
07/10/2025
வலையில் சிக்கியது ‘டூம்ஸ் டே’:
தமிழகத்திற்கு பேரழிவா..?
பாம்பன் மீனவர்கள் வலையில் சிக்கிய அரிய வகை மீனை பார்த்த மக்கள், ‘பேரழிவு வரும்’ எனக் கூறிச் சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், மீன்வளத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பனில் இருந்து கடந்த 5ம் தேதி, ஆயிரக்கணக்கான மீனவர்கள் விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
அப்போது, ஒரு படகில் சென்ற மீனவர்களின் வலையில் சுமார் 5 அடி நீளமும், 10 கிலோ எடையும் கொண்ட அரிய வகை மீன் ஒன்று சிக்கியது.
மறுநாள் அந்த மீனை கரைக்கு கொண்டுவந்தபோது, பாம்பன் பகுதி மக்கள் அதை பார்த்து, ‘இந்த மீன் கரை ஒதுங்கினால் பேரழிவு வரும்’ எனக் கூறிச் சென்றனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டதை அடுத்து, மீன்வளத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து அந்த மீனை பார்வையிட்டனர்.
இதையடுத்து பேசிய அவர்கள், ‘நீளமான மற்றும் சதைப் பிடிப்பற்ற பட்டையான உடலமைப்புடன், ஆரஞ்சு நிற துடுப்புடன் கூடிய இது, துடுப்பு மீன் (Oarfish) இனமாகும்.
இவை, மித வெப்ப மண்டல கடல் பகுதிகளிலும் அரிதாகவே காணப்படும். இது, அதிகபட்சமாக 16 மீட்டர் நீளம் வரை வளரக்கூடியது.
இந்த மீன் கரை ஒதுங்கினால் பேரழிவு வரும் என்பது ஜப்பான் உள்ளிட்ட ஆசிய நாடுகளின் நீண்ட கால நம்பிக்கை ஆகும். அதனால் இதற்கு ‘டூம்ஸ் டே’ மீன் என்ற பெயர் ஏற்பட்டது.
ஆனால், இதற்கான அறிவியல் ரீதியான ஆதாரம் இப்போது வரை இல்லை. அதனால், துடுப்பு மீன் பிடிபடுவதோ அல்லது கரை ஒதுங்குவதால் பேரழிவு ஏற்படும் என்பதோ வெறும் மூட நம்பிக்கையே’ என்று கூறினர்.
|
| |
| |
| #நியூஸ்நிஜம் |