05/01/2023
திருமந்திரம்
ஆன சமயம் அதுஇது நன்றெனும்
மாய மனிதர் மயக்க மதுஒழி
கானங் கடந்த கடவுளை நாடுமின்
ஊனங் கடந்த உருவது வாமே
பாடல் 1545
உருவாகிய சமயங்களில் அது நல்லது இது நல்லது எது நல்லது என்று மாயையில் சிக்குண்ட மனிதர்கள் தரும் போதையான தர்க்க வாதங்களை விடுத்து நாதம் கடந்த ஆதியான கடந்து உள் இருந்து இயக்கும் ஆற்றலான கடவுளை நாடினால், அனைத்து சமயங்களும் காட்டும் இறை உருவை ஊனைக் கடந்து உள்ளிருப்பதை உணரலாம்,என்கிறார் திருமூலநாயனார்.
சமயங்களையும், மதங்கள் காட்டும் போதனைகளையும் சொல்லி அறிவை மயக்கி அதற்கு அடிமையாக்கி விடாதீர்கள், மதுவைக் கொடுத்து மயக்குவதைக் காட்டிலும் மதபோதனைகள் கடுமையானது. மது போதை சிறிது காலமே, ஆனால் மதபோதை ஊழிக்காலம் வரை நம்மை விடாது. எனவே மதுவைக் கொடுத்தாவது மயக்குங்கள் மத போதனைகளில் மயங்கச் செய்யாதீர்கள் உலகீரே என்கிறார் நம் மகான் ஞான வள்ளல் பரஞ்ஜோதி மகான்.
அனைத்து மதங்களும் சமயங்களும் ஒரே கருவைக் கொண்டது தான், வழிமுறைகளில் பேதம் உள்ளது, ஆனால் அடைய வேண்டிய பொருள் மெய்ப்பொருள் ஒன்று தான். அது ஊன்கடந்து உள்ளே உணர்வுறும் மந்திரமாக உள்ளது, அதை வாசியப்பற்றி உள்ளே சென்று பற்றிட வேண்டும், அதுவே பற்றற்றான் பற்றாகும்.
இயமம் நியமம் ஆசனம் பிராணாயாமம் என்பன புறத்துக் கருவிகளைக் கொண்டு செய்யப்படும் கர்மங்களாகும். பிரத்யாகாரம், தாரணை தியானம், சமாதி அகக்கருவியான மனதை மட்டும் இயக்கும் கர்ம செயலாகும்.
பல கடவுள்களையும் வழிபடுபவர்கள் மாற்றிக் கொண்டே செல்வர், ஆனால் குருவை சரணடைந்தவர்கள் என்றும் மாறாதிருத்தல் வேண்டும். எந்தக் கடவுளை எந்தத் தோற்றத்தில் கண்ணுற்ற போதும் அது நமக்கு குரு உணர்வாகவே உணர்தல் வேண்டும். அதுவே சத்தியம் அதுவே சகலமும். அந்த உணர்வைத் தவிர பிரிதொரு கடவுள் எங்கும் இல்லை. அதை உணர்ந்தவர்கள் உண்மை நாத்திகர்கள். கடவுள் இல்லை என்று சொல்வது அறியாமை அது நாத்திகம் அல்ல. கடவுள் இல்லாமல் எதுவும் இல்லை என்பதே உண்மை நாத்திகம். இது மகான்களின் முடிவான கூற்று.
உள்ளதை உள்ளபடி உள்ளதை உள்ளவாறு உணர்வதே ஞானம், அதற்கு குருமார்கள் காட்டிய வழி யோகம்.
குருவழி சென்று நற்கதி அடைவோம்.
சந்தோஷம்
https://www.facebook.com/SanthoshamUPF/