின் பெயரை நபி (ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மான் (அல்லாஹ்வின் அடிமை) என மாற்றினார்கள்.
• அபூபக்கர் சித்திக் (ரழி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற பின்பு, நம்பிக்கைக்குரிய மக்களுக்கும் இஸ்லாத்தின் பக்கம் அழைப்பு விடுத்தார்கள். அவர்களின் அழைப்பை ஏற்று முதன் முதலில் இணைந்த எட்டு பேரில் இவரும் ஒருவர்.
• அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்கள் இஸ்லாத்திற்கு முன்பே சிறந்த புத்திகூர்மையையும், நல்ல பழக்க வழக்கங்கள் கொண்டிருந்தார்கள். இது மட்டுமல்லாமல் மது, வட்டி, ஜினாவில் மக்கள் மூழ்கி இருந்த காலத்தில் அவற்றை முற்றிலும் தவிர்த்து ஒதுங்கி இருந்தார்கள்.
• அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்கள் மக்காவில் சிறந்த வணிகராக இருந்தார்கள். மக்கா காஃபிர்கள் தொல்லையினால் இவரின் வியாபாரமும் பாதிக்கபட்டது. இதன் பின்பு நபி (ஸல்) அவர்கள் அபீஸீனியாவிற்கு மக்களை செல்ல உத்தரவு விட முதலில் 12 நபர்களே சென்றார்கள் அதில் இவரும் ஒருவர்.
• இங்கு சில காலம் தங்கி இருந்த பின்பு மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்து சென்றார்கள். மதினாவிற்கு செல்லும் பொழுது வெறும் கையுடனே சென்றார்கள். நபி (ஸல்) அவர்கள் மதினாவில் உள்ளவர்களையும், மக்காவில் இருந்தவர்களையும் இடையே சகோதரதத்துவத்தை ஏற்படுத்தினார்கள்.
• அவ்வாறே இவருக்கும் ஒரு அன்சாரி ஸஹாபி கிடைத்தார்கள் அவர் மதினாவில் செல்வமிக்கவராக இருந்தார். அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்களிடம் எனக்கு இரண்டு மனைவி உள்ளார்கள் அதில் யார் உங்களுக்கு வேண்டுமோ அவரை குறிப்பிடுங்கள். நான் அவரை தலாக் செய்து விடுகிறேன் இத்தா காலம் பின்பு நீங்கள் நிக்காஹ் செய்து கொள்ளுங்கள். எனக்கு இன்ன இன்ன இடத்தில் விவசாய நிலம் உள்ளது அதில் பாதியை தருகிறேன் என்றார். ஆனால் இதை அனைத்தும் அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்கள் வேண்டாமென்று மறுத்து விட்டார்கள்.
• எனக்கு வியாபார சந்தையை மட்டும் காட்டுங்கள் போதும் என்றார்கள். அங்கு சென்ற மாலை நேரத்தில் பாலாடை கட்டியும், சிறிது நெய்யும் லாபமாக கொண்டு வந்தார்கள். அல்லாஹ் இவர்களுக்கு அதிகம் பரக்கத் பொழிந்தான். இவ்வாறே தொடர்ந்து சென்று வியாபாரம் செய்தார்கள். பிற்காலத்தில் மிகப்பெரிய வியாபாரியாக மதினாவில் திகழ்ந்தார்கள்.
• பல ஸஹாபாக்கள் என்ன தான் இஸ்லாத்திற்காக கடுமையாக உழைத்தாலும், பொருளாதாரத்தில் ஏழ்மையாகவே இருந்தார்கள். ஆனால் இதற்கு நேர்மாறாக இவர் இருந்தார். இஸ்லாத்திற்காக கடுமையாக உழைக்கவும் செய்தார் அதே நேரம் செல்வந்தராகவும் அதிகம் தான தர்மமும் செய்ய கூடியவர்களாக இருந்தார்கள்.
• இவருக்கு எந்த அளவுக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கினான் என்றால் ஒரு கல்லை தூக்கினாலும் கூட அதற்கு கீழே சிறு தங்கம் அல்லது வெள்ளி எடுப்பார்கள். இவரிடம் உள்ள செல்வம் இவருக்கு பயனளிப்பதை விட இஸ்லாமிற்கே அதிகம் பயனளித்தது. இவரிடமும் உள்ள செல்வத்தையும் இவர் மக்களுக்கு தர்மம் செய்தவற்றையும் விரிவாக சொல்லவே தனி கட்டுரை எழுத வேண்டும் அந்த அளவுக்கு இவரின் வாழ்வில் இவர் பல தரம்மங்கள் செய்துள்ளார்கள்.
• இவரிடம் உள்ள அதிக செல்வத்தினால் மறுமை நாளில் இவர் தவழ்ந்து வருவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு செய்தி உண்டு ஆனால் அது பொய்யான செய்தியாகும்.
• ஒரு நாள் மதினாவில் அன்சாரியின் பெண்ணை நிக்காஹ் முடித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், இவர் மீது படிருந்த மஞ்சள் கரை பார்த்து நிக்காஹ் செய்து விட்டார்களா என்று கேட்க அவர் ஆம் என்றார். நபி (ஸல்) அவர்கள் ஒரு ஆட்டையேனும் வலிமா கொடுங்கள் என்றார்கள்.
(நூல் : ஸஹீஹ் புகாரி : 2048)
• இவருக்கு உடலில் ஒரு வகையான தோல் நோய் இருந்தது இதனால் நபி (ஸல்) அவர்கள் இவருக்கு பட்டாடை அணிய அனுமதி கொடுத்தார்கள்.
(நூல் : ஸஹீஹ் புகாரி : 2919)
• நபி (ஸல்) அவர்கள் கலந்து கொண்ட அனைத்து போர்களிலும் இவரும் கலந்து கொண்டார்கள். குறிப்பாக பத்ர், உஹத் போரிலும் கலந்து கொண்டு வீரமாக போர் புரிந்தார்கள். பத்ர் போரில் அபூஜஹ்லைக் கொல்வதற்காகத் தேடி வந்த இரு வீரச் சிறுவர்களுக்கு காட்டிக் கொடுத்து அதன் மூலம் அவனுடைய கதை முடித்தவர்களும் இவரே! தபூக் போரிலும் அதிகமான மக்களுக்கு பொருளாதார உதவிகள் செய்தார்கள்.
(நூல் : ஸஹீஹ் புகாரி : 3141)
• இந்த அளவுக்கு உடலாலும் பொருளாலும் உதவி செய்த காரணத்தில் தான் நபி (ஸல்) அவர்கள் இவரை சொர்க்கவாசி என்று உலகத்திலேயே நற்செய்தி கூறினார்கள்.
(நூல் : சுனன் திர்மிதி : 3747)
• ஒரு முறை தபூக் போரின் போது பஜ்ர் தொழுகைக்கு முன்பு நபி (ஸல்) அவர்கள் சுய தேவை நிறைவேற்ற வெளியே சென்றியிருந்தார்கள். திரும்பி வர தாமதமாக மக்கள் அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்களை இமாமத் செய்ய சொல்லி, பின்னால் மற்ற ஸஹாபாக்கள் நின்று தொழுதார்கள். நபி (ஸல்) அவர்கள் வரும் பொழுது ஒரு ரக்அத் முடிந்தது இரண்டாவது ரக்அத் நடந்து கொண்டிருந்தது. நபி (ஸல்) அவர்கள் இரண்டாவது ரக்அதில் தான் கலந்து கொண்டார்கள். பின்பு அவர் தொழுது முடிக்க மீதம் உள்ள ஒரு ரக்அத்தை நபி (ஸல்) அவர்கள் தொழுதார்கள்.
(நூல் : ஸஹீஹ் புகாரி : 722)
• தூமந்துல் ஜந்தல் எனும் இடத்திற்கு ஒரு படை பிரிவை அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்கள் தலைமையில் நபி (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். நபி (ஸல்) அவர்களே இவருக்கு தலைப்பாகை கட்டி விட்டு உபதேசம் செய்து அனுப்பினார்கள். அதில் போர் செய்யாமலே அல்லாஹ் இவருக்கு வெற்றியை அளித்தான். இதில் பலர் இஸ்லாத்தையும் ஏற்றார்கள்.
• நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்கு பின்பும் அவர்களின் மனைவிகளுக்கு அதிகமாக செல்வங்களை கொடுத்து உதவி செய்தார்கள்.
• மிக குறைவாகவே ஹதீஸ்களை இவர் அறிவிப்பு செய்துள்ளார்கள் ஆயினும் ஹதீஸ்களின் மிக நுட்பமான கருத்துக்களை அறிந்து வைத்து இருந்தார்கள். உமர் (ரழி) அவர்கள் பல மார்க்க சட்டங்களை இவரிடமே ஆலோசனை செய்து முடிவெடுப்பார்கள்.
• நபி (ஸல்) அவர்கள் மரணத்திற்கு பின்பு அடுத்த கலீபாவாக யார் இருக்க வேண்டும் என்று கருத்து வேறுபாடு வந்த பொழுது ஸஹாபாக்களுக்கு ஆலோசனை கூறி அபூபக்கர் (ரழி) அவர்களை கலீபாவாக கொண்டு வர இவர் ஓர் முக்கிய காரணம்.
• இரண்டாவது கலீபாவாக யார் வரவேண்டும் என்று அபூக்கர் (ரழி) அவர்கள், அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்களிடம் ஆலோசனை செய்த போது அவர் உமர் (ரழி) அவர்களையே முன் மொழிந்தார்கள்.
• உமர் (ரழி) அவர்கள் தொழுகையில் குத்தப்பட்ட போது, உடனடியாக அப்துர் ரஹ்மான் (ரழி) அவரின் கையை பிடித்து முன்னே சென்று தொழுகை நடத்த கூறினார்கள். அவர் சுருக்கமாக தொழுகையை நடத்தி முடித்த பின்பு அவரை வீட்டிற்கு தூக்கி சென்றார். பின்பு மூன்றாவது கலீபாவாக யார் வரவேண்டும் என்பதை முடிவு செய்ய ஆறு நபர்களை உமர் (ரழி) அவர்கள் நியமனம் செய்தார்கள் அதில் அப்துர் ரஹ்மான் (ரழி) அவரும் ஒருவர்.
• ஸஹாபாக்களிடம் ஆலோசனை செய்துவிட்டு, மூன்றாவது கலீபாவாக உஸ்மான் (ரழி) அவர்களை அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்களே தேர்வு செய்தார்கள்.
(நூல் : ஸஹீஹ் புகாரி : 3700)
• ஒரு முறை உஸ்மான் (ரழி) அவர்களுக்கு கடுமையான நோய் ஏற்பட, தனுக்கு பின்பு அடுத்த கலீபாவாக அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்களை இருக்க வேண்டும் என்று உபதேசம் செய்தார்கள். இந்த செய்தி கேள்விப்பட்ட இவர், உஸ்மான் (ரழி) அவர்களுக்கு முன்பு தனக்கு மரணம் வந்து விட வேண்டும் என்று துஆ செய்தார்கள். இதன் பின்பு சில மாதங்களிலயே மதினாவில் மரணித்தார்கள்.
• இவர் மரணத்திற்கு பின்பு வசியத் செய்து வைத்து இருந்தார்கள் அதில் தனது செல்வத்தை பத்ர் போரில் கலந்து கொண்டவர்கள், தன்னுடைய மனைவிகளுக்கு, போருக்கு குதிரை, ஒட்டகம் வாங்க என தனது சொத்தை முழுவதும் சரியாக பிரித்து வைத்து சென்றார்கள்.
• இறைவனுக்காகவே வாழ்ந்து இறைவனுக்காக சம்பாதித்து இறைவனுக்காகவே செலவளித்து இறைவனையும் இறைத் தூதரையும் நேசித்த அப்துர் ரஹ்மான் இப்னு அவஃப் ரழியல்லாஹு அன்ஹு இறைத்தூதர் கொடுத்த சான்றிதழைப் பெற்றுக்கொண்டு சொர்க்கத்திற்கு கிளம்பிச் சென்று விட்டார்கள்.
@அல்லாஹ் போதுமானவன் 💞