
01/08/2025
கத்தாரில் இருந்தபடி மனைவியின் Cell-ஐ ஒட்டுகேட்ட டெக்கி கணவர்...கூலிப்படையை ஏவி கும்மாங்குத்து...என்ன பிரச்சனை என்பதை இங்கு பார்ப்போம்:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்பிரமணியபுரம், நான்காவது வீதியில் வசித்து வருபவர் சாமி அய்யா. இவர், கத்தார் நாட்டில் கடந்த 30 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்துள்ளார். வருடத்திற்கு 5 முறை சொந்த ஊருக்கு வந்து சாதி சனத்தை பார்த்து விட்டு செல்வது வழக்கம். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வெளிநாட்டில் இருந்து காரைக்குடிக்கு வந்தவர், சொந்த ஊரான ஆவுடையார் கோவிலில் உள்ள அவரது அம்மாவை பார்க்க சென்று விட்டு திரும்பியுள்ளார். அப்போது, தென்கரை என்ற இடத்தில் வரும்போது இவரது காரை வழி மறித்த திமுக பிரமுகர் சதீஷ் மற்றும் பத்துக்கு மேற்பட்டோர் தாக்கியதோடு, பின்பு அவர்களது காரில் கடத்திச் சென்று ஒரு கிரவுண்ட்டில் வைத்து சாமி அய்யாவின் மனைவி மற்றும் மகனையும் அழைத்து அவர்கள் முன்பு வைத்து தாக்கியுள்ளனர்.
இந்த என்ன பிரச்சனை? என கேட்டபோது, சாமி அய்யா கூறும் தகவல்கள் அதிர்ச்சி அடைய வைக்கின்றன. சாமி அய்யா, கடந்த 30 ஆண்டுகளாக கத்தார் நாட்டில் வேலை பார்த்து வருவதாகவும் திமுகவைச் சேர்ந்த சதீஷ் தனக்கு மகன் முறை என்பதால், தனது வீட்டில் நம்பிக்கையாக சென்று வர அனுமதித்ததாகவும் ஆனால், தனது மனைவியுடன் திருமணத்தை தாண்டிய உறவு வைத்திருப்பதாகவும் குற்றம்சாட்டுகிறார். மேலும், 20 வருடங்களாகவே சதீஷுக்கும் தனது மனைவிக்கும் நட்பு ஏற்பட்டதாகவும் ஆனால், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்புதான் தனக்கு தெரிய வந்தது என கூறியவர், மனைவியை கண்டித்து வைத்ததாகவும் அதன் பின்பு வெளிநாடு சென்று விட்டு, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்கு வந்து தூங்கிக் கொண்டிருக்கும்போது, மனைவி, தனது காலில் கட்டையை வைத்து தாக்கியதில் காயமடைந்தாகவும் குற்றம்சாட்டுகிறார்.
மேலும் தான் வெளிநாட்டில் பலபேரை வைத்து தன்னுடைய தொழில் செய்து வருவதாலும், பிள்ளைகளின் நலன் கருதியும் புகார் கொடுக்கவில்லை என கூறும் சாமி அய்யா, மனைவியால் தாக்கப்பட்ட காயம் ஆறியபிறகு மீண்டும் கத்தார் நாட்டுக்கு வேலைக்கு சென்றதாக கூறினார் அதாவது, தனது மனைவியின் செல்ஃபோனில் ஓட்டு கேட்கும் 'ஆப்' ஐ பொருத்தியதாகவும் அதனால், மனைவியும் சதீஷும் பேசும் அத்தனை ஆடியோக்களும் தனக்கு வந்துவிட்டதாகவும் டெக்கி சாமி அய்யா தெரிவித்தார். மனைவியும் சதீஷும் தினந்தோறும் பேசும் அந்தரங்க, ஆபாச பேச்சுகளை எல்லாம் வெளிநாட்டிலிருந்தபடியே எடுத்து வைத்துக்கொண்டதாகக் கூறும் சாமி அய்யா, அதுகுறித்து தனது சொந்த ஊரிலுள்ள பெரியவர்களிடம் கூறி, "இனி பிள்ளைகளுக்காகத்தான் வாழப்போகிறேன். என் மனைவியை டைவர்ஸ் செய்யப்போகிறேன்" என ஊர் பெரியவர்களிடம் பஞ்சாயத்து பேசச் சொன்னதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில்தான், சாமி அய்யாவை தொடர்பு கொண்ட மனைவி மற்றும் அவரது நண்பர் சதீஷ் ஆகியோர் "நீ எப்போ ஊருக்கு திரும்புவ...? ஊருக்கு வா... உன்னை கொலை செய்கிறோம்" என மிரட்டியதாகவும் அதையும் மீறி கடந்த வாரம் காரைக்குடி வந்துவிட்டு, அங்கிருந்து காளையார் கோயில் உள்ள அவரது அம்மாவைப் பார்க்க காரில் சென்று விட்டு திரும்பி வரும்போது தனது மனைவி, சதீஷ் உள்ளிட்டோர் ஏவிய கூலிப்படை தன்னை தாக்கியதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சாமி அய்யா மேலும் கூறும்போது, 30 ஆண்டுகளாக கத்தார் நாட்டில் வேலை பார்த்து, தான் சம்பாதித்த சுமார் 6 கோடி ரூபாய் பணம் மற்றும் 350 சவரன் தங்க நகை, கார் பைக் ஆகியவற்றை சதீஷ், தனது மனைவியுடன் எல்லை தாண்டிய நட்பை ஏற்படுத்திக் கொண்டு ஏமாற்றி வாங்கிக் கொண்டதாகவும் தவறான தகவல்களைக்கூறி தனது பிள்ளைகளையே தனக்கு எதிராக திருப்பி விட்டுவிட்டதாகவும் குற்றம் சாட்டுகிறார்.
மேலும், இடம் வாங்கி தருகிறேன் என 35 லட்ச ரூபாய் பணத்தையும் வாங்கிக் கொண்டு அதையும் தரவில்லை என்றும் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும். இந்தியன் எம்பசியில் புகார் அளித்துள்ளதாகவும் அதையும் பொருட்படுத்தாமல் இவர்கள் தன்னை கடத்திச் சென்று தாக்கி உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். தனது மனைவியுடன் கூடா நட்பில் உள்ள சதீஷ், தான் திமுகவில் உள்ளேன், தன்னை எதுவும் செய்யமுடியாது என மிரட்டுவதாகவும் சாமி அய்யா தெரிவித்ததோடு, முதலமைச்சர் அவர்கள், சதீஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட திமுகவில் பொறுப்பு வகிக்கும் சதீஷை, சாக்கோட்டை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், சாமி அய்யாவின் மனைவியும் உடந்தையாக இருந்த மகனும் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. சாமி அய்யாவின் மனைவியும் சதிஷும் பேசும் ஆடியோக்களை வெளிநாட்டில் இருந்தபடி, அந்த ஆடியோக்களை எல்லாம் அவர் எப்படி இத்தனை நாட்கள் கேட்டுக்கொண்டிருந்தார் என்பதே ஆச்சர்யமாக உள்ளது. தனது அம்மா மீது தவறு இருந்தும் தனது அப்பாவை அம்மா காலை அடித்து உடைப்பதையும் கூலிப்படையை ஏவி தாக்குதல் நடத்துவதையும் அவரது மகன், மகளும் ஏன் எதிர்க்கவில்லை? தடுக்கவில்லை? தனது அப்பாவின் பக்கம் ஏன் நிற்கவில்லை என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. அதே நேரத்தில் வேகத்தில் செய்தாலும், மோகத்தில் செய்தாலும் குற்றம் கேடு தரும்.