
16/09/2025
இலக்கிய பயணத்தின் முதல் அங்கீகாரம்: மறக்கமுடியாத செப்டம்பர் 16
எனது கலை, இலக்கியம், ஊடகம் மற்றும் சினிமா பயணங்களுக்கு தொடக்கப் புள்ளியாக இருந்தது 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 16.
இருபத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, அந்த நாள் என் கவிதைகளுக்கு முதல் அங்கீகாரம் கிடைத்த நாள். அன்றையத் தருணம், உள்ளூரிலே பெரிதாகக் கண்டுகொள்ளப்படாத என் கவிதைகள், இன்று நாடுகள்தாண்டி, எல்லைக்கோடுகள்தாண்டி உலக வீதியில் உலாவுவதற்கான துடிப்பைத் தொடங்கியது.
2001/09/16 அன்று, இலங்கை முஸ்லீம்களின் பெருந்தலைவர், கலாநிதி மர்ஹூம் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களின் முதலாவது நினைவு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட தேசிய மட்டக் கவிதை போட்டியில், பாடசாலை மட்டத்தில் நான் முதலிடம் பெற்றேன். அதற்கான விருதை அப்போதைய இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அவர்களிடமிருந்து கொழும்பு பண்டாரநாயக்கா மாநாட்டு மண்டப அரங்கில் பெற்றேன். இந்த நிகழ்வு என் இலக்கிய பயணத்தை தன்னம்பிக்கையோடு தொடங்க வைத்தது.
“அரசியல் வானில் அஷ்ரப் எனும் விடிவெள்ளி” என்ற தலைப்பில் அமைந்த அந்த கவிதையினை எழுதுவதற்கு என்னை உற்சாகப்படுத்தியவர் அம்மாவின் சகோதரர் , எனது மாமா , தமிழ் ஆசிரியர் M.I.M.A. கையும் அவர்கள். அவருக்கு முதல்கண் நன்றிகள்.
பொத்துவிலில் இருந்து கொழும்பு சென்று அந்த விருதினை வாங்குவதற்கு பணம் இல்லாத காரணத்தினால் நான் பட்ட அவஸ்தைகள் கொஞ்ச நஞ்சமல்ல.
விழா ஏற்பாட்டு குழு தலைவராக இருந்த மறைந்த எழுத்தாளர், பாராளுமன்ற உறுப்பினர் மரூதூர் கனி அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ‘’கொழும்புக்கு வரமுடியவில்லை அந்த விருதினை அனுப்பி வைக்க முடியாதா?’’ எனக்கேட்டபோது எனது அறியாமை நினைத்து அவர் ஆத்திரத்தில் திட்டியது என் கண்முன் வந்து போகிறது.
சிரேஸ்ட சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராக பணியாற்றும் எனது அம்மாவின் தம்பி, எனது மாமா ஏ.எல். தாஸீம் அவர்கள் கடனாக வழங்கிய 1000 ரூபாய் என் பயணத்தை தொடங்குவதற்கு உதவி செய்தது. அவரை இன்றும் நன்றியுடன் நினைக்கிறேன். அத்துடன், என்னை கொழும்புக்கு அழைத்துச் சென்ற ஹக்கீம் ஆசிரியர், என் கவிதை ஜெயிக்கும் என்று உறுதி சொன்ன நண்பன் வை.எல். முஸம்மில் ஆசிரியர் ஆகியோரையும் அன்புடன் நினைவுகூறுகிறேன்.
இருபத்துநான்கு ஆண்டுகளுக்கு முன்பு, தேசிய மட்டத்தில் பெற்ற வெற்றி என் ஊரிலும், என் பாடசாலையிலும் பெரும் பேசு பொருளாக மாறியது. அந்தச் செய்தியை அறிந்து கொண்ட பத்தாம் வகுப்பு மாணவன், என்னைச் சந்திப்பதற்காக என் வீட்டைத் தேடி வந்தார். அமைதியான தோற்றமும் , மூத்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் பண்பும், கண்களில் காணப்படும் ஆர்வமும் அவருடைய எதிர்காலத்தை எனக்கு கட்டியம் கூறியது.
அந்த சிறுவன் போட்டியில் நான் வெற்றி பெற்றதை அறிந்து பல கேள்விகளை என்னிடம் கேட்டார். அவரது அறிவையும் ஆர்வத்தையும் பார்த்து நான் வியந்தேன். பின்னர் அவர் பலமுறை என்னை சந்தித்தார்.
இருபத்துநான்கு ஆண்டுகளுக்கு பிறகு, அந்த சிறுவனை மீண்டும் சந்தித்தேன். இன்று அவர் வளர்ந்து, நான் கற்ற பாடசாலையின அதிபராக இருக்கின்றார். அவர் தான் எஸ்.எம். நபீஸ் முஹம்மது. (SLEAS )
கல்வி நிர்வாகச் சேவையில் இணைந்து, திருக்கோவில் மற்றும் கிண்ணியா வலையக் கல்வி பணிமனைகளில் உதவி கல்விப் பணிப்பாளராக பல ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, தற்போது பொத்துவில் மத்தியக் கல்லூரி தேசிய பாடசாலையின் அதிபராக பணியாற்றுகிறார்.
அவரது திறமையான நிர்வாகத்தில் என் பழைய பாடசாலை வளர்ச்சி காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
25 ஆண்டுகளுக்கும் மேலாக கலை, இலக்கியம், ஊடகம் போன்ற துறைகளில் என் பங்களிப்புகள் பதிவு செய்யப்பட்டு, அமேசான் கிண்டிலில் வெளியாகியுள்ள “POTTUVIL ASMIN: From Pottuvil to the World: A Global Tamil Voice” எனது ஆங்கில நூலை இன்று அவரிடம் கையளித்தேன். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் அளித்தது.
முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை. எத்தனை சோதனைகள் வந்தாலும், அதனை தகர்த்து முன்னே செல்ல வேண்டும்.
உறவுகளே உங்கள் வளர்ச்சியை யாரும் தடுக்கலாம், மனதை சிதைக்கலாம்; ஆனால் மனதில் உறுதியிருந்தால், இறைவன் துணையோடு, நினைத்ததை நாம் ஜெயிக்கலாம்
பொத்துவில் அஸ்மின்