21/10/2025
மதுரை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் செவ்வாய்க்கிழமை இரவு வரை இடைவிடாது மழை பெய்தது. குறிப்பாக உசிலம்பட்டி, வாடிப்பட்டி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் பல மணி நேரம் கனமழை பெய்தது. மதுரை மாநகரிலும் அவ்வப்போது பலத்த மழையும், பெரும்பாலான நேரங்களில் மிதமான மழையும் பதிவாகியது.
மழையால் கர்டர் பாலம், வைகை தரைப்பாலம், ரயில் நிலைய சாலை, தயிர் சந்தை, வெங்காயச் சந்தை, பெரியார் பேருந்து நிலையம், தல்லாகுளம், கோ.புதூர் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும், கள்ளிக்குடி உள்ளிட்ட இரண்டு இடங்களில் வீட்டு சுவர்கள் இடிந்து விழுந்தன. அதிர்ஷ்டவசமாக, இவ்விபத்துகளில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. பேரையூர் பகுதியில் சாலைகள் சேதமடைந்தன. கச்சைக்கட்டி பகுதியில் மரம் முறிந்து கார் மீது விழுந்தது; சில நிமிடங்களிலேயே மரம் அகற்றப்பட்டது.
மாநகரின் பல பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி மோட்டார் இயந்திரங்கள் மூலம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கள்ளந்திரியில் 70 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியான மழையின் காரணமாக, மதுரை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது