04/07/2025
திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் வருகிற ஜுலை 7ஆம் தேதி அன்று காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இந்த குடமுழுக்கு விழாவை முன்னிட்டு வருகின்ற ஜூலை 6ம் தேதி இரவு 9.55 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு ரயிலானது, மதுரை, விருதுநகர், நெல்லை, தென்காசி வழியாக செங்கோட்டையை வந்தடையும். அதேபோல், மறுமார்க்கமாக ஜூலை 7-ம் தேதி இரவு 7:45 மணிக்கு செங்கோட்டையிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும்.
ஜூலை 7ஆம் தேதி குடமுழுக்கு தினத்தன்று, திருநெல்வேலி - திருச்செந்தூர் சிறப்பு பயணிகள் ரயில் வண்டி எண் (06101) காலை 9.15 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு காலை 10.50 மணிக்கு திருச்செந்தூர் வந்தடையும். மறு மார்க்கத்தில், சிறப்பு பயணிகள் ரயில் வண்டி எண் (06102) காலை 11.20 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு மதியம் 12.55 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.