19/08/2026
தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு "கலைஞர் மகளிர் உரிமைத் தொகை" என்ற திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000- வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் மே மாதம் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகமும், இதே தொகையை வழங்குமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் மக்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழக வெற்றி கழகம், கடந்த 4 மாதங்களில் மாதத்திற்கான உரிமைத் தொகையை மாதத்தின் 15-ஆம் தேதி அன்று வங்கி கணக்கில் வரவு வைத்தது. தவெக அரசு ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2500-ஆக உயர்த்தி வழங்க விருப்பதாக உறுதி அளித்திருந்தது. அதேபோல மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சில மறு சீரமைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளது.
ஏன் இந்த மறு சீரமைப்பு நடவடிக்கை?:
தற்போது மகளிர் உரிமைத் தொகை பெற்று வரும் 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், புதிய மறு சீரமைப்பு நடவடிக்கையின் கீழ் முதியோர் உதவித்தொகை என்ற திட்டத்திற்கு மாற்றப்படுவார்கள். இதனால் இதுவரையில் ரூ.1,000 பெற்று வந்த அவர்களுக்கு மாதா மாதம் ரூ.3,000 வழங்கப்படும். அதேபோல 60 வயதுக்குட்பட்ட தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் தோறும் மகளிர் உரிமை தொகையாக 2,500 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. இதை செயல்படுத்தும் விதமாகத்தான் இந்த மறுசீரமைப்பு நடவடிக்கை ஆகும். அடுத்த மாதம் 60 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு ரூ.2500 ரூபாயும், 60 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு ரூ.3000 ரூபாயும் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த மாதம் வழக்கம் போல ரூ.1000 வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?:
நீங்கள் தமிழ்நாட்டில் வசிக்கும் பெண்ணாக இருக்க வேண்டும். 21 வயது அதற்கு மேற்பட்ட வயதுடையவராக இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ரூ. 2.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் நீங்கள் பயன்படுத்தும் மின்சாரம் 3600 யூனிட்களுக்கும் குறைவாக இருக்க வேண்டும்.
யார் விண்ணப்பிக்க முடியாது?:
அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், வருமான வரி செலுத்துவோர், 4 சக்கர வாகன உரிமையாளர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தவிர்த்து பிற அரசியல் பதவிகளில் இருப்பவர்கள் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது.
தேவையான ஆவணங்கள்:
ஆதார் கார்டு, பான் கார்டு, ரேஷன் கார்டு, பேங்க் பாஸ்புக், முகவரி சான்றிற்காக மின்சார கட்டண ரசீது, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவை தேவைப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது?
நீங்கள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். ஆஃப்லைன் மூலமாக விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான kmut.tn.gov.in அல்லது kmut.tnega.org என்ற இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம். புதிதாக பொறுப்பேற்றிருக்கும் அரசு மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை விரைவில் விரிவாக்கம் செய்யும் என்று கூறப்படுகிறது. எனவே 21 வயதை பூர்த்தி செய்யும் பெண்கள் உடனடியாக விண்ணப்பித்து மகளிர் உரிமை தொகை பெறலாம்.