23/05/2025
தீவிரமடைகிறது தென்மேற்கு பருவமழை
(சற்று நீண்ட பதிவு முழுமையாக படிக்கவும்)
MJO ஈரப்பத அலைவு இந்தியா பெருங்கடலில் இருப்பது, கடல் மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் அரபிக்கடல் மற்றும் வங்ககடலில் உருவாகி வடக்கு நோக்கி நகரும் சிஸ்டங்களால் பருவகாற்றை வலுவாக கிழக்கு நோக்கி ஈர்ப்பதால் கேரளா, கர்நாடக உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சற்று மிக வலுவான ஈரப்பதம் குவிக்கப்படுகிறது..
இதனால் 10 நாட்கள் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கியது. மே 23 இரவு முதல் மே இறுதி வரை பருவமழை கேரளா முதல் ஏறத்தாழ மும்பை வரை தீவிரமாக இருக்கும்... ஜான் 1-3 வரை லேசான/மிதமான பருவமழையாக இருக்கும். சாதகமற்ற மழைக்காரணிகளால் ஜூன் மாதத்தில் ஏறத்தாழ 10/15 வரை பருவமழை குறைந்திருக்க வாய்ப்புள்ளது..அப்போது தமிழகத்தில் வெப்பசலன மழை இருக்கலாம்.
மே 25/26 முதல் ஏறத்தாழ மே 28/29 வரை பருவமழை மேற்கே தீவிரமாக இருக்கும்..
இதனால் கேரளா, கர்நாடக மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்று மாலை/இரவு முதல் படிப்படியாக பருவமழை அதிகரிக்கும்.. கேரளா, கர்நாடகவில பரவலாக நல்ல மழை இருக்கும்.. சில இடங்களில் வெள்ளப்பெருக்கு கூட ஏற்பட வாய்ப்புள்ளது. அதை நிகழ்நேரத்தில் தான் மேக உற்பத்தியை பொருத்து உறுதிபடுத்த இயலும்..
நீலகிரி, வால்பாறை, மூணாறு, நெல்லை, வயநாடு போன்ற இன்னும் ஒரிரு மேற்கு மேற்கு தொடச்சி மலைப்பகுதிகளில் கன/மிக கன மழை வரை இருக்கும்.. அவலாஞ்சி போன்ற ஏதாவது ஒரிரு இடங்களில் தீவிர மழையும் இருக்கலாம். ஆனால் தற்போது உறுதிபடுத்த இயலாது. நிகழ்நேரத்தில் பார்ப்போம்..
இதனால் தமிழக அணைகளுக்கு நீர்வரத்து படிபடியாக அதிகரிக்கும். காவேரி, பவானி, அமராவதி, சிறுவானி, பரம்பிக்குளம், சோலையார் போன்ற ஏறத்தாழ அனேக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும்.
கொங்கு பகுதிகளி்ல் அவ்வப்போது சாரல்/லேசான மழை இருக்கும்.. மிக வலுவான காற்றை ஈர்ப்பதை பொருத்து லேசான/மிதமான மழை இருக்கலாம்.. கோவை தெற்கு பொள்ளச்சி சுற்று வட்டாரங்களில் மிதமான/கன மழை வரை இருக்கலாம்.. கொங்கு பகுதிகளில் இன்று இரவு முதல் மேற்கு திசை காற்று வலுப்பெற்று இருக்கும்..
இதனால் சுற்றுலா பயணிகள் மேற்கு தொடர்ச்சி மலைப்பிரதேசங்களுக்கு (வெள்ளியங்கிரி, நீலகிரி மேற்கு, மூணாறு, வால்பாறை, கேரளா ) போன்ற பகுதிகளுக்கு செல்வதை மே இறுதிவரை தவிர்ப்பது நல்லது.
கணினி சார்ந்த மாதிரிகள் மேற்கு தொடர்ச்சியில் தீவிர மழைப்பொழிவை காட்டுகிறது. ஆனால் எந்தளவிற்கு இருக்கும் என்று நிகழ்நேரத்தில் தான் தெரியவரும்.
#கொங்கு பகுதியை மே மாதத்தில் ஏமாற்றி விடைப்பெற்ற கார்மழை
ITCZ, MJO, கடல் மேற்பரப்பு வெப்பநிலை, சிஸ்டத்தின் ஈரப்பதம் என அனேக மழைக்காரணிகளும் சாதகமாக இருந்தும் நம் கொங்கு பகுதி, தென் உள் மாவட்டத்தை மே மாதத்தில் ஏமாற்றியது..
இவ்வளவு மழைக்காரணிகளும் சாதகமாக இருப்பதால் தான் கொங்கு பகுதிக்கு கடந்த பதிவில் இறுதிகட்ட கார்மழை பரவலாக நல்ல மழை கிடைக்கும் என்றும், தீவிரமாக இருக்கும் என்றும், மேகங்கள் நீண்ட தூரம் பயணிக்கும் என்றும் கூறியிருந்தோம்... அதேபோல தீவிரமாகவும் இருந்தது, மேகங்களும் நீண்ட தூரம் பயணித்து பெய்தது.(திருவண்ணா மலை, வேலூரில் உருவான மேகங்கள் டெல்டாவையும் தாண்டி தெற்கு/தென்கிழக்கில் நகர்நது பெய்தது.) ஆனால் நமக்கு பரவலாக இல்லை.. மத்திய மாவட்டங்கள், கடலோரம், கடலோர உட்பகுதி, டெல்டா, வட மாவட்டங்கள், வட உள் மாவட்டங்கள் என பரவலாக 3 முறை பரவலாக நல்ல மழை கிடைத்தது..
கொங்கு பகுதிக்கு இறுதிகட்ட கார்மழை ஏமாற்றியது எப்படி
மே மாதத்தில் பெரும்பாலும் மேற்கு திசை காற்று வலுவாக வீசும். இதனால் காற்று குவிதலானது வட உள் மாவட்டங்களில் தான் குவியும்.. அவ்வாறு வட உள் மாவட்டங்களில் குவிந்து வலுவான பரந்த மேகங்கள் உற்பத்தியாகி அந்த வலுவான மேகங்கள் கொங்கு பகுதியை நோக்கி மேற்கு, தென்மேற்கில் நகர்ந்து கொங்கு பகுதிகளில் பரவலான மழை கிடைக்கும். கடந்த காலங்களிலும் இதுபோன்று தென்மேற்கில் நகர்ந்து பரவலாக நல்ல மழையை கொடுத்திருக்கிறது.
இந்தாண்டும் காற்று குவிதல் வட மாவட்டங்களில் குவிந்து வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பரவலான வலுவான மேகங்கள் உற்பத்தியாகி மேற்கு/தென்மேற்கு பதிலாக வங்க கடல் சிஸ்டம் காரணமாக கொங்கு பகுதிக்கு வரவேண்டிய மேகங்கள் திசை மாறி தெற்கு/தென்கிழக்கு நோக்கி 3 முறை நகர்ந்து டெல்டா வரை பரவலாக நல்ல மழை இருந்தது..
பொதுவாக கார்மழையானது தமிழகத்தில் நம் கொங்கு பகுதி, மத்திய மாவட்டங்கள், தென் உள் மாவட்டங்களுக்கே அதிகம் பொருந்தும்.. கார்மழை காலத்தில் கடலோர பகுதி மற்றும் அதன் உள் மாவட்டங்களுக்கு பெரிதாக மழை இருக்காது. ஒரிரு முறை மட்டுமே மழை இருக்கும்... ஆனால் இந்த முறை தலைகீழா மாறியது.. கொங்கு பகுதி, தென் உள் மாவட்டத்திற்கு மே மாத மிக குறைவு.. கிழக்கே அதிக மழையை பெற்றது.. சில நண்பர்கள் மேற்கு திசை காற்று காரணமாகவே கொங்கு பகுதிக்கு மழை இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால் வேலூர், திருவண்ணாமலை போன்ற சுற்று வட்டார மாவட்டங்களில் உருவாகும் மேகங்கள் மேற்கு திசை காற்றை எதிர்த்து மேற்கு, தென்மேற்கு திசையில் மேற்கு திசை காற்றை கிழித்து கொண்டு தென்மேற்கில் நகர்ந்து கொங்கு பகுதியில் நல்ல மழையை தரும். கடந்த காலங்களில் அவ்வாறே நடந்துள்ளதை படத்தில் காணலாம். ஆனால் இந்தாண்டு வங்ககடலின் சிஸ்டத்தின் காற்றின் திசை மழைமேகங்களை தெற்கு/ தென்கிழக்கா நகர செய்தது.. மே மாதத்தில் தமிழக கிழக்கு பகுதிகளில் 5முறை பரவலான மழையும் அதில் 3 முறை மிக பரவலான மழையும் இருந்தது. இதனால் தான் இயல்பை விட மிக அதிக மழை. இதே கொங்கு பகுதிக்கு மே மாதத்தில் ஒர் பரவலான மழை தான் இருந்தது. இதனால் தான் மே மாதத்தில் கொங்கு பகுதிக்கு பற்றாக்குறை.
கிழக்கே கடலோர பகுதி மற்றும் அதன் உள் பகுதிகளில் தற்போது மழை பெரிதாக இருக்காது மாறாக ஆனி, ஆடி, ஆவணியில் மேற்கே பருவமழை தீவிரம் குறைவாக இருக்கும்போது தமிழக கிழக்கு பகுதிகளில் அவ்வப்போது பரவலாக நல்ல மழை இருக்கும்.. அந்த சமயத்தில் நமக்கு பெரிதாக மழை இருக்காது.. ஆவணிக்கு பின் தான் அங்கு மழை குறைந்து நமக்கு புரட்டாசிகால மழை ஆரம்பமாகும்.. ஆனால் இந்த முறை கார்மழையும் நன்றாக பெய்துள்ளது. இனி ஆனி முதல் ஆவணி வரை அங்கு மழை இருக்கும்.. ஆனால் கொங்கு பகுதி மக்கள் பரவலான மழைக்கு புரட்டாசிகால மழை வரை காத்திருக்க வேண்டியுள்ளது..
கொங்கு பகுதிக்கு இயல்பான கார்மழை பதிவாகியுள்ளது. ஆனால் மார்ச், ஏப்ரலில் ஒரிரு முறை பரவலாக பதிவானதே தற்போது இயல்புக்கு வந்துள்ளது.. மே மாதத்தில் கொங்கு பகுதிகளில் சில/பல இடங்களை தவிர்த்து பரவலாக பற்றாக்குறை நிலவுகிறது.. ஆனால் வடகிழக்கு கொங்கு பகுதி, மத்திய மாவட்டங்களில் ஒரளவிற்கு நல்ல மழை பதிவானது.
இந்தாண்டு மேற்கே பருவமழை தீவிரம் மிகவும் குறைந்து இருக்கும்போது. கொங்கு பகுதியில் காற்று பகுதி உட்பட ஒரிரு மழையாவது கிடைக்க வாய்ப்பிருக்கிறது ஆனால் உறுதிபடுத்த இயலாது.. தமிழகத்தில் இந்தாண்டு கார்மழை இயல்பை விட 92% அதிகமாக பெய்துள்ளது.
இந்தாண்டு கார்மழையும், தென்மேற்கு பருவமழையும் முன்கூட்டியே தொடங்கியுள்ளதால் புரட்டாசிகால மழையும் இந்தாண்டு முன்கூட்டியே தொடங்க வாய்ப்பிருக்கிறது..