26/09/2024
ஆலங்கட்டி மழை…
பக்கிங்ஹாம் அரண்மனை
லண்டன் பள்ளியின் கோடை விடுமுறையைக் கணக்கிட்டே பயணத்தைத் திட்டமிட்டோம். ஜூலை மாதம் இரவு 10 மணி வரை வெயில் அடித்து, காலை 5 மணிக்கே விடிந்தது. இந்த செப்டம்பரில் மழைக் காலம் தொடங்கிவிட்டது. இரவு 7 மணிக்கு இருட்டி காலை 7 மணிக்கு விடிகிறது. இது இன்னும் குறைந்து மாலை 3 மணிக்கே இருட்டிவிடும் என்கிறார்கள்.
ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய இரண்டு மாதங்கள் மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படும் பக்கிங்ஹாம் அரண்மனைக்குச் செல்ல திட்டமிட்டிருந்தோம். கிளம்பிய நேரத்தில் சடச்சடவென ஆலங்கட்டி மழை. பள்ளி வயதில் ஆலங்கட்டி மழையை நேரில் பார்த்தது. இப்போது கண் முன்னே பால்கனியில் பிரமிப்பான மழை அனுபவம். குட்டிக்குட்டி கற்கண்டாகத் தெறிந்த ஐஸ் துளிகளை எடுத்து வாயில் போடுவதற்குள் கரைந்து கரைந்து விளையாட்டு காட்டியது. லண்டனிலும் ஆலங்கட்டி மழை அபூர்வமாகவே பெய்கிறதாம்.
இந்த மழையில் அரண்மனைக்குச் செல்ல முடியாது, போட்ட டிக்கெட் பணம் வீண் என்றே நினைத்தேன். ஆனால், இன்னும் 10 நிமிடத்தில் வெயில் வந்துவிடும், கிளம்புங்கள் என்று மகன் சொன்னதை முதலில் நம்பவில்லை. ஆனால், அதுவே நடந்தது. மழை நின்றதும் சுள்ளென்று வெயில் அடித்தது. அரை மணி நேரத்துக்கு ஒரு முறை வானிலை மாறுகிறது என்றாலும், அத்தனை துல்லியமாகக் கணித்துத் தருகிறார்கள்.
இங்கிலாந்து அரசரின் அதிகாரபூர்வ இல்லமே பக்கிங்ஹாம் அரண்மனை. 1703ம் ஆண்டு பக்கிங்ஹாம் பிரபு கட்டத் தொடங்கிய அரண்மனையை அடுத்த 200 வருடங்கள் அடுத்தடுத்து வந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பிரமாண்டமாக மாற்றியிருக்கிறார்கள். 1837ம் ஆண்டு விக்டோரியா மகாராணி இங்கிருந்து ராணியாக ஆட்சி புரிந்திருக்கிறார்.
ராணியைச் சந்திக்க வரும் நபர்களின் அந்தஸ்துக்கு ஏற்ப தங்க வைப்பதற்கு ஏழெட்டு வகையில் வரவேற்பு அறைகள், தர்பார் ஹால், நடனமாடும் அறை, கேளிக்கை அறை, இசைக் கருவிகள் அறை, மார்பிள் சிலைகள் அறை என 19 பிரமாண்ட அறைகளும் 52 படுக்கையறைகளும் உள்ளன. இது தவிர பணியாளர்கள், அலுவலர்களுக்கு 250 அறைகள். நமது திருமலை நாயக்கர் மஹாலை விட 100 மடங்கு பெரிது என்று வேண்டுமானால் சுருக்கமாக சொல்லிக்கொள்ளலாம்.
இந்த அரண்மனை முழுக்கவே தங்கமுலாம் பூசப்பட்டுள்ள காரணத்தால் ஐந்து அடிக்கு ஒரு பாதுகாவலர் நிற்கிறார். சிலை மட்டுமின்றி சுவர், தூண்களையும் தொட்டுப் பார்க்க முடியாத அளவுக்கு கண்ணாடியால் அடைத்திருக்கிறார்கள். போட்டோ, வீடியோ எடுப்பது தடை செய்யப்பட்டிருக்கிறது. எங்கெங்கும் பாதுகாவலர்கள் முறைத்துக்கொண்டு நிற்பதால் பளிங்குச் சிலைகள், உலகப் புகழ் ஓவியங்கள், வித்தியாசமான கூரைகளை ரசிப்பதற்குத் தயக்கமாகவே இருக்கிறது. இங்கிருக்கும் சில படங்கள் இணையத்தில் எடுத்தவையே.
பொதுமக்களை உப்பரிகையில் இருந்து பார்க்கும் வகையில் மிகப்பெரிய மைதானம், மிகப்பெரிய புல்வெளி என்று எல்லாமே பிரமாண்டம். இந்த அரண்மனைக்கு முன்பாக ஆண்டு தோறும், ‘தி சேஞ்சிங் ஆஃப் கார்ட்ஸ்’ நிகழ்ச்சிக்காக 50 ஆயிரம் பேர் ஒன்று கூடுவது முக்கியமான நிகழ்வு என்கிறார்கள்.
அரண்மனையின் ஒவ்வொரு அங்குலத்தையும் சித்திரங்கள், கலைப்பொருட்கள், சிற்பங்கள் அலங்கரிக்கின்றன என்றாலும் ஏதோ ஜெயிலுக்குள் நுழைந்து திரும்பிய அனுபவமே கிடைக்கிறது.