24/11/2025
குவைத் தமிழ் மக்கள் சேவை மையம்
#முக்கியசெய்தி
குவைத்திலிருந்து இந்தியர்கள் விடுமுறைக்கு பத்திரமாக போயிட்டு வாங்க பாஸ்போர்ட் முக்கியம் மக்களே.....
எச்சரிக்கை பதிவு.....
இந்தியாவில் ஏற்கனவே உள்ள போக்குவரத்து விதிமீறல் வழக்கின் அடிப்படையில் தனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க மறுத்த குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் நடவடிக்கைக்கு எதிராக இந்தியர் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
தற்போது குவைத்தில் வசிக்கின்றவரும் குஜராத்தை பூர்வீகமாகக் கொண்டவருமான முஹ்சின் சுர்தி, குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் நடவடிக்கைக்கு எதிராக குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்தியாவில் தவறான திசையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக குஜராத்தில் அவருக்கு எதிராக ஒரு குற்றவியல்(கிரிமினல்) வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. இந்தக் காரணத்தைக் கூறி, குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் தனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க மறுத்துவிட்டது என்றார். இதனால் தனது வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும் என்று முஹ்சின் சுர்தி அஞ்சுகிறார்.
தற்போது குவைத்தில் செல்லுபடியாகும்(வேலிடிட்டி)
விசாவில் பணிபுரியும் 46 வயதான இவர், குஜராத்தின் மஹிசாகரில் உள்ள தனது மனைவி மூலம் குஜராத் உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். தூதரகத்தின் இந்த முடிவு அவரது வேலை மற்றும் குடியிருப்பு அனுமதியை இழக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில்,
தனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்காவிட்டால், அவர் நாடு கடத்தப்பட்டு நிரந்தரமாக கருப்பு பட்டியலில் சேர்க்கப்படுவார் என்றும், இது எதிர்காலத்தில் குவைத் அல்லது வேறு எந்த வளைகுடா நாட்டிற்கும் நுழைவதைத் தடுக்கும் என்றும் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், முஹ்சின் சுர்தி தெரிவித்துள்ளார்.
மேலும் 2016 இல் வழங்கப்பட்ட முஹ்சின் சுர்தியின் பாஸ்போர்ட் ஜனவரி 30, 2026 அன்று காலாவதியாகிறது. ஆகஸ்ட் 7, 2025 அன்று, முஹ்சின் குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் புதுப்பிப்புக்காக விண்ணப்பித்தார். இருப்பினும், ஆகஸ்ட் 25 அன்று, இந்தியாவில் ஏற்கனவே உள்ள #குற்றவியல் வழக்கைக் காரணம் காட்டி, தூதரகம் அவரது விண்ணப்பத்தை நிராகரித்ததாக மனுவில் கூறப்பட்டுள்ளது. தற்காலிக பாஸ்போர்ட்டைப் பெறுவதற்கு கூட, வழக்கு தொடர்பான அறிக்கை அல்லது நீதிமன்ற உத்தரவை அவர் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் #தூதரகம் கூறிவிட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
#2024ஆம்ஆண்டு இந்தியாவிற்கு சென்றிருந்த போது தவறான பாதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியது ஆகியவற்றிற்காக லுனாவாடா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை சுர்தி பின்னர் கண்டுபிடித்தார். இந்த விவகாரம் ஒரு வழக்கறிஞர் மூலம் தீர்க்கப்பட்ட போதிலும், வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக முஹ்சின் சுர்தி கூறினார். தூதரகத்திலிருந்து இந்த வழக்கு தொடர்பான தகவல் பெற்ற பிறகு இந்த வழக்கு குறித்த தான் அறிந்ததாகவும், தேவைப்பட்டால் வீடியோ கான்பரன்சிங் மூலமாகவோ அல்லது நேரிலோ நீதிமன்ற விசாரணைகளில் ஆஜராக விருப்பம் தெரிவித்ததாகவும் முஹ்சின் சுர்தி மனுவில் மேலும் தெரிவித்துள்ளார்.
(Note: தெரியாத சிலரின் புரிதலுக்காக ஒவ்வொரு முறை பாஸ்போர்ட்டை புதுப்பித்தல் செய்யும் போதும் உங்களுடைய ஊரில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் இருந்து கிடைக்கும் நன்னடத்தை சான்றிதல் அடிப்படையில் மட்டுமே பாஸ்போர்ட் புதுப்பித்தல் செய்து கிடைக்கும். அது நீங்கள் ஊரில் இருந்தாலும் சரி வெளிநாட்டில் இருந்தாலும் சரி)