12/05/2025
நேற்று (11) கொத்மலை, ரம்பொடை, கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற கொடூர விபத்தில் உயிர் பிழைத்த வயம்ப பல்கலைக்கழக மாணவன் ஜனித் ஷய்மிந்து அந்த விபத்து பற்றிய மிகத் துயரமான அனுபவப் பகிர்வை தனது Facebookஇல் பகிர்ந்துள்ளார்.
அதன் மிகத் தெளிவான தமிழாக்கம் இது.
உயிர் பிழைத்திருந்தாலும் ஷ்யமிந்து போன்ற அனைவருக்கும் இது மீள்வதற்கு மிகச் சிரமமான அதிர்ச்சி சம்பவமாக இருக்கும். அவர்களுக்கு எம் அன்பையும் ஆறுதலையும், தம் உறவுகளை இழந்திருப்போருக்கு அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஷ்யமிந்துவின் பேஸ்புக் பதிவு..
கதிர்காமம் - குருநாகல் பேருந்தில் ரம்பொடை பெருந்துயரத்தை எதிர்கொண்டேன்!
இப்போது ஒன்றரை வருடங்களாக வயம்ப வளாகத்தின் மாக்கந்துறை வளாகத்தில் உள்ள விவசாய பீடத்திற்குச் செல்லும் நான், அதிகாலை 12-1 மணி முதல் விழித்திருப்பதால், நின்றவாறே தூங்கிச் செல்வது ஒரு பழக்கமாகியிருந்தது. பொதுவாக 3 வாரங்களுக்கு ஒரு ஞாயிற்றுக்கிழமை பரீட்சைகளுக்குத் தோற்றுவதற்காக நான் பல்கலைக்கழகம் செல்ல வேண்டியிருந்தது. காலை 9 மணிக்குள் பல்கலைக்கழகத்தில் இருக்க வேண்டுமென்றால் எனக்கு இந்த பேருந்து மாத்திரமே ஒரே மாற்று வழி. இதற்கு முன்னர் சில தடவைகள் பரீட்சைக்கு முதல் நாள் கண்டிக்குச் சென்று தங்கிப் பல்கலைக்கழகம் சென்றிருந்தாலும், எனது வேலையுடன் நேரத்தை முகாமைத்துவம் செய்வது எனக்கு மிகவும் முக்கியமாக இருந்தது. அதனாலேயே 24 மணித்தியாலங்களுக்குள் பல்கலைக்கழகம் சென்று பரீட்சை எழுதி வந்து மீண்டும் வேலை செய்ய வேண்டியிருந்ததால், கதிர்காமம் பேருந்தில் சென்று திரும்புவதே எனக்கு மிகவும் இலகுவானதாக இருந்தது.
நேற்று தாவர ஊட்டச்சத்துக்கள் மற்றும் உர முகாமைத்துவம் (Plant nutrients and fertilizer management) பாடத்தின் பரீட்சை இருந்த நாள். அதிகாலை 1 மணிக்கு விழித்து, வெலிமடை தரிப்பிடத்திற்கு 2 மணிக்குள் வந்தடைந்திருந்தாலும், பேருந்து வழக்கத்தை விட தாமதமாகவே வந்தது. எங்கள் பல்கலைக்கழகத்திற்கே செல்லும் பதுளையைச் சேர்ந்த அக்கா ஒருவரும் பண்டாரவளையில் பேருந்தில் ஏறுவதால், பேருந்தில் இன்று அமர்வதற்கு இடம் இல்லை என்று அவர் செய்தி அனுப்பியிருந்தார். எனவே எப்படியும் சில நாட்களில் வெலிமடையிலிருந்து குருநாகல் வரை நின்றுகொண்டே செல்லும் எங்களுக்கு அது புதிதாக இருக்கவில்லை. குறிப்பாக நீண்ட வார இறுதி விடுமுறை வரும் வாரங்களில் கதிர்காமம் - குருநாகல் பேருந்தில் நெரிசல் சனக்கூட்டம் எப்பொழுதும் இருக்கும்.
வழமையாக ஒவ்வொரு நாளும் பேருந்தின் சாரதி ஆசனத்துக்கு அருகில் இடது பக்க ஓரத்தில் சுருண்டு நின்றவாறே தூங்கிச் செல்லும் நான், நேற்றும் முன்பக்க footboard இற்கு அருகில் சென்றபோதும், திடீரென வந்த ஒரு சிந்தனையுடன் பின்பக்கக் கதவால் பேருந்தில் ஏறியது ஏன் என்று இன்னும் தெரியவில்லை. பின்பக்க ஆசனத்தில் இருந்து வலது பக்கத்தில் மூன்றாவது அல்லது நான்காவது ஆசனத்திற்கு அருகில் நின்ற எனது பையை அந்த ஆசனத்தில் இருந்த ஆண்டி ஒருவரிடம் கொடுத்தபோதும், அவரால் பையை வைத்திருக்க முடியாது என்று கூறியதால், அதை கையில் வைத்திருப்பதைத் தவிர எனக்கு மாற்று வழி இருக்கவில்லை. அதற்குள்ளாகவே மேலுள்ள தட்டுக்கள் முழுமையாக நிரம்பிவிட்டன. மற்றுமொரு விடயம், அந்த நேரத்தில் எனது HP கருப்பு backpack இல் இருந்த எனது Samsung tablet மற்றும் பல்கலைக்கழகத்தில் அன்று பரீட்சைக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டிய assignment இருந்ததால், பையைத் தூரத்து ஆசனத்தில் இருந்த ஒருவரிடம் கொடுக்கப் பயமாக இருந்தது. ஆனாலும், பேருந்து 2.45க்கு நகரத் தயாரான போது அந்த ஆண்டி, "நான் பாவம்" என்று கூறி, அவருக்கருகில் இருந்த மற்ற ஆண்டியுடன் பேசி, பையைக் கேட்டு வாங்கி மடியில் வைத்துக்கொண்டார். நுவரெலியா அருகில் செல்லும்போது, எனது நினைவில் சரியென்றால், அந்த மூன்றாவது ஆசனத்தின் இந்தப் பக்கக் கடைசியில் இருந்த அங்கிள் பேருந்திலிருந்து இறங்கினாலும், எனக்கு அப்பக்கத்தில் நின்றுகொண்டிருந்த தம்பி ஒருவன் எனக்கு முன்னர் தனது பையை ஆசனத்தில் வைத்தான். ஆனால் அந்த இரண்டு ஆண்டிகளும் என்னை அங்கிருந்து அமரச் சொன்னது பையை என்னிடம் கொடுத்துவிட்டு அவர்களுக்கு நிம்மதி அடைய வேண்டும் என்பதற்காகவே என்று நான் அறிவேன். அந்த தம்பியும் அப்போது நான் அமர்கிறேனா என்று கேட்டபோதும் நான் அவருக்கு இடம் கொடுத்தேன். அதன் பிறகு அவர் நுவரெலியாவில் இறங்கப் போவதாகவும், அதன் பிறகு நான் அமரலாம் என்றும் கூறி அமர்ந்தார்.
நுவரெலியா நகரத்தைக் கடந்த பிறகு எனக்கு நித்திரை வந்திருந்தாலும், அரைகுறை நித்திரையில் பேருந்து நுவரெலியாவைக் கடந்து செல்லும் மலைகளின் வளைவுகளில் செல்லும்போது சொல்ல முடியாத ஒரு வித்தியாசமான உணர்வு ஏற்பட்டது.
எப்படியிருந்தாலும், பேருந்தின் பயணம் சற்று மாறி, ஒரு பள்ளத்தை நோக்கிச் சரிந்து கொண்டிருப்பதை உடல் உணர்ந்தபோதே நான் விழித்தேன். அப்போது நித்திரை செய்து கொண்டிருந்த பலர் விழித்து அலறத் தொடங்கியிருந்தார்கள். ஆரம்பத்தில் மிக மெதுவாக அசைந்து பள்ளத்தை நோக்கிச் சென்ற பேருந்து, மிகக் குறுகிய நேரத்திற்குள் கீழே உருளத் தொடங்கியது. அந்த கீழே விழும் தருணத்தில் மக்களின் அலறல் எனக்கு இன்னும் கேட்பது போல உள்ளது. உயிரை விடுப்பதைத் தவிர வேறு எந்த மாற்று வழியும் இருக்கவில்லை. வாழ்க்கையில் ஒருபோதும் எதிர்கொள்ளாத ஒருவித தீவிரமான வெறுமை மாத்திரமே மனதில் இருந்தது. எந்த நேரத்திலாவது பேருந்தின் ஒரு பகுதியால் எனது உடல் நசுக்கப்படும் என்பது மாத்திரமே மனதிற்குத் தெரிந்தது. இறுதியில் பேருந்துடன் உருண்ட நான் மற்றும் மிகச் சிறிய எண்ணிக்கையிலானோர் மாத்திரமே, பேருந்து தலைகீழாக மாறியபோதும், கால்களில் நின்றவாறு சுயநினைவுடன் பேருந்தினுள் எஞ்சியிருந்தோம்.
வெறிச்சோடிய இருண்ட இரவில், தெரியாத பிரதேசத்தில், கடும் இருளில், பல அடி ஆழப் பள்ளத்தில் சிதைந்த பேருந்துக்குள், மிகச் சிறிய இடத்தில் சிக்கியிருந்த எங்கள் விதி நிர்ணயிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. கால்கள் கூட உடைந்துவிட்டன என்று நினைத்து அசைத்துப் பார்த்தபோது அவை ஆசனத்தில் சிக்காமலே நலமாக இருந்தன. அப்போதே அங்கு என்னருகில் இருந்த அக்கா ஒருவரும் சிலரும் பேருந்தினுள் ஊர்ந்து மேலே சென்று உடைந்த யன்னல் வழியாக வெளியே காட்டிற்குள் ஊர்ந்தார்கள்.
வாழ்க்கையில் எந்த மனிதனும் அனுபவிக்கக் கூடாது என்று பிரார்த்திக்கும் மிகத் துயரமான காட்சிகள், மக்களின் மரண ஓலங்களுக்கு மத்தியில் எஞ்சியிருந்த நாங்கள் சிலர், உயிருடன் இருந்தும் செத்ததைப் போலானோம். footboard இலுள்ள இரும்பு அவரது காலில் குத்தி இறங்கிய நிலையில் ஒரு இளைஞன் இன்னும் சுயநினைவுடன் கதறிக் கொண்டிருந்தபோது, பேருந்து விழுந்தபோதே இறந்து வீசப்பட்ட மற்றுமொரு இளைஞனின் உடல் அங்கேயே வெளியே இருந்தது. பேருந்து விழும் சத்தத்தைக் கேட்டு கிராம மக்கள் தேயிலைத் தோட்டத்தின் ஊடாக ஓடி வந்தபோதும், அந்த இடத்தை சென்றடைவது மிகக் கடினமான காரியமாக இருந்தது. அதனாலேயே கணிசமான நேரமெடுத்தது. ரம்பொடை கிராம மக்கள் எங்கள் உயிர்களைக் காப்பாற்ற வழங்கிய ஒத்துழைப்பைப் பற்றிச் சொல்ல வார்த்தைகள் இல்லை. தமது குடும்பத்தில் ஒருவருக்குக் காட்டும் அன்பும் கருணையும் அந்தக் கிராமத்து அம்மாக்கள், அப்பாக்கள், அண்ணன்மார், அக்காமார், தங்கைமார், தம்பிமார்களிடம் இருந்தது. எங்களுக்காக அழுத, வியர்வை சிந்திய அந்த மக்களுக்குப் பெரும் புண்ணியம் கிடைக்கட்டும். அதேபோல் சுகாதாரப் பிரிவினர் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர். அனைவருக்கும் பெரும் புண்ணியம் கிடைக்கட்டும்!
அந்த உணர்ந்த உதவியற்ற தன்மையும் பயங்கரமான சம்பவமும் இந்த உலகில் எந்த ஒருவருக்கும் அனுபவிக்க, காணக் கிடைக்காமல் போகட்டும் என்று பிரார்த்திக்கிறேன். மேலும், அந்த அளவுக்கு ஆபத்திலிருந்து ஒப்பீட்டளவில் காயங்களுடன் தப்பித்த நான் உறுதியாக நம்பும் ஒரு விடயம் என்னவென்றால், நாம் உலகிற்கு நன்மையை மாத்திரமே செய்வோம். நான் நேற்று இறக்காமல் எஞ்சியிருந்தது, உலகிற்கும் சமூகத்திற்கும் என்னால் மேலும் செய்யப்பட வேண்டிய பணிகள் இன்னும் முடிவடையாததாலேயே என்று நான் நினைக்கிறேன்.
அதனாலேயே நான் மீண்டும் கூறுகிறேன். உலகிற்கு நன்மையை மாத்திரமே செய்யுங்கள். நமது வாழ்க்கை மிகவும் நிலையற்றது. இறுதியில் எதுவும் மிஞ்சுவதில்லை.
ப.லி : கறுப்பு நிற HP backpack எனது பை. அதில் எனது பல்கலைக்கழகத்தின் மிக முக்கியமான விடயங்கள் அடங்கிய Samsung tablet மற்றும் EPM19173 இலக்கம் கொண்ட assignment ஒன்று இருந்தது. எனக்கு வேறு எதுவும் வேண்டாம், tablet பற்றி ஏதும் தகவல் தெரிந்தால் கூறுங்கள், பெரும் புண்ணியம் உண்டாகும். (அத்தனை மக்கள் உயிர் தியாகம் செய்திருக்கையில் tablet தேடுவது தவறாக இருக்கலாம். ஆனால் எனக்கு tablet ஐ விட அதில் உள்ள தரவுகள் மிக மிக பெறுமதியானவை என்பதாலேயே தேடுகிறேன்.)
(Copy Past)