13/05/2026
2026 நீட் தேர்வு ரத்து: வீழ்ந்து கிடக்கும் மருத்துவக் கல்வியை மீட்க முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்கும் PMT கட்சி முன்வைக்கும் 'இரட்டை அடுக்கு' தீர்வு வரைவோலை!
"நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்"
ஒரு நோயின் தன்மையையும், அதற்கான காரணத்தையும், அதைத் தீர்க்கும் வழியையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும் என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். மருத்துவக் கல்விச் சேர்க்கையில் நிலவும் நோயான 'தற்போதைய நீட் தேர்வு முறைக்கு', வெறும் உணர்ச்சிவசப்பட்ட அரசியல் எதிர்ப்பை மட்டும் பதிவு செய்யாமல், முதிர்ச்சியான மாற்றுத் தீர்வை முன்வைக்க வேண்டிய வரலாற்றுச் சூழலில் நாம் இருக்கிறோம்.
மே 3 அன்று நடந்து, தற்போது மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டுள்ள 2026-ஆம் ஆண்டு நீட் தேர்வில் நடந்த பிரம்மாண்ட முறைகேடுகள், ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. வாட்ஸ்அப் மூலம் முன்கூட்டியே கசிந்த 410 கேள்விகளில், 120 கேள்விகள் அப்படியே தேர்வில் எதிரொலித்துள்ளது அம்பலமாகியுள்ளது. இது மையப்படுத்தப்பட்ட தேர்வு அமைப்பான NTA-வின் நம்பகத்தன்மையைக் கடுமையாகச் சீர்குலைத்துள்ளது. தற்போது உத்தரவிடப்பட்டுள்ள சிபிஐ (CBI) விசாரணை என்பது வெறும் கண்துடைப்பே அன்றி, இது நோய்க்கான நிரந்தரத் தீர்வல்ல.
மாணவர்களின் உளவியல் சிதைவு: உயிரைப் பலிவாங்கும் குரூர அமைப்பு :
இரவு பகலாகப் படித்து, தங்கள் இளமையின் சிறு சிறு மகிழ்ச்சிகளைக் கூடத் தியாகம் செய்து தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களின் கனவுகளை இந்த ஊழல் அமைப்பு சுக்குநூறாக உடைக்கிறது. "பணம் கொடுத்தால் வினாத்தாள் கிடைக்கும்" என்ற யதார்த்தம், பல ஆண்டுகள் நேர்மையாகப் படிக்கும் கிராமப்புற மாணவனின் நெஞ்சில் ஈட்டியை இறக்குகிறது. தேர்வு ரத்து, மறுதேர்வு, நீதிமன்ற வழக்குகள் என நீளும் இந்த நிச்சயமற்ற தன்மை, இளம் பிஞ்சுகளை மீள முடியாத மன அழுத்தத்திற்கும் (Depression), சில நேரங்களில் தற்கொலை போன்ற கொடிய விபரீதங்களுக்கும் தள்ளுகிறது. நீட் தேர்வு என்பது இன்று மாணவர்களின் அறிவைச் சோதிக்கும் களமாக இல்லை; மாறாக, தேசத்தின் எதிர்காலத் தூண்களான நமது பிள்ளைகளின் மனநிலையைச் சிதைத்து, அவர்களின் உயிரைக் குடிக்கும் ஒரு குரூரமான எந்திரமாக மாறிவிட்டது ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருத்த அவமானம். எங்கள் பிள்ளைகளின் கண்ணீருக்கும், உடைந்த மனதிற்கும் யார் பதில் சொல்வது?
85% மாநில உரிமை: சட்டப் போராட்டங்களும், வரலாற்றுப் பின்னணியும் மாநில நிதியில் கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் 85% இடங்களை மாநிலங்களே நிரப்பிக்கொள்ளும் உரிமைக்கான போராட்டம் நீண்ட நெடியது.
• நீதிபதி ஏ.கே. ராஜன் கமிட்டி அறிக்கை: நீட் தேர்வு எவ்வாறு கிராமப்புற, ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைத்து, சமூக நீதிக்கு உலை வைக்கிறது என்பதைத் தரவுகளோடு நிரூபித்தது.
• நீதிமன்றத்தின் அன்றைய பார்வையும், இன்றைய யதார்த்தமும்: கடந்த காலங்களில் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற சட்டப் போராட்டங்களில், "மருத்துவக் கல்வியில் இந்தியா முழுவதும் 'ஒரே தரம்' (Uniform Standard) இருக்க வேண்டும்" என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. ஆனால், 2026-ன் தற்போதைய சூழல், அந்த நிலைப்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியத்தை உருவாக்கியுள்ளது.
PMT கட்சி முன்வைக்கும் இரட்டை அடுக்கு மாற்றுத் தீர்வு (The Dual-Track Blueprint)
இந்தச் சட்டச் சிக்கல்களை உடைத்து, மாணவர்களின் மன உளைச்சலைத் தடுத்து அவர்களைக் காக்க, பி.எம்.டி கட்சி முன்வைக்கும் நடைமுறைச் சாத்தியமான "இரட்டை அடுக்குத் தேர்வு முறை"யை மத்திய அரசும், தமிழக அரசும் உடனடியாகப் பரிசீலிக்க வேண்டும்:
1. 85% மாநில இடங்களுக்கு 'மாநில அளவிலான மருத்துவச் சேர்க்கை முறை': மாநில நிதியில் இயங்கும் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 85% இடங்களுக்கு, தேசிய தரநிலைகளுக்கு உட்பட்டு, மாநில அரசுகளுக்கு அதிகப்படியான அதிகாரம் வழங்கப்பட வேண்டும். இதனை 'மாநில அளவிலான மருத்துவத் தகுதித் தேர்வு' அல்லது அறிவியல் பூர்வமான தரநிலைப்படுத்தல் (Normalization) முறையுடன் கூடிய +2 பொதுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாநில அரசு மேற்கொள்ள வேண்டும்.
2. 15% தேசிய இடங்களுக்கு மட்டும் 'அகில இந்திய தேர்வு': எஞ்சியுள்ள 15% அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் மத்திய அரசு நிறுவனங்களுக்கு மட்டும், மத்திய அரசு ஒரு தேசிய நுழைவுத் தேர்வை நடத்திக் கொள்ளலாம். இதன் மூலம் இந்தியா முழுவதிலும் உள்ள எந்தவொரு மாணவருக்கும் தமிழகம் போன்ற மாநிலங்களில் படிக்கும் சம வாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது.
3. 'ஒரே நாடு, ஒரே கட்டணம்' (Uniform Fee Regulation): நீட் தேர்வு தனியார் கட்டணக் கொள்ளையைத் தடுத்துவிட்டது என்பது ஒரு மாயை. குறைந்த மதிப்பெண் எடுத்தாலும் வசதியுள்ள மாணவர்கள் மருத்துவக் கல்வியைப் பெறுவதை நிறுத்த, அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கான கட்டணத்திற்கு உரிய ஒழுங்குமுறை அமைப்புகள் மூலம் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும்.
மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு PMT கட்சியின் கோரிக்கை:
• தமிழக முதல்வர் மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்களுக்கு: தமிழக அரசு இந்த விவகாரத்தில் வெறும் கண்டன அறிக்கைகளோடு நின்றுவிடாமல், நடைமுறைக்குச் சாத்தியமான தீர்வுகளை நோக்கி நகர வேண்டும். மாணவர்களின் உயிரைக் காக்கவும், 2026-ன் குளறுபடிகளை அடிப்படையாகக் கொண்டும், மாநில உரிமையை வலுப்படுத்தும் வகையில் பி.எம்.டி கட்சி முன்மொழியும் இந்த "இரட்டை அடுக்கு முறை" குறித்த புதிய சட்டப் போராட்டத்தை அரசு உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
• மத்திய அரசுக்கு: அதிகார மையப்படுத்தலைக் குறைத்து, கூட்டாட்சித் தத்துவத்திற்கு மதிப்பளித்து, மாநிலங்களுக்கு அதிகாரப் பரவலை உறுதி செய்யும் சட்ட மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.
மாணவர்களின் எதிர்காலம் என்பது அரசியல் பிடிவாதத்தின் போர்க்களமல்ல; அது அறிவார்ந்த கொள்கை மாற்றத்தின் மையமாக இருக்க வேண்டும். உயிர்களைப் பலிகொடுத்து நாம் பெறும் எந்தக் கல்வியும் சிறந்த கல்வி ஆகாது!
இப்படிக்கு
K.N இசக்கி ராஜா தேவர்
தலைவர், PMT கட்சி