26/09/2025
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப் பெருந்தகையை விசாரிக்காதது ஏன்? காவல்துறைக்கு நெருக்கடியை ஏற்படுத்திய கேள்வி ?. வழக்கை சிபிஐக்கு மாற்றியதன் பின்னணி ...
சென்னை பெரம்பூரில் கடந்தாண்டு ஜூலை மாதம் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரன், அவரது மகனும், காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகியும் தற்போதைய மாநில தலைவர் செல்வப் பெருந்தகைக்கு நெருக்கமானவருமான அஸ்வத்தாமன் என 27 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் காவல்துறையிடம் சரணடைந்த ரவுடி திருவேங்கடம் அவசர அவசரமாக என்கவுண்டர் செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கில் விசாரணை நடத்திய செம்பியம் காவல்துறையினர், ஐந்தாயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கையை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இந்த குற்ற பத்திரிகை தாக்கல் செய்த பிறகு, ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் ஹீனோஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் தனது சகோதரர் கொலை வழக்கு விசாரணையில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் இடம்பெற்று இருப்பதாக குற்றம் சாட்டினார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பல முக்கிய அரசியல் புள்ளிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. கொலையில் தொடர்புடைய சம்போ செந்தில் மற்றும் முட்டை கிருஷ்ணன் ஆகியோர் இன்னும் தலைமறைவாக உள்ளனர். தமிழக காங்கிரசில் அஸ்வத்தாமனுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த தற்போதைய தலைவர் செல்வப் பெருந்தகையை காவல்துறை விசாரிக்கவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டது.
ரவுடி நாகேந்திரனின் மகனான அஸ்வத்தாமன் மீது கொலை மிரட்டல், பணம் பறிப்பு உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் இருந்தன. அவர் சம்பாதித்த பணத்தில் செல்வப் பெருந்தகைக்கும் பங்கு அளித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் செல்வப் பெருந்தகை, ஏற்கனவே பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராகவும் இருந்திருக்கிறார். மேலும் ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கிலும் செல்வபெருந்தகையின் பெயர் இடம் பெற்று இருந்தது. இந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் முன்வைத்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஜெய்சங்கர், செல்வப் பெருந்தகையை மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்குமாறு ராகுல் காந்திக்கு கடிதம் எழுதி இருந்தார் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது.
செல்வப் பெருந்தகை மீது சந்தேகம் கிளப்பிய ஆம்ஸ்ட்ராங் சகோதரர் தரப்பு, திருவேங்கடம் ஏன் என்கவுண்டர் செய்யப்பட்டார் ? என்ற தகவலை காவல்துறை தெரிவிக்கவில்லை. எனவே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என வாதிட்டது.
இருதரப்பு வாதங்களையும் காவல்துறை குற்றப்பத்திரிக்கையையும் ஆய்வு செய்த நீதிமன்றம் முரண்பாடுகள் இருப்பதை உறுதி செய்தது. காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்ற விவரங்களில் இருந்து குற்றப்பத்திரிக்கையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் முரண்படுவதாகவும் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உள்ளது.
எந்தவித அரசியல் குறுக்கீடும் இல்லாமல் ஆறு மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க சிபிஐக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.