
21/07/2025
“வெள்ளைக்காரன் கொண்டு வந்த மதம் கிறிஸ்தவம்” - என்பவரா ? உங்களுக்கான பதிவு
இந்திய கிருத்தவம் - அத்தியாயம் 17
வணிகம், ஆங்கிலேயர்கள், மதமாற்றம் என்று பல இட்டுகட்டப்பட்ட புதர்களுக்குள்ளே மறைக்கப்பட்ட இந்திய கிறிஸ்தவத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒரு அற்புதமான சான்று, 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வில்லியம் ஆஃப் மால்ம்ஸ்பரி (William of Malmesbury) என்ற ஆங்கில வரலாற்று ஆசிரியரின் குறிப்புகளிலிருந்து நமக்குக் கிடைக்கிறது. கடந்த பதிவில் எட்டாம் நூற்றாண்டிலே இங்கிலாந்து மனிதர்கள் ( சாக்சோனி )இந்திய கிறிஸ்தவத்தையும் திருச்சபையையும் அங்கீகரித்து, சகோதர திருச்சபையாக ஆதரவு அளித்ததை காண முடிந்தது. அதை தொடர்ந்து கி.பி. 1114-1123-க்கு இடையில் எழுதப்பட்ட இந்த ஆவணம், 12-ஆம் நூற்றாண்டிலேயே இங்கிலாந்து, இந்தியாவில் இருந்த கிறிஸ்தவரகளை அறிந்திருந்தது என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரமாக விளங்குகிறது.
இடைக்கால இங்கிலாந்தும் இந்திய கிறிஸ்தவர்களும்
12-ஆம் நூற்றாண்டின், வரலாற்று ஆசிரியரான வில்லியம் ஆஃப் மால்ம்ஸ்பரி (William of Malmesbury) தனது குறிப்புகளில், இங்கிலாந்தையும் இந்தியாவையும் நேரடியாக இணைத்த ஒரு முக்கியமான பயணத்தைப் பதிவு செய்துள்ளார்.
அவரது குறிப்பின்படி:
"எப்போதும் தர்மம் செய்வதில் கருத்தாய் இருந்த அவர் (மன்னர்), தன் தந்தையால் நியமிக்கப்பட்ட சபைகளின் சிலாக்கியங்களை உறுதிசெய்தார். மேலும், ரோமுக்கும் (Rome), இந்தியாவில் உள்ள அப்போஸ்தலர் தோமாவுக்கும் (அபோஸ்தலர் தோமாவின் திருச்சபைக்கும்) (St. Thomas in India) வெளிநாடுகளுக்கு அநேக பரிசுகளை அனுப்பினார். இதற்காக, ஷெர்போர்ன் (Sherborne) பிஷப்பான சிகெல்ம் (Sigelm) என்பவரை அனுப்பினார். அவர் வெற்றிகரமாக இந்தியாவுக்குள் வந்து... அங்கிருந்து திரும்பும்போது, அந்த நாட்டில் அதிகமாகக் காணப்படும் பல பளபளப்பான அந்நாட்டு ரத்தினங்களையும், நறுமணச் சாறுகளையும் கொண்டு வந்தார்." [ இந்திய திருச்சபையின் பெயர் தோமாவை தழுவினது என்பதினால் பல வரலாற்று குறிப்புகள் தோமாவை குறிப்பிடுவது போல திருச்சபையை குறிக்கிறது. ரோம திருச்சபை தன்னை பேதுரு (பெட்ராஸ்)என குறிப்பிடுவது போல ]
இந்தக் குறிப்பு பல முக்கியமான வரலாற்று உண்மைகளை நமக்குத் தெளிவுபடுத்துகிறது.
12-ஆம் நூற்றாண்டு ஆங்கிலத் திருச்சபை, "இந்தியாவில் உள்ள அப்போஸ்தலர் தோமாவின் சபைகளை, கிறிஸ்தவ அன்பை பேணும் அன்பளிப்புகளை பெற்றுக்கொள்ளத் தகுதியான ஒரு இடமாகக் கருதியுள்ளனர். அவர்கள் ரோமுக்கு (Rome) நிகராக இந்தியாவையும் மதித்துள்ளனர்.
ஷெர்போர்ன் (Sherborne) போன்ற ஒரு முக்கியமான திருச்சபை மையத்தின் பிஷப், இவ்வளவு செலவுமிக்க மற்றும் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டார் என்றால், இந்தியாவில் ஏற்கெனவே நன்கு வளர்ந்த கிறிஸ்தவ சபைகளும் கிறிஸ்தவர்களும் இருந்தன என்பது உறுதியாகிறது.
கி.பி. 1100-களிலேயே, இந்தியக் கிறிஸ்தவம் தொலைதூர ஐரோப்பிய சபைகளுடன் முறையான அளவுக்கு ஒழுங்கமைக்கப்பட்டும், சர்வதேச அளவில் இணைக்கப்பட்டும் இருந்தது என்பதை இது காட்டுகிறது.
அப்போஸ்தலர் தோமா தொடர்பு: ஆங்கிலக் குறிப்பேட்டில் "இந்தியாவில் உள்ள அப்போஸ்தலர் தோமா" என்று குறிப்பாகச் சொல்லப்பட்டிருப்பது, கிறிஸ்தவத்தின் ஆரம்ப காலத்திற்கே நம்மை அழைத்துச் செல்கிறது. அப்போஸ்தலனாகிய தோமா, இயேசு கிறிஸ்துவால் தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னிரண்டு சீடர்களில் ஒருவர். பழங்கால கிறிஸ்தவப் பாரம்பரியத்தின்படி, அப்போஸ்தலர் தோமா கி.பி. 52-ல் நற்செய்திப் பணியைச் செய்வதற்காக இந்தியாவிற்குப் பயணம் செய்தார்.
காலனித்துவ கதைகளுக்கு அப்பால்
வில்லியம் ஆஃப் மால்ம்ஸ்பரியின் (William of Malmesbury) குறிப்பு, ஐரோப்பியர்களால் தான் கிறிஸ்தவம் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டது என்ற காலனித்துவக் கதையை முற்றிலுமாகத் தகர்க்கிறது. மாறாக, இடைக்கால ஐரோப்பியர்கள் இந்தியக் கிறிஸ்தவத்தை ஒரு பழமையான, மரியாதைக்குரிய பாரம்பரியமாகவே பார்த்தார்கள் என்பதை இது வெளிப்படுத்துகிறது.
ரோமர் 10:18-ல் அப்போஸ்தலனாகிய பவுல், "அவைகளின் சத்தம் பூமியெங்கும் அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறதே." என்று கூறுகிறார். இது நற்செய்தி ஆரம்ப காலத்திலேயே உலகம் முழுவதும் பரவியதைச் சுட்டிக்காட்டுகிறது.
12-ஆம் நூற்றாண்டில் ஒரு ஆங்கில அத்தியட்சர் இந்தியாவிற்கு ஒரு தூதரை அனுப்பி கிறிஸ்தவ நல்லுறவுகளை தொடர்புகளை ஏற்படுத்தினார் என்பது, இந்திய கிறிஸ்தவம் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக இருந்ததைக் காட்டுகிறது. இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சமூகம் அல்ல, மாறாக சர்வதேச கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு வளர்ந்திருந்த ஒரு கிறிஸ்தவ சமூகம் என்பதையே இது காட்டுகிறது.
வில்லியம் ஆஃப் மால்ம்ஸ்பரியின் (William of Malmesbury) குறிப்பேடு, இடைக்கால இங்கிலாந்து இந்தியக் கிறிஸ்தவத்தைப் பற்றி அறிந்திருந்தது மட்டுமல்லாமல், அதை ஒரு அடையாளம் கண்டுகொள்ளகூடிய மற்றும் நன்கு வளந்த திருச்சபையாக ஏற்றுக்கொண்டு அதனுடன் தீவிரமாக ஈடுபட்டது என்பதற்கு ஒரு குறிப்பிடத்தக்க வரலாற்றுச் சான்றை வழங்குகிறது.
இந்த 12-ஆம் நூற்றாண்டு சாட்சியம், கிறிஸ்தவம் காலனித்துவத்தின் மூலம் மட்டுமே இந்தியாவிற்கு வந்தது என்ற கட்டுக்கதையை உடைத்து, அதற்குப் பதிலாக உலகம் முழுவதும் இருக்கும் பாரம்பரிய திருச்சபைகளை போல அப்போஸ்தல அங்கீகாரத்தைப் பெற்ற ஒரு பழங்கால அப்போஸ்தல பாரம்பரியத்தை வெளிப்படுத்துகிறது. இது இந்திய கிறிஸ்தவர்கள் தங்களின் கிறிஸ்தவம் இப்போது வந்தது அல்ல மாறாக இங்கு இருக்கும் பல மதங்களுக்கு முன்பே இங்கு வேரூன்றி இருந்த ஒரு உண்மையான தேவனின் மீது மக்கள் கொண்ட விசுவாசம் என்று நம்பிக்கை கொள்ளத் தூண்டுகிறது. அவர்களின் விசுவாசம் ஒரு வெளிநாட்டு மக்களின் விசுவாச தொடர்ச்சி அல்ல, மாறாக கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள் மூலம் வேரூன்றிய, முதல் தலைமுறை கிறிஸ்தவம். பல நூற்றாண்டுகளாகத் தொடர்ச்சியால் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு சுதேச பாரம்பரியம்.பவுல் 1 கொரிந்தியர் 3:11ல் சொல்லியபடி போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது. என்ற வசனம் இந்திய கிறிஸ்தவத்திற்கு பொருந்தும்.
சந்தேகத்திலிருந்து விசுவாசத்திற்கு தோமாவை மாற்றிய அதே கர்த்தர், இன்றும் சந்தேகப்படும் இந்திய விசுவாசிகள் மூலம் செயல்பட்டு, அவர்களை அப்போஸ்தலர்களுடனும், ஆதி விசுவாசத்திலும் இணைக்கிறார். இன்னும் இந்திய கிறிஸ்தவ மரபை ஆங்கிலேயர்கள் கொண்டுவந்தது என்போமானால் இந்த வசனம் அதற்க்கு பதில் கொடுக்கும். “அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்.” யோவான் 20:29
என் ஆண்டவரே, என் தேவனே!
தேவனுக்கே எல்லா மகிமையும் உண்டாவதாக!!!
தொடர்ந்து பயணிப்போம்....
படைத்தவரின் பாதையில்,
திருமதி. ரெமினா சுஜித்
கிறிஸ்தவ வரலாற்று சங்கம்
குறிப்புகள்:
William of Malmesbury, Chronicle of the Kings of England (1114-1123 A.D.), p. 118, as cited in C. P. Mathew and M. M. Thomas, The Indian Churches of St. Thomas, p. 9.