22/05/2016
திமுக மாவட்ட செயலாளர் ராஜினாமா:
சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி எதிரொலியாக திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் க.செல்வராஜ் தனது மாவட்ட செயலாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதற்கான கடிதத்தை அவர் திமுக தலைவர் கருணாநிதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை பொறுத்தவரை கொங்கு மண்டலத்தில் திமுகவுக்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை. தேர்தலில் திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் (தனி), காங்கயம் தொகுதிகள் தவிர பிற திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவிநாசி (தனி), பல்லடம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய ஆறு தொகுதிகளில் திமுக நேரடியாக வேட்பாளர்களை களமிறக்கியது.
தேர்தலுக்கு முன்னதாக, திமுக சார்பில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளரான க.செல்வராஜ் திருப்பூர் வடக்கு, தெற்கு, பல்லடம், அவிநாசி ஆகிய தொகுதிகளுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். பின்னாளில் அவரே திருப்பூர் தெற்கு தொகுதி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார். மேலும் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் தாராபுரம், உடுமலை, காங்கயம், மடத்துக்குளம் ஆகிய தொகுதிகளுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
தவிர, அந்த கூட்டத்தில் ஒவ்வொரு பொறுப்பாளர்களும் தங்களின் கீழ் உள்ள தொகுதிகளில் இரண்டு தொகுதிகளில் வெற்றியைப் பெற்றுத் தர வேண்டும். இல்லையெனில் தங்களது கட்சி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சி தலைமை சார்பில் தெரிவிக்கப்பட்டதாம்.
தேர்தல் முடிவில், திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரத்தில் காங்கிரஸ், மடத்துக்குளத்தில் திமுக வெற்றி பெற்றன. பிற தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இதில் க.செல்வராஜ் உள்பட, அவர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட நான்கு தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர்.
இந்நிலையில் ஏற்கனவே மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சி தலைமை அறிவுறுத்தியபடி, தனது வடக்கு மாவட்ட செயலாளர் பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளதாகவும், தனது ராஜினாமா கடிதத்தை அவர் திமுக தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், அமைப்பு செயலாளர் எஸ்.ஆர்.பாரதி ஆகியோருக்கு சனிக்கிழமை அனுப்பி வைத்துள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து க.செல்வராஜிடம் கேட்ட போது, ஒரு மாவட்ட செயலாளர் நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றுத் தர வேண்டும் என்று கூறப்பட்டது. தேர்தலில் அவ்வாறு நடக்கவில்லை. அதன் காரணமாக ராஜினாமா கடிதத்தை கட்சி தலைமை உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ளேன். அதை ஏற்பது குறித்து கட்சி தலைமையே முடிவு செய்யும், என்றார்.