பஞ்சுமிட்டாய் - Panchumittai

  • Home
  • பஞ்சுமிட்டாய் - Panchumittai

பஞ்சுமிட்டாய் - Panchumittai பஞ்சுமிட்டாய் சிறுவர் இதழ்
இதழ் தொடர்பான பதிவுகள் இங்கு பகிரப்படும்.

நிறம் என்பது வானவில்லும் ஓவியங்களும் மட்டுமல்ல, அறிவியல்-கலையின் எல்லையைத் தொடும் ஒரு பரிணாம வளர்ச்சி என்பதை நிரூபிக்கின...
07/06/2025

நிறம் என்பது வானவில்லும் ஓவியங்களும் மட்டுமல்ல, அறிவியல்-கலையின் எல்லையைத் தொடும் ஒரு பரிணாம வளர்ச்சி என்பதை நிரூபிக்கின்றன! இந்த நூல் இளம் வாசகர்களின் மனதில் இதுபோன்ற புதிர்களை ஆராயும் ஆர்வத்தைத் தூண்டலாம்!

நிறம் என்பது கலை, அறிவியல், வரலாறு மற்றும் மனித உணர்ச்சிகள் அனைத்தையும் இணைக்கும் ஒரு அற்புதமான துறை. இந்த நூல், குழந்தைகளுக்கு நிறங்களின் அறிவியலை எளிய மற்றும் சுவாரஸ்யமான முறையில் விளக்குகிறது.

நிறங்கள் பற்றிய இந்த நூல், கலை, பண்பாடு மற்றும் மனித உணர்ச்சிகளின் இணைப்பை அழகாக விளக்கி, தமிழ் உலகிற்கு ஒரு சிறந்த கொடையை அளிக்கிறது. இந்த அருமையான நூலை எழுதிய ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு அவர்களுக்கு எனது இதயபூர்வமான பாராட்டுக்கள்!

*- அறிவியலாளர் த. வி.வெங்கடேஸ்வரன் ( பேராசிரியர், இந்திய அறிவியல் கல்வி - ஆராய்ச்சி நிறுவனம், மொஹாலி)*

// இலவசமாக கிண்டில் தளத்தில் இன்று முதல் வாசிக்கலாம். நிறங்கள் குறித்த அறிவியல் வரலாறு இந்தப் புத்தகம்.
நண்பர்கள் வாசித்துவிட்டு உங்கள் கருத்துகளைப் பகிரவும்.
//

18/04/2025

*இலண்டனிலிருந்து அன்புடன் - 1*

// இயல் சிறுவர் மின்னிதழுக்காக நான் எழுதும் “இலண்டனிலிருந்து அன்புடன்” எனும் தொடர். ஆங்கிலச் சிறார் இலக்கியம் அறிமுகம் அதன் வழியே இலண்டனில் உள்ள வாசிப்பு பழக்கம் குறித்தும் சிறு அறிமுகம். தொடரின் முதல் பகுதி… வாய்ப்பளித்த ஆசிரியர் குழுவிற்கு நன்றி. //

வணக்கம் சுட்டிகளா,

“இயல்” சிறுவர் இதழ் புத்தம் புதிதாய் மலர்ந்துள்ளது. புதியது என்றாலே அதில் மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் நிறைந்திருக்கும். அந்தக் கொண்டாட்டத்தில் நானும் உங்களுடன் இணைகிறேன். அதுவும் எங்கிருந்து தெரியுமா? இலண்டனிலிருந்து…

“இலண்டனிலிருந்து அன்புடன்” எனும் தலைப்பில் உங்களை நான் ஒவ்வொரு இதழிலும் சந்திக்க இருக்கிறேன். இலண்டனில் பிரபலமான சிறுவர் புத்தகங்கள் பற்றித்தான் பேசப் போகிறோம். Virtual Reality கண்ணாடி அணிந்து கொண்டால் எப்படி இருக்கும்? அப்படிதான் நாம் அனைவரும் ஒன்றாகப் புத்தகங்கள் மூலம் இலண்டனைச் சுற்றிப் பார்க்கப் போகிறோம்.
என்ன? புத்தகங்கள் வழியே இலண்டனைச் சுற்றிப் பார்க்க நீங்கள் தயாரா?

இலண்டனின் மிக முக்கியமான அடையாளம் “தேம்ஸ் நதி”. திருவிழா, பண்டிகை என எந்த ஒரு முக்கியமான என்றாலும் மக்கள் தேம்ஸ் நதிக்கரையில் கூடிக் கொண்டாடுவார்கள். 2025ஆண்டு புத்தாண்டை வரவேற்க சுமார் ஒரு இலட்சம் மக்கள் தேம்ஸ் நதியோரம் கூடினர். பல இலட்சம் மக்கள் நேரலையில் இந்நிகழ்வைப் பார்த்தனர். சரியாக 12மணிக்கு பட்டாசுகளும் டிரோன் விளக்குகளும் இணைந்த வான வேடிக்கை நிகழ்வு தொடங்கியது.

இந்நிகழ்வில்தான் முதன்முதலாக hologauze animations பயன்படுத்தப்பட்டன. Hologauze animations என்பது புதுவகையான மாய பிம்பங்கள். “London Eye” என அறியப்படும் மிகப் பெரிய ராட்டினம் உள்ளது. அந்த இராட்டினத்தைச் சுற்றித்தான் hologauze animations நடைபெற்றன. ஆரம்பத்தில் hologauze animations மூலம் “Happy New Year” போன்ற வாழ்த்துச் செய்திகளே இடம் பெற்றன. ஆனால், நிகழ்வின் முடிவில் மாய திரையில் சிறப்பு விருந்தினர் ஒருவர் தோன்றி இன்ப அதிர்ச்சி தந்தார். அவர் யார் தெரியுமா?

இங்கிலாந்தின் பிரதமரோ, மறைந்த எலிசபத் ராணியோ, ராஜா பிலிப்போ, விளையாட்டு வீரரோ, நடிகரோ, இசைக் கலைஞரோ, விஞ்ஞானியோ அல்ல.

அங்குத் தோன்றியது, சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தமான, சிறார் இலக்கியத்தின் மிக முக்கிய கதாபாத்திரமான “பேடிங்கடன் கரடி”

ஆமாம்! பேடிங்கடன் கரடிதான் அன்றைய சிறப்பு விருந்தினர்.

நாடு, இனம், மொழி, மதம், கலாச்சாரம் என பல்வேறு வேறுபாடுகள் நிறைந்த மக்கள் வாழும் இடம் இங்கிலாந்து. வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாய் வாழும் சூழலை உருவாக்குவதே இங்கிலாந்து அரசின் நோக்கம். அந்த ஒற்றுமையை வலியுறுத்தும் செய்தியைத்தான் “பேடிங்கடன் கரடி” எனும் சிறுவர் புத்தகம் உலகிற்கு வழங்கியுள்ளது.
"As we enter the new year, I always remember what Mrs Brown says: in London everyone is different, but that means anyone can fit in. I think she must be right. Because although I don't look like anyone else, I really feel at home. Happy New Year, Love, from Paddington"

ஆமாம் செல்லங்களா! பேடிங்கடன் கரடி என்பது உலக அமைதியின் அடையாளமாய் விளங்குகிறது.

சரி! இவ்வளவு முக்கியமான பேடிங்கடன் புத்தகம் குறித்தும், அதன் ஆசிரியரான மைக்கேல் பாண்ட் குறித்தும் விரிவாக அடுத்த இதழில் பார்ப்போம்.

நன்றி,
பஞ்சு மிட்டாய் பிரபு

Please visit for more articles: https://www.iyal.net/post/love_from_london

புத்தகம்: கோலிக்குண்டு (இளையோருக்கான கவிதைகள்)தொகுப்பு: ந. பெரியசாமிவெளியீடு: ஓங்கில் கூட்டம்“Teen Poems” எனும் வகைமை “Y...
15/04/2025

புத்தகம்: கோலிக்குண்டு (இளையோருக்கான கவிதைகள்)
தொகுப்பு: ந. பெரியசாமி
வெளியீடு: ஓங்கில் கூட்டம்

“Teen Poems” எனும் வகைமை “Young Adult Literature”யில் மிக முக்கியமானது. ஆனால், தமிழில் இதுபோன்ற முயற்சிகள் மிகவும் குறைவானதே. பாடத்திலுள்ள செய்யுள்கள்கூட மனப்பாடப் பகுதி என்ற இடத்திலே நாம் வைத்திருக்கிறோம். டீன் பருவம் – கவிதைகளை உருவாக்கத் துடிக்கும் பருவம். காதல், நட்பு, தாய்மை போற்றுதல் என அது சில வட்டங்களிலே உலாவும்.

ந. பெரியசாமி அவர்களின் “கடைசி பெஞ்ச்” மூலம் இளையோர் கவிதைகள் எனும் வகைமையில் புதிய முயற்சிகளை எடுத்தோம். அதனைத் தொடர்ந்து சாக்லெட்டி எனும் கவிதைத் தொகுப்பையும் ஓங்கில் கூட்டம் வெளியிட்டது.

இந்த இரண்டு கவிதைத் தொகுப்புகளில் கிடைத்த ஆதரவைத் தொடர்ந்து தற்போது “கோலிக்குண்டு” எனும் கவிதை தொகுப்பை ஓங்கில் கூட்டம் வெளியிடுகிறது. தமிழில் கடந்த 10-15 ஆண்டுகளில் வெளியான கவிதைகளிலிருந்து, சமகாலத்துக் கவிஞர்களிடமிருந்து – சிறுவர்கள் மற்றும் இளையோர் உலகைப் பிரதிபலிக்கும் கவிதைகளைத் தேடித் தேடித் தொகுத்திருக்கிறார் கவிஞர் ந. பெரியசாமி.

இளையோருக்கான கவிதைகள் எனும் தளத்தில் மிகுந்த ஆர்வத்துடனும் அக்கறையுடனும் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

“கோலிக்குண்டு” இளையோர் இலக்கியத்தில் “Trend Setter” ஆக அமையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

தற்போது இந்தப் புத்தகம் கட்டணமின்றி கிண்டில் தளத்தில் கிடைக்கிறது. நண்பர்கள் அவசியம் தரவிறக்கம் செய்துகொள்ளவும்.

நன்றி,
பஞ்சு மிட்டாய் பிரபு

*இம்சை அரசர்கள் பராக் பராக்….– பஞ்சு மிட்டாய் பிரபு*“அதிசயத்திலும் அதிசயம்(உதயசங்கர்)” புத்தகத்தின் முன்னுரைராஜா ராணி கத...
23/02/2025

*இம்சை அரசர்கள் பராக் பராக்….– பஞ்சு மிட்டாய் பிரபு*

“அதிசயத்திலும் அதிசயம்(உதயசங்கர்)” புத்தகத்தின் முன்னுரை

ராஜா ராணி கதைகள் உங்களுக்குப் பிடிக்கும்தானே? ஆம் என்றால் ஒரு ஹை ஃபைவ் கொடுங்கள். என்னது, பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வரும் வீர தீர சாகசங்கள் நிறைந்த ராஜா கதையைவிட 23ஆம் புலிகேசி திரைப்படத்தில் வரும் இம்சை அரசரனின் கதைதான் உங்களுக்கும் அதிகம் பிடிக்குமா? அப்படி என்றால் இன்னொரு ஹை ஃபைவ் கொடுங்கள்.

மாயக் கண்ணாடி, அண்டாமழை, சூரியனின் கோபம், சுண்டெலியின் சிரிப்பு ஆகிய நூல்களின் வரிசையில் இதோ இன்னொரு புத்தகத்தைத் தந்துள்ளார் நமது உதயசங்கர் தாத்தா (எழுத்தாளர் உதயசங்கர்).

தினம் ஒரு அதிசயத்தைக் காட்டச் செல்லி மக்களை இம்சிக்கும் அதிசய ராஜா, சொர்க்கத்தில் இடம் வாங்கி தருகிறேன் என்று ஊரை ஏமாற்றும் கூறும் டிமுக்கோ ராஜா, மாளிகைகளைக் கட்டித் தள்ளும் மாளிகை ராஜா, இம்போசிசன் எழுதிக் கொண்டிருக்கும் ராஜா, இங்கிட்டு அங்கிட்டு என குதித்துக் கொண்டிருக்கும் ராஜா என பல ராஜாக்களை நீங்கள் இந்தப் புத்தகத்தில் சந்திக்க போறீங்க. சந்திப்பது மட்டுமல்ல இவர்களின் முட்டாள்தனத்தால் நடக்கும் நகைச்சுவை சம்பவங்களை ரசிப்பதோடு சிந்திக்கவும் போறீங்க.

இந்தக் கதைகளில் வரும் காட்சிகளை சுற்றத்தில் நீங்கள் நிஜ வாழ்வில்கூட ஏற்கனவே பார்த்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் சிறிய அளவிலான அதிகாரம் கிடைக்கும் இடங்களில் கூட மனிதர்கள் பல நேரங்களில் முட்டாள்தனமான செயல்களைச் செய்வதுண்டு. தங்களது அதிகாரத்தால் எதையும் சாதித்து விடலாம் என்று அவர்கள் நினைக்கின்றனர். ஆனால் சக மனிதர்கள் மீது கொண்ட அன்பு மட்டுமே என்றைக்கும் இவ்வுலகை இயக்கி வருகிறது என்பதை அவர்கள் மறந்துவிடுகின்றனர். அப்படி மறந்து போவதை மீண்டும் நினைவுப்படுத்திக் காட்டும் வேலைகளைதாம் கலைகளும் புத்தகங்களும் செய்கின்றன. அதுவும் நகைச்சுவையையும் நையாண்டியையும் இணைத்துத் தரும்போது அது சாமானிய மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுவிடுகிறது. அப்படி குழந்தைகளுக்கான கதைகளில் தொடர்ந்து இம்சை அரசர்களின் கதைகளை நமக்கு எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள் வழங்கி வருகிறார். குட்டி வாசகர்களான உங்கள் சார்பில் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்களும் இந்தக் கதைகளை வாசித்துவிட்டு எழுத்தாளர் உதயசங்கர் அவர்களுக்கு உங்கள் வாழ்த்தைப் பகிருங்கள். கதைகள் பற்றிய உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்.

அன்புடன்
பஞ்சு மிட்டாய் பிரபு

பிடித்த பாடம் என்று ஒன்று இருந்தால், பிடிக்காத பாடம் என்றும் ஒன்று இருக்கும்தானே. அப்படி எனது பள்ளி நாட்களில் பிடிக்காத ...
21/02/2025

பிடித்த பாடம் என்று ஒன்று இருந்தால், பிடிக்காத பாடம் என்றும் ஒன்று இருக்கும்தானே. அப்படி எனது பள்ளி நாட்களில் பிடிக்காத பாடம் என்றால் அது வரலாறுதான். வரலாறு பாடத்திலுள்ள வருடங்களும், வாயில் நுழையாத பெயர்களும் என்னை அதிகம் அச்சமூட்டின. பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிந்ததும், நான் என் அம்மாவிடம் “அப்பாடா! இனிமேல் வரலாற்றை படிக்க தேவையில்லை. எனக்கு விடுதலை கிடைத்துவிட்டது” என்று கூறி மகிழ்ந்தேன்.

ஆனால் நான் வளர்ந்து இலக்கிய புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்ததும், வரலாற்றைவிட சுவாரஸ்யமானது வேறொன்றுமில்லை என்ற உண்மையைக் கண்டறிந்தேன். அன்றிலிருந்து இன்றுவரை வரலாறும் நானும் இணைபிரியா நண்பர்களாகிவிட்டோம். அதற்கு முக்கியக் காரணம் என்ன தெரியுமா? இன்று நம் வாழ்வில் நாம் பார்க்கும் ஒவ்வொரு விசயத்திற்கும் ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறது. அது ஒரு புதிர் போல் வரலாற்றில் புதைந்துகிடக்கிறது. வரலாற்றைத் தேடித் தேடி வாசிப்பது மூலம் புதிருக்கான விடையை நாம் கண்டடைய முடியும்.

வரலாற்றைச் சுவராஸ்யமாகச் சொல்லும் புத்தகம்தான் "அப்பா ஒரு கதை சொல்றீங்களா...(பெரிய சாதனைகள், குட்டிக் கதைகள்" புத்தகம். பெயருக்குத் தகுந்தாற்போலவே இவை குட்டிக் கதைகள்தான் என்றாலும், அது சொல்லும் வரலாறு அனைத்துமே மிகவும் முக்கியமானவே. யாநிலா எனும் 12 வயது சிறுமியும் அவளது அப்பாவும் உரையாடும் வகையாக இந்தப் புத்தகம் அமைந்திருப்பது இதன் தனித்துவம். உங்களைப் போல் யாநிலாவும் அவளது அப்பாவிடம் ஏன், எப்படி, எதற்கு என்று கேள்விகள் கேட்டு அவரைத் திக்கு முக்காட வைக்கிறாள். அவளது அப்பாவும் எடக்கு முடக்காகக் கேட்கப்படும் கேள்விகளைச் சமாளித்து, ஒவ்வொரு கேள்விக்கும் கதையாக பதில் சொல்கிறார்.

இந்தப் புத்தகத்தில் மொத்தம் இருபது சூப்பர் ஹீரோக்கள் மற்றும் ஹீரோயின்களின் கதைகள் உள்ளன. இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஹிரோஷிமா, ஆப்பிரிக்கா, ஈராக், இத்தாலி போன்ற பல நாடுகளின் கதைகள் இவை. இந்த சூப்பர் ஹீரோ-ஹீரோயின்கள் ஏதோ பூச்சி கடித்தோ அல்லது விபத்து நடந்தோ அதன் வழியே அதீத சக்திகள் பெற்றவர்கள் அல்ல. மாறாக இவர்கள் நம்மைப் போல மிகவும் சாதாரண மனிதர்கள். தங்களுக்குப் பிடித்தத் துறையில் தனித்துவமாகப் பணியாற்றி ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சரியான முடிவை எடுத்ததால் சூப்பர் ஹீரோ- ஹீரோயின்களாக மாறியவர்கள். அப்படி இவர்களது வாழ்வில் நடந்த கதைதான் என்ன? வாருங்கள்! புத்தகத்தை வாசித்துத் தெரிந்துகொள்வோம்.

இதிலுள்ள ஒவ்வொரு கதையையும் நீங்கள் மிகவும் ரசிப்பீர்கள். உங்களுக்கு வரலாறு பிடித்தமான பாடம் என்றால் இந்தப் புத்தகத்தை வாசித்து முடித்ததும் உங்களுக்கு வரலாறு இன்னும் அதிகமாகப் பிடிக்கும். உங்களுக்கு வரலாறு வேப்பங்காய் போல் கசக்கும் என்றால், இந்தப் புத்தகத்தை வாசித்து முடித்ததும் நீங்களும் என்னைப் போலவே, “வரலாற்றைவிட சுவாரஸ்யமானது வேறில்லை” என்று கட்டாயம் சொல்வீர்கள்.

இந்தப் புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் சிந்தன் அவர்களுக்கும், சிந்தன் அவர்களைக் கேள்விகள் கேட்டு திக்கு முக்காட வைத்த யாநிலாவிற்கும் எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும். நீங்களும் வாசித்துவிட்டு, உங்கள் மனதில் தோன்றிய கருத்துகளை, கேள்விகளைப் பகிருங்கள்.

நன்றி,

பஞ்சு மிட்டாய் பிரபு

குறிப்பு: "அப்பா ஒரு கதை சொல்றீங்களா...(பெரிய சாதனைகள், குட்டிக் கதைகள்" புத்தகத்தின் முன்னுரை

பஞ்சு மிட்டாய் சிறுவர் புத்தகம் பஞ்சு மிட்டாய் சிறுவர் காலாண்டிதழ் இனி பஞ்சு மிட்டாய் சிறுவர் புத்தகம் என்ற பெயரில் வெளி...
20/02/2025

பஞ்சு மிட்டாய் சிறுவர் புத்தகம்



பஞ்சு மிட்டாய் சிறுவர் காலாண்டிதழ் இனி பஞ்சு மிட்டாய் சிறுவர் புத்தகம் என்ற பெயரில் வெளிவர இருக்கிறது.

நடைமுறை சிக்கல்கள் காரணமாக இதழ் என்ற பெயரில் இயங்காது, இனி புத்தக வடிவில் இயங்க இருக்கிறது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதே துள்ளல், அதே குதூகலத்துடன் வண்ணமயமான பஞ்சு மிட்டாய் தொடர்ந்து சிறுவர்கள் கையில் வந்தடையும். உங்களுடைய தொடர் ஆதரவு அதற்குத் துணை நிற்கும் என்ற நம்பிக்கையுடன்…

நன்றி

“பஞ்சு மிட்டாய் & ஓங்கில் கூட்டம்” சிறுவர் நூல்கள்

Eco-Criticism / Green Studies / Environmental texts: இலக்கியத்தையும் சூழலியலையும் தொடர்புப்படுத்தும் சொற்கள் இவை. மனிதர்...
16/02/2025

Eco-Criticism / Green Studies / Environmental texts: இலக்கியத்தையும் சூழலியலையும் தொடர்புப்படுத்தும் சொற்கள் இவை. மனிதர்களுக்கும் இயற்கைக்கும் உள்ள உறவைக் குறித்துப் பேசும் இலக்கியங்களைக் கவனித்து அதனை முதன்மைப்படுத்தி சூழலியல் பார்வையில் விவாதிப்பதே Eco-Criticism.

“The Country and the City - Raymond Williams”(16ஆம் நூற்றாண்டிலிருந்து ஆங்கில இலக்கியங்கள் எவ்வாறெல்லாம் தங்களது நிலங்களை விவரிக்கிறது என்று ஆய்வு செய்யும் புத்தகம்), “Home at Grasmere: Ecological holiness - Karl Kroeber” (William Wordsworth & Dorothy Wordsworth எழுத்துகளில் விவரிக்கப்படும் நிலம் குறித்து ஆய்வு செய்யும் கட்டுரை) - இந்தப் படைப்புகள்தாம் முதன்முதலில் சூழலியலை விமர்சன இலக்கியத்தில் அறிமுகப்படுத்தியது என்கின்றனர் இலக்கிய விமர்சகர்கள். அதன் பிறகு 1978ஆம் ஆண்டு அமெரிக்க எழுத்தாளர் வில்லியம் ரக்கெர்ட் (William Rueckert) என்பவர் “Literature and Ecology: An Experiment in Ecocriticism” என்ற தனது ஆய்வுக் கட்டுரை வழியே Eco-Criticism எனும் ஒரு சொல்லை அறிமுகம் செய்கிறார். தற்போது அச்சொல் விமர்சன இலக்கியம் எனும் எல்லையைக் கடந்து சூழலியல் படைப்புகளைக் குறிக்கும் சொல்லாக இருந்து வருகிறது.

சூழலியலில் நான்கு முக்கிய கோட்பாடுகள் உள்ளன.

1. உலகிலுள்ள உயிரினங்கள் அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்து வாழ்கின்றன.
2. இயற்கை அனைத்தையும் மறு உற்பத்தி செய்யக்கூடியது
3. எது சரியானது என்பது இயற்கைக்குத் தெரியும்
4. பயனுள்ள வளங்களையெல்லாம் பயனற்றதாக மாற்றுவதே இயற்கை சுரண்டலுக்கு நாம் கொடுக்கும் பெரும் விலை.

இதன் அடிப்படையிலும் சூழலியல் எழுத்துகள் விவாதிக்கப்படுகின்றன. மேற்கத்திய நாடுகளைப் பொறுத்த வரை சூழலியல் இலக்கியத்தில் இரண்டு அலைகள் வீசியதாகக் குறிப்பிடுகின்றனர்.

To Read more:

தமிழ்ச் சிறார் இலக்கியமும் சூழலியலும் (Eco-Criticism on Tamil Children Literature) – பஞ்சு மிட்டாய் பிரபு 16th February 2025 admin No Comments பஞ்சுமிட்டாய் பக்.....

விஞ்ஞானி என்றதும் நம் மனதுக்கு ஒரு பிம்பம் தோன்றும். ஒரு வெள்ளை அங்கி, கையில் ரசாயனம் உள்ள ஒரு குடுவை, ஓர் அறைக்குள் அமர...
21/01/2025

விஞ்ஞானி என்றதும் நம் மனதுக்கு ஒரு பிம்பம் தோன்றும். ஒரு வெள்ளை அங்கி, கையில் ரசாயனம் உள்ள ஒரு குடுவை, ஓர் அறைக்குள் அமர்ந்து நுண்ணோக்கியைப் பார்த்துக் கொண்டிருப்பார். கூகுள் தேடலில் ‘scientist’ என்று தட்டச்சு செய்து படங்களைத் தேடினாலும், இப்படியான படங்கள்தாம் நமக்குக் கிடைக்கின்றன. விஞ்ஞானம் இவ்வளவு வளர்ந்து நிற்கும் இந்த நாளில் கூட நாம் இப்படியான ஒன்றைத்தான் கற்பனை செய்கிறோம். இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே ஹம்போல்ட் இந்த கற்பனையை மாற்றியவர். ஹம்போல்ட் வாழ்ந்த காலம் 1769 – 1859. ஓர் அறைக்குள்ளும் குடுவைக்குள்ளும் விஞ்ஞானம் ஒளிந்திருக்கவில்லை. விஞ்ஞானிகள் அறையை விட்டு வெளியே வர வேண்டும். உலகை கவனிக்க வேண்டும். பின்னிப்பிணைந்திருக்கும் இயற்கை நமக்கு அவ்வளவு அறிவியலைத் தருகிறது என்று சொல்லி ஆய்வுலகின் திசையை மாற்றிய ஒரு விஞ்ஞானிதான் அலெக்சாண்டர் வான் ஹம்போல்ட்.

அலெக்சாண்டர் வான் ஹம்போல்ட் யார்? அறிவியல் & சூழலியலில் அவரது பங்களிப்பு என்ன? போன்ற பல கேள்விகளுக்கு இந்தப் புத்தகம் பதிலளிக்கும்.

டீன் குழந்தைகளுக்கென நேரடியாகத் தமிழில் எழுதியுள்ளார் முனைவர் ஹேமபிரபா. ஓவியர் செந்திலும் அழகிய ஓவியங்களும் இதில் இடம் பெற்றுள்ளன.

ஓங்கில் கூட்த்தின் வெளியீடான இந்தப் புத்தகத்தை அமேசான் கிண்டில் தளத்தில் தற்போது இலவசமாகப் படிக்கலாம்.

லிங் முதல் கமெண்டில்

www.tncwaa.co.inதமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர் சங்கம் ஜூன் 2021இல் துவங்கப்பட்டது, சங்கத்தின் செயல்பாடுகளை ஆவணப்படுத...
19/10/2024

www.tncwaa.co.in

தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர் சங்கம் ஜூன் 2021இல் துவங்கப்பட்டது, சங்கத்தின் செயல்பாடுகளை ஆவணப்படுத்தவும் சமகால சிறார் கலை-இலக்கியப் போக்குகளை ஆவண்பட்டுத்த ஓர் இணையதளத்தைத் தற்போது சங்கம் தொடங்கியுள்ளது.

இந்த இணையதளம் சிறார் நலனை முன்னிருத்தி எழுத்தாளர்களையும், கலைஞர்களையும் கருத்துகள் வழியே இணைக்கும் பாலமாக அமையும்.

நண்பர்கள் இணையத்தளத்திற்கு ஆதரவு தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நாளை காலை 11 மணிக்கு நிகழ்விற்கு வாய்ப்புள்ள நண்பர்கள் அவசியம் கலந்துகொள்ளும்படி அன்புடன் அழைக்கிறோம்.
07/09/2024

நாளை காலை 11 மணிக்கு நிகழ்விற்கு வாய்ப்புள்ள நண்பர்கள் அவசியம் கலந்துகொள்ளும்படி அன்புடன் அழைக்கிறோம்.

“உண்மையான கல்வி என்பது நம் சுற்றத்தை வலிமைப்படுத்துவதிலும், நாம் வாழ்ந்த சூழலிலிருந்து இவ்வுலகை சற்று மேன்மைப்படுத்துவதி...
05/09/2024

“உண்மையான கல்வி என்பது நம் சுற்றத்தை வலிமைப்படுத்துவதிலும், நாம் வாழ்ந்த சூழலிலிருந்து இவ்வுலகை சற்று மேன்மைப்படுத்துவதிலுமே இருக்கிறது.”

- ஜோதிபா பூலே

ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினம் வரும்போதெல்லாம் சமூக ஊடகங்களில் அதிகம் பேசப்படுபவர் "சாவித்திரிபாய்" அவர்கள். தலை நிமிர்ந்து பார்ப்பதுகூட தவறு என்று சொன்ன காலத்தில்தான் சாவித்திரிபாய் ஆசிரியராக மாறி சாலைகளில் கம்பீரமாகச் செல்கிறார். பழமைவாதச் சிந்தனைகளால் ஊறிக்கிடந்த காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும்-பெண்களுக்காகவும் பள்ளிகளை திறந்துள்ளனர் பூலே தம்பதியினர். ஜோதிபா குறிப்பிட்டுள்ள "உண்மையான கல்வி" என்பதை அவர்களின் வாழ்வின் வழியாகவே நாம் காண முடிகிறது. பூலே தம்பதியினரின் சமூகச் சீர்த்திருத்தப் பணிகள் என்பது பல்வேறு தளங்களில் இருக்கின்றன. அதுமட்டுமல்ல, நம் தேசத்தின் பல்வேறு சமூகச் சீர்த்திருத்த முயற்சிகளுக்கும் பூலே தம்பதியினர் ஒரு முன்னுதாரணமாக இருந்துள்ளனர். அவர்களின் வாழ்வை நாம் வெவ்வேறு வடிவில் உரையாட வேண்டும். அதிலும் குறிப்பாக மாணவர்களோடு நாம் பேசிட வேண்டும். அந்த நோக்கில் உருவானதுதான் "சாவித்திரியின் பள்ளி". இந்தப் புத்தகம் சாவித்திரியின்பாயின் கல்விப் பணிகளைப் பற்றி பேசுகிறது.

இந்தப் புத்தகத்தில் சாவித்திரிபாயுடன் நிறைய பெண்கள் வருகின்றனர். சகுணா பாய், ஃபாத்திமா, தாராபாய், பரார், முக்தா சால்வே - இவர்கள் வழியாக சாவித்திரிபாய் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளைப் பேசியுள்ளேன். சாவித்திரிபாய்-ஜோதிபா இந்தப் பெயர்கள் நம் கல்விக்கான அடையாளங்கள் என்றே சொல்ல வேண்டும். நண்பர்கள் வாசித்துவிட்டு உங்கள் கருத்துகளைப் பகிரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி
பஞ்சு மிட்டாய் பிரபு

1975ஆம் ஆண்டில் குழந்தை எழுத்தாளர் சங்க வெள்ளி விழாவை ஒட்டி “தமிழில் குழந்தை இலக்கியம் – ஒரு மதிப்பீடு” என்ற தலைப்பில் க...
23/07/2024

1975ஆம் ஆண்டில் குழந்தை எழுத்தாளர் சங்க வெள்ளி விழாவை ஒட்டி “தமிழில் குழந்தை இலக்கியம் – ஒரு மதிப்பீடு” என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், வாழ்க்கை வரலாறு, அறிவியல், பத்திரிகை, திரைப்படம், வானொலி, தொலைக்காட்சி ஆகியன குறித்த நூலை வெளியிட்டது. சுமார் 48 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் & கலைஞர்கள் சங்கம் அதற்கு ஈடான நூலை வெளியிட்டுள்ளதாகக் கருதுகிறேன். வரலாற்று மதிப்புமிக்க இந்நூலை எல்லோரும் படித்துப் பாதுகாக்க வேண்டும்.

- சிறார் எழுத்தாளர் சுகுமாரன்

Address


Alerts

Be the first to know and let us send you an email when பஞ்சுமிட்டாய் - Panchumittai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to பஞ்சுமிட்டாய் - Panchumittai:

  • Want your business to be the top-listed Media Company?

Share