17/10/2025
தமிழ் சினிமாவுக்கு திருநெல்வேலி என்றாலே வன்முறை, அடாவடி, அடிதடி மட்டும் தானா.?
திருநெல்வேலி கதையொன்று திரையேறி இருக்கிறது. திருநெல்வேலிக் காரராலேயே அது ஏற்றப்பட்டிருக்கிறது. படம் வியாபாரமாக வாழ்த்துகள்.!
விஷயத்துக்கு வருவோம்...
காலங்காலமாக தமிழ் சினிமா திருநெல்வேலியைக் களமாக வைத்து திரைப்படம் எடுத்து வருகிறது. கருப்பு வெள்ளை காலத் திரைப்பட வரலாற்றில் திருநெல்வேலி காட்சியான விவரம் பற்றி தெரியாது.
ஆனால் அதற்கு பிறகு 90களில் எடுக்கப்பட்ட திரைப்படங்களும், புத்தாயிரத்திற்கு பின்னர் எடுக்கப்பட்டுவரும் திரைப்படங்களும் திருநெல்வேலி என்ற ஈரமுள்ள மண்ணை வன்முறைக் காடாகவும், அடாவடி பூமியாகவுமே கதையாக்கி சித்தரிப்பதன் நோக்கம் என்ன.?
உண்மையிலேயே திருநெல்வேலியின் இமேஜ் இது தானா.?
சத்தியமாக கிடையாது.!
சாதி ஊடுறுவி இருக்கிறதே என்று வக்காலத்து போட்டுவிட்டு வருவார்கள் பல வடிவப் போராளிகள்.!
வீரியமிக்க தூய்மையான இந்த மண்ணின் பண்பாடு, கலாச்சாரத்தின் ஒரு அங்கம் தான் சாதியும், சாதிய உரசலும்.. ஆனால் அதுவே இந்த மண்ணின் அடையாளம், ஆன்மா என முத்திரையடிக்க மேற்படியார்களுக்கெல்லாம் அதிகாரம் கொடுத்தது யார்.?
பல தமிழ் திரைப்படங்களுக்கு ஜாதகம் பார்த்து அதன் தலையெழுத்து திசையை தீர்மானித்த மண் திருநெல்வேலி.! ஆனால், இப்போது அதே சினிமாவால் திருநெல்வேலிக்கு நடப்பதோ பெருந்துயரம்.!
சாதி தான் தென் தமிழ்நாட்டின் ஆன்மா என்றால் இந்திய சுதந்திரப் போரில் திருநெல்வேலிச் சீமை மீசையை முறுக்கிக் கொண்டு முன்னே நின்றிருக்காது.!
சாதி தான் தென் தமிழ்நாட்டின் ஆன்மா என்றால் கட்டபொம்மனும், பாரதியும், பூலித்தேவரும், வ.உ.சியும், வாஞ்சிநாதனும், சுப்பிரமணிய சிவாவும் ஒன்றோடு சேர்ந்து திருநெல்வேலிக் கலகமூட்டி ஆங்கிலேயனை விரட்டியடித்து லண்டன் நாடாளுமன்றத்தை கதிகலங்க வைத்திருக்கமாட்டார்கள்.!
சாதி தான் தென் தமிழ்நாட்டின் ஆன்மா என்றால் திருநெல்வேலிக் காரர்கள் திக்கெல்லாம் சென்று எல்லோருக்குமான உயர்தர ஆளுமைகளாக, தொழிலதிபர்களாக, எழுத்தாளர்களாக, விஞ்ஞானிகளாக உயர்ந்திருக்க மாட்டார்கள்.!
500 ஆண்டுகளாக உலகத்தின் பெருந்தேரை ஊர்கூடி இழுத்து விழா கொண்டாடிய வரலாறு கொண்ட மண் இது.!
இந்த மண்ணின் பாரம்பரியமும், கலாச்சாரமும், பெருமைகளும் வன்முறை வேட்டை கதைகளுக்குள் பொதிந்து வைக்கத்தக்கவை அல்ல.!
கல்வியால் பாதி தமிழ்நாட்டை மேலேற்றிய "தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு" என்ற பெருமித அடையாளங் கொண்ட அன்பும் அமைதியும் மிகுந்திருக்கும் Intellectual பூமி இந்த திருநெல்வேலி.!
திருநெல்வேலி சாதித்தவர்களின் கதைகளால் ஆன மண்.! சாதியக் கதைகளால் ஆனது அல்ல.!
இனியேனும், திருநெல்வேலியில் வந்திறங்கும் கேமராக்கள் மாற்று திசையில் திரும்பட்டும்.!
GLORIOUS NELLAI
17/10/2025