Aasai

Aasai News & Views Junction

ஒவ்வொரு துளி கண்ணீரும் ஒவ்வொரு கதை சொல்லும்— சிவஶ்ரீ ரமேஷ்மனித நெஞ்சம் என்பது இலக்கண விதிகளுக்குள் ஒருபோதும் சிறைப்படுவத...
16/09/2026

ஒவ்வொரு துளி கண்ணீரும் ஒவ்வொரு கதை சொல்லும்
— சிவஶ்ரீ ரமேஷ்
மனித நெஞ்சம் என்பது இலக்கண விதிகளுக்குள் ஒருபோதும் சிறைப்படுவதில்லை. அழுகை என்பது வெறும் துயரத்தின் அடையாளம் மட்டுந்தானா? புன்னகை என்பது மகிழ்ச்சியின் பிரதிபலிப்பு மட்டுந்தானா? இல்லை. நவரசங்களின் எல்லைக்கோடுகளில் மனித மனம் எப்போதுமே தலைகீழாகத்தான் தன் முகத்தைக் காட்டுகிறது.
நாகர்கோவில் சந்திப்பின் அந்தப் பழைய நடைமேடை.
அந்தி வானம் மழைநீர் பட்ட நெற்றிக் குங்குமம் போலக் கொஞ்சம் கொஞ்சமாய் அழிந்து கொண்டிருந்தது. துருப்பிடித்த தகரப் பெட்டியைக் காலடியில் வைத்துவிட்டு, சுவரோரத் தூணில் சாய்ந்து நின்றிருந்தாள் பொன்னுரெத்தினம். கையில் ஒரு ஒற்றை வழிப் பயணச் சீட்டு. பிறந்த ஊரையும், வாழ்ந்து கெட்ட வீட்டின் வாசற்படியையும் தாண்டி வந்துவிட்ட ஒரு பெண்ணுக்கு, அந்த நடைமேடையின் கடிகார முள் துடிப்பது போலத் தெரியாது; அவளது சொந்த இதயமே கழன்று விழுவது போலத்தான் இருக்கும். அவள் கண்களில் கண்ணீரில்லை. எங்கே போவது, யாரிடம் நிற்பது என்று தெரியாத ஒரு நிலைகுலைந்த வெளியில், பெண்ணின் கால்கள் நிலத்தில் ஊன்றுவதில்லை; அவை அந்தரத்தில் தொங்குகின்றன. புறப்படுதல் என்பது உடல் கடக்கும் தூரமல்ல; ஒரு யுகத்தின் நினைவுகளை அந்தத் தண்டவாளத்திலேயே பலிகொடுத்துவிட்டு நகரும் பெரும் கொடுந்துயர்.
சுசீந்திரம் தேரோடும் வீதியின் பேருந்து நிறுத்தம்.
அதே அந்தியின் இருள் கவியும் வேளையில், மழைக் குடையோடு நின்றிருந்தான் ஆனந்தபத்மநாபன். அவன் அலைபேசியில் ஒரு செய்தி வந்திருந்தது. ஏழு வருடக் காத்திருப்புக்குப் பிறகு, அவனது குடும்பம் கடனிலிருந்து மீண்டு, சொந்தக் கூரையின் கீழ் நிற்கப்போகிறது என்ற செய்தி. அந்தக் குளிர்ந்த சாரல் காற்றில், மின்விளக்கின் மங்கலான மஞ்சள் ஒளியில் அவன் கன்னங்களில் இரு துளி நீர் உருண்டோடியது. அது அழுகையல்ல; நெஞ்சின் அடைப்புகள் உடைந்து வெளியேறிய சொல்லொணாப் பரவசத்தின் துளிகள். மனிதன் தன் பெருந்துயரத்தைக் கூட பல்லைக் கடித்துத் தாங்கிவிடுவான்; ஆனால் அளப்பரிய பெருமகிழ்ச்சி அவன் நெஞ்சைத் தாக்கும் கணத்தில், அவன் கால்கள் தடுமாறி விழிகள்தான் முதலில் கசிந்துருகும். இன்பத்தின் உச்சக்கட்டம் எப்போதுமே கண்ணீரில் தான் முடிகிறது.
தக்கலை பழைய சந்தைக் கட்டடம்.
மொட்டை மாடி விளிம்பில் நின்று கொண்டிருந்தான் சுயம்புலிங்கம். அவனுக்குத் தொண்டை வறண்டு போயிருந்தது. வறுமையும், அடுத்தடுத்து வந்த துரோகங்களும் அவனை நிர்வாணமாக்கிவிட்டிருந்தன. கீழே ஓடும் மனிதர்களின் சலசலப்பையும், தூரத்துச் சுடுகாட்டின் புகையையும் பார்த்தபடி அவன் உதடுகள் மெலிதாய் வளைந்தன. அவன் சத்தமின்றிச் சிரித்தான். அது உதடுகளில் பிறந்த சிரிப்பல்ல; உடைந்த எலும்புகளின் இடுக்கிலிருந்து கசிந்த விஷ நகைப்பு. துயரம் அதன் இறுதி எல்லையைத் தொட்டுவிட்டால், அங்கே அழுது தீர்ப்பதற்கு ஒரு துளிக் கண்ணீரும் மிஞ்சுவதில்லை. விதியின் கோர முகத்தைப் பார்த்து மனிதன் உதிர்க்கும் இந்தச் சிரிப்பு ஒரு கொண்டாட்டமல்ல; எதையும் இழக்கத் துணிந்தவனின் பயங்கரமான எச்சரிக்கை. அந்தச் சிரிப்பின் நடுக்கம் உலகத்தின் அத்தனை அழுகைகளையும் விடக் கொடியது.
கோதையாற்றின் அடர்ந்த காட்டுப் பாதை.
நடுங்கும் மார்கழிப் பனியில் கையில் மங்கலான அரிக்கேன் விளக்குடன் ஒற்றையடிப் பாதையில் நடந்துகொண்டிருந்தான் கொச்சப்பன். காலடியில் சருகுகள் மிதிபடும் ஓசையைத் தவிர, அவனிடமிருந்து எந்தச் சத்தமும் எழவில்லை. ஏமாற்றப்பட்ட கோபமும், அநீதியால் சூறையாடப்பட்ட தன்மானமும் அவன் நெஞ்சுக்குள் எரிகிற கரித்துண்டுகளாய் மூண்டிருந்தன. ஆனால் அவன் ஒரு வார்த்தையும் பேசவில்லை; சாபங்கள் போடவில்லை. ஆத்திரத்தின் உச்சி என்பது கூச்சலில் இருப்பதில்லை; ஒரு மனிதன் தன் கொதிக்கும் கோபத்தின் உச்சத்தில் மௌனமாகும்போதுதான், அவன் ஓர் அமைதியான சூறாவளியாக மாறுகிறான். வார்த்தைகள் அற்றுப்போன அந்த மௌனம், உலகத்தின் அத்தனை ஆயுதங்களை விடவும் கூர்மையானது.
வள்ளியாற்றின் காய்ந்த மணல்வெளி.
அடுத்தொரு நள்ளிரவில், முழுநிலவின் வெளிச்சத்தில் மல்லாந்து படுத்திருந்தான் நாகப்பன். அவனது பெருமூச்சு அந்த இரவின் அமைதியோடு கலந்தது. கண்ணிமையின் ஓரமாக ஒரு துளி கண்ணீர் நழுவி, அவனது காதோரத்து நரைமுடியில் உறிஞ்சப்பட்டது. அது துயரத்தின் எச்சமல்ல; நீண்ட காலத்துப் பாரங்களையும் சுமைகளையும் ஒரு முடிவுக்குக் கொண்டுவந்த பிறகு பிறக்கும் அமைதியின் கண்ணீர். சில கண்ணீர்த் துளிகள் மனித ஆன்மாவின் புண்களைக் கழுவி ஆற்றும் அருமருந்துகள்.
கன்னியாகுமரியின் முக்கடல் சங்கமக் கரை.
பாறைகளின் விளிம்பில் மறையும் சூரியனின் செவ்வானத்தைப் பார்த்தபடி அசையாமல் நின்றிருந்தாள் சுடலி. அங்கே வாக்குவாதங்கள் இல்லை; அலைகளின் ஓலத்தைத் தவிர நியாயத் தீர்ப்புகளுக்கு இடமில்லை. அவள் திரும்பிப் பார்க்கவே இல்லை; அவள் நின்றிருந்த அந்தப் பெருமௌனமே அனைத்தையும் பேசி முடித்திருந்தது. மனித உறவுகளின் அடி ஆழத்தில், சில மௌனங்கள் சம்மதங்களின் அடையாளம் அல்ல; இனி எந்தக் காலத்திலும், எந்த ஜென்மத்திலும் ஒட்டவே முடியாத இறுதிப் பிரியாவிடைகள்.
மனித இதயம் ஒரு விசித்திரமான மர்ம முடிச்சு. பேரானந்தம் கண்ணீராய் வழிகிறது; தாங்க முடியாத துயரம் நஞ்சான சிரிப்பாய் வெடிக்கிறது; அடக்கப்பட்ட கோபமும், மீள முடியாத பிரிவும் வார்த்தைகளற்றுப் பெருமௌனமாய் உறைந்து போகிறது. ஆம், நவரசங்கள் வழியும் மனித வாழ்வில் ஒவ்வொரு துளி கண்ணீரும் ஒவ்வொரு கதை சொல்லும்!

14/09/2026
“நாங்கள் பள்ளிச் சிறுமிகள் அல்ல; மக்கள் பிரதிநிதிகள்!”: இந்தித் திணிப்பை எதிர்த்து தேசிய மகளிர் ஆணையப் பயிலரங்கிலிருந்து...
10/09/2026

“நாங்கள் பள்ளிச் சிறுமிகள் அல்ல; மக்கள் பிரதிநிதிகள்!”: இந்தித் திணிப்பை எதிர்த்து தேசிய மகளிர் ஆணையப் பயிலரங்கிலிருந்து வெளிநடப்பு செய்த கேரள பெண் எம்.எல்.ஏ.க்கள்
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் தேசிய மகளிர் ஆணையம் (NCW) சார்பில் பெண் சட்டமன்ற உறுப்பினர்களுக்காக நடத்தப்பட்ட தேசிய அளவிலான பயிற்சிப் பயிலரங்கம், கடுமையான மொழி ஆதிக்கப் போக்காலும் அணுகுமுறையாலும் பெரும் சர்ச்சையை சந்தித்துள்ளது. முழுமையாக இந்தி மொழியிலேயே நடத்தப்பட்ட அமர்வுகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கள அனுபவத்தைக் கொச்சைப்படுத்தும் வகையிலான பாடத்திட்டத்தைக் கண்டித்து, கேரளாவைச் சேர்ந்த எட்டு பெண் எம்.எல்.ஏ.க்கள் பயிலரங்கைப் புறக்கணித்து அதிரடியாக வெளிநடப்பு செய்தனர்.
பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டமா?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அடிமட்ட அரசியலில் இருந்து சட்டப்பேரவை வரை தடம் பதித்த பெண் பிரதிநிதிகளுக்கு நடத்தப்பட்ட இப்பயிலரங்கின் தரம் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. மகளிர் சுயஉதவிக் குழுக்கள் என்றால் என்ன, காவல் நிலையத்தில் எப்படிப் புகார் அளிப்பது போன்ற மிக அடிப்படையான விஷயங்களே அங்கு விவாதிக்கப்பட்டுள்ளன.
இது குறித்துப் பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஷானிமோல் உஸ்மான் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தார்: "இந்தக் கருத்தரங்கில் முன்வைக்கப்பட்ட பாடத்திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கானதாக இல்லை. காவல் நிலையத்தில் மனு கொடுப்பது எப்படி, சுயஉதவிக் குழுக்களை நடத்துவது எப்படி என்றெல்லாம் எங்களுக்குப் பாடம் எடுக்கிறார்கள். நாங்கள் கள அரசியலில் நேரடியாக மக்களுடன் நின்று போராட்டங்களை நடத்தி இங்கு வந்திருக்கிறோம்; இவை அனைத்தும் எங்களுக்கு அத்துபடி. எங்களை பள்ளிச் சிறுமிகளைப் போல் கருதுவதை ஏற்க முடியாது."பன்மைத்துவத்தை மறுக்கும் இந்தித் திணிப்பு
பாடத்திட்டத்தின் தரம் ஒருபுறமிருக்க, ஒட்டுமொத்தப் பயிலரங்கமும் முழுமையாக இந்தி மொழியிலேயே நடத்தப்பட்டதுதான் பெண் எம்.எல்.ஏ.க்களின் கடும் கோபத்திற்குக் காரணமாக அமைந்தது.
தென்னிந்திய மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து பல்வேறு மொழி பேசும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட ஒரு தேசியக் கருத்தரங்கில், ஆங்கிலம் உள்ளிட்ட பொதுவான ஊடகங்களையோ அல்லது மொழிபெயர்ப்பு வசதிகளையோ கூடச் செய்யாமல் முழுக்க முழுக்க இந்தியை மட்டுமே பயன்படுத்தியது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என அவர்கள் குற்றம்சாட்டினர்.
இந்தியாவின் பன்மைத்துவத்தை மதிக்க வேண்டும் என்றும், அனைத்துப் பிராந்தியப் பிரதிநிதிகளுக்கும் புரியும் வகையில் மொழியமைப்பு இருக்க வேண்டும் என்றும் தேசிய மகளிர் ஆணையத் தலைமையிடம் கோரிக்கை மனுவை அளித்த அவர்கள், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தப்பட்ட அந்த அவையை விட்டு வெளியேறினர்.
தேசிய அளவிலான அமைப்புகள் தொடர்ந்து நாட்டின் மொழியியல் பன்முகத்தன்மையை உதாசீனப்படுத்தி, இந்தியை மட்டுமே முன்னிறுத்தும் போக்கிற்கு எதிராகத் தென்னகப் பிரதிநிதிகள் எடுத்துள்ள இந்தத் துணிச்சலான நிலைப்பாடு, தேசிய அரங்கில் கூட்டாட்சி மற்றும் மொழி உரிமைக்கான உரையாடலை மீண்டும் கூர்மைப்படுத்தியுள்ளது.

நவீன உலகின் சுதந்திரத்திற்கும் சமத்துவத்திற்கும் மகுடம் சூட்டும் பாரிஸ் மாநகரின் வானுயர்ந்த பெருமிதம் ஈபிள் கோபுரம். உலோ...
10/09/2026

நவீன உலகின் சுதந்திரத்திற்கும் சமத்துவத்திற்கும் மகுடம் சூட்டும் பாரிஸ் மாநகரின் வானுயர்ந்த பெருமிதம் ஈபிள் கோபுரம். உலோகத்தால் வடிக்கப்பட்ட அந்தப் பிரம்மாண்டத்தின் நிழலில், மனித மாண்பும் பாலின சமத்துவமும் ஆழமாக வேரூன்றிய பிரெஞ்சு மண்ணில், அண்மையில் நிகழ்ந்த ஒரு சம்பவம் உலக மனசாட்சியை உலுக்கியுள்ளது. ஒரு புனித யாத்திரையின் பெயரால், பழமைவாத நம்பிக்கைகளின் திரைக்குப் பின்னால் நின்று, உழைக்கும் பெண்களின் இருப்பையே புறந்தள்ள முயன்ற ஒரு கோரிக்கை நவீன மனித உரிமைகளின் எல்லைக்கோட்டை உரசிப் பார்த்திருக்கிறது. கோபுரத்தைக் காண வந்த ஒரு குழுவினர் தங்களின் ஆன்மீகக் கட்டுப்பாடுகளைக் காரணம் காட்டிப் பெண் ஊழியர்கள் தங்கள் பார்வையில் படக்கூடாது எனக் கோரியதும், அதற்கு நிர்வாகம் பணிந்து அவர்களைப் பணியிடங்களிலிருந்து ஒதுக்கியதும் நாகரிக சமூகம் ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாத பெருங்காயத்தை ஏற்படுத்தியது.
ஆனால், அநீதிக்குத் தலைவணங்க மறுக்கும் உழைக்கும் வர்க்கத்தின் அறச்சீற்றம் அங்கே உடனடியாக விழித்துக்கொண்டது. சக பெண் ஊழியர்களின் சுயமரியாதையைத் தங்கள் சொந்த மாண்பாகக் கருதிய சக தொழிலாளர்கள், பேதமற்ற கரங்களைக் கோத்துப் பணிப்புறக்கணிப்பில் இறங்கினர். விண்ணை முட்டும் இரும்புக் கோபுரத்தின் வாசல்கள் உலகச் சுற்றுலாப் பயணிகளுக்கு மூடப்பட்டன; ஆனால் சமத்துவத்தின் திறவுகோல் அங்கே கம்பீரமாகத் தன் இருப்பை நிலைநிறுத்தியது. ஒரு மத நம்பிக்கையோ தனிநபர் ஒழுக்க நெறியோ மற்றுமொரு சக உயிரின் சுயமரியாதையையும் ஒரு பெண்ணின் உழைக்கும் உரிமையையும் பறிக்க முடியாது என்பதை அந்த மௌனமான கோபுர மூடல் ஒட்டுமொத்த உலகிற்கும் ஆணித்தரமாகப் பிரகடனம் செய்தது.
பிரான்சின் வீதிகளில் எதிரொலித்த இந்த எதிர்ப்பு வெறும் ஒரு சுற்றுலாத் தலத்தின் அன்றாட முடக்கம் மட்டுமல்ல; அது காலங்காலமாகப் பெண்களை மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் ஒதுக்கி வைக்க முயலும் ஆணாதிக்கப் பார்வைக்கு எதிரான பண்பாட்டுப் புரட்சி. "எங்கள் சுதந்திர பூமியில் எந்தவொரு நம்பிக்கையும் பெண்களின் இடத்தை நிர்ணயிக்க முடியாது" என்ற அரசியல் தலைவர்களின் குரலும், தவறை உணர்ந்து தலைகுனிந்த நிர்வாகத்தின் மன்னிப்பும் மனிதநேயத்தின் உண்மையான வெற்றியைப் பறைசாற்றின. ஆன்மீகம் என்பது மனிதர்களை உள்ளடக்குவதிலும் சக உயிர்களை நேசிப்பதிலும் தான் மலர வேண்டுமே தவிர, சக மனுஷியைத் தீண்டத்தகாதவளாகப் புறந்தள்ளுவதில் அல்ல. இருளைத் துடைத்தெறியும் விளக்காக ஈபிள் கோபுரம் மீண்டும் ஒளிர்ந்தபோது, அது வெறும் பாரிஸின் அழகுக்காக மட்டுமல்லாமல், தலைநிமிர்ந்து நின்ற உழைக்கும் பெண்களின் சமத்துவப் பிரகடனமாகவும் உலகெங்கும் சுடர்விட்டு நின்றது.

கூச்சல் அரசியலின் நடுவே ஓர் எளிய தர்க்கக் குரல்: மாரிமுத்துவின் சட்டமன்றப் பாடம்.      சிவஸ்ரீ ரமேஷ் சட்டமன்றங்கள் என்பவ...
06/09/2026

கூச்சல் அரசியலின் நடுவே ஓர் எளிய தர்க்கக் குரல்: மாரிமுத்துவின் சட்டமன்றப் பாடம். சிவஸ்ரீ ரமேஷ்
சட்டமன்றங்கள் என்பவை வெறும் கட்சிப் பூசல்களுக்கான களமாகவும், வெற்று அரசியல் முழக்கங்கள் எதிரொலிக்கும் கூடாரங்களாகவும் சுருங்கிப்போய்விட்ட ஒரு காலத்தில், மக்கள் பிரதிநிதித்துவத்தின் உண்மையான பொருள் என்ன என்பதை அமைதியாக உணர்த்துகிறது ஒரு குரல். 16-வது தமிழக சட்டமன்றத்தின் கூட்டத்தொடர்களில் அத்தகையதொரு அரிய அடையாளமாகத் தனித்து ஒளிர்கிறார் திருத்துறைப்பூண்டி தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் க. மாரிமுத்து.
சட்டப்பேரவை விவாதங்கள் பல நேரங்களில் வெற்று வார்த்தை ஜாலங்களாகவும், பரஸ்பர குற்றச்சாட்டுகளாகவும் அல்லது அதிகாரத்தைப் போற்றும் புகழுரைகளாகவும் மட்டுமே தேங்கிவிடுவதை நாம் சாதாரணமாகக் கடந்துபோகிறோம். ஆனால், மாரிமுத்து எழுந்து நின்று பேசத் தொடங்கும் தருணங்கள் சட்டமன்றத்தின் மாண்பை முற்றிலும் வேறொரு தளத்திற்கு உயர்த்துகின்றன. உணர்ச்சிபொங்கும் வெற்றுப் பேச்சுகளை அறவே தவிர்த்துவிட்டு, கையில் துல்லியமான புள்ளிவிவரங்களுடனும், கண்களில் தரைமட்ட யதார்த்தத்தின் வலியுடனும் அவர் முன்வைக்கும் வாதங்கள் ஒரு நாடாளுமன்ற ஜனநாயகவாதியின் நேர்த்தியைக் காட்டுகின்றன.
விவசாயப் பாசனச் சிக்கல்கள், உழவர்களின் நியாயமான உரிமைகள், விளிம்புநிலை மக்களின் அன்றாட வாழ்வாதாரக் கோரிக்கைகள், கிராமப்புறக் கல்வி மற்றும் சுகாதார உள்கட்டமைப்புகள் என எந்தவொரு துறையைப் பற்றிப் பேசினாலும், அத்துறையின் மிக நுணுக்கமான தரவுகளையும் ஆழமாகப் பயின்று வந்து பேசும் அவரது தயாரிப்பு முறை வியக்க வைக்கிறது.
அரசியல் முரண்களுக்கு அப்பாற்பட்டு சபாநாயகர், துணை சபாநாயகர், ஆளும்கட்சி அமைச்சர்கள் தொடங்கி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கும் தலைவர்கள் வரை அனைவரின் மனப்பூர்வமான நன்மதிப்பையும் பெறுவது சமகால அரசியலில் அத்தனை எளிதான காரியமல்ல. மாரிமுத்துவின் உரைகளில் எதிராளியைக் காயப்படுத்தும் குரோதமோ, தனிநபர் காழ்ப்புகளோ துளியும் இருப்பதில்லை; மாறாக, அரசின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட வேண்டிய விளிம்புநிலைச் சமூகத்தின் நியாயம் மட்டுமே மிக அழுத்தமான அடித்தளமாக ஒலிக்கிறது. அதனால்தான், ஆளும்கட்சி அமைச்சர்கள் கூட அவரது கேள்விகளையும் கருத்துகளையும் சம்பிரதாயமான எதிர்க்கட்சிக் குரலாகக் கடந்துவிடாமல், கூர்ந்து கவனித்துக் குறிப்பெடுத்துப் பதிலளிக்க வேண்டிய தார்மீகப் பொறுப்புக்கு உள்ளாகிறார்கள்.
ஒரு கூரை வீட்டில் தொடங்கி புனிதமான சட்டமன்ற முற்றம் வரை நீளும் அவரது எளிய வாழ்க்கை முறை, அவரது அரசியல் தர்க்கத்திற்கு ஈடுஇணையற்ற நம்பகத்தன்மையை வழங்குகிறது. அதிகாரத்தின் ஆடம்பரங்கள் தீண்டாத அந்த அசல் எளிமைதான், கடைக்கோடி மனிதனின் கண்ணீரையும் துயரத்தையும் எவ்வித சமரசமுமின்றி அவையின் மைய விவாதமாக மாற்றும் அசாத்திய துணிச்சலை அவருக்குத் தருகிறது.
மக்களாட்சி என்பது வெறும் வாக்குகளின் எண்கணிதத்தில் மட்டும் தங்கியிருப்பதில்லை; அது சட்டமன்றங்களில் சாமானிய மக்களின் உரிமைக் குரல் எவ்வளவு தார்மீக பலத்துடனும் அறிவார்ந்த பொறுப்புணர்வுடனும் எதிரொலிக்கிறது என்பதில்தான் உயிர்ப்போடு நிலவுகிறது. ஆரவாரங்களும் நாடகத்தனங்களும் சாதனைகளாகக் கட்டமைக்கப்படும் ஒரு சூழலில், மாரிமுத்துவின் ஆழமான விவாதங்கள் ஒரு மாற்று அரசியலின் தேவையை மெளனமாக நமக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்கின்றன. அந்த ஜனநாயக அறமே அவரை இத்தொடரின் மிகச்சிறந்த மக்கள் பிரதிநிதியாக வரலாற்றில் நிலைநிறுத்துகிறது.

Communist MLA Marimuthu | "கைல துண்டு பேப்பர் கூட இல்ல" கம்யூனிஸ்ட் MLA மாரிமுத்துவை புகழ்ந்த ஆதவ், து.சபாநாயகர் ...

Address

Nagercoil

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aasai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share