29/09/2025
இலங்கை - சவுதி அரேபியா நேரடி விமான சேவையினை ஆரம்பிக்குமாறு கோரிக்கை.
கே எ ஹங
பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை
வரையறுக்கப்பட்ட விமான நிலைய, விமான சேவைகள், ஶ்ரீலங்கா(தனியார்) கம்பனி தொடர்பாக அரசாங்க பொறுப்பு, முயற்சிகள் பற்றிய குழுவின் அறிக்கை தொடர்பாக 26.09.2025ல் நடைபெற்ற பராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உறையாற்றிய அம்பாறை மாவட்ட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை சவுதி அரேபியாவில் பணிபுரியும் 3 இலட்சம் இலங்கையர்கள், ஒவ்வொரு வருடமும் ஹஜ்,உம்ரா கடமை நிறைவேற்றச் செல்லும் 85 ஆயிரம் மக்களின் நலன்கருதி 2020ல் இடைநிறுத்தப்பட்ட இலங்கை - சவுதி அரேபியா நேரடி விமான சேவையினை ஆரம்பிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்…
2020ஆம் ஆண்டு கொரோனா தொற்றுடன் இலங்கை - சவுதி அரேபியாவுக்கான நேரடி விமான சேவையை வழங்கி வந்த சவுதியா, எதிஹாத், கட்டார், எமிரேட்ஸ் ஆகிய விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டன. தற்போது மிக உயர்ந்த கட்டணத்தில் மட்டுப்படுத்தப்பட்ட விமான சேவையை ரியாத், தமாம் ஆகிய விமான நிலையங்களுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வழங்கி வருகிறது.
அதேவேளை சவுதி அரேபியாவில் சுமார் 3 இலட்சம் பேர் எமது நாட்டைச் சேர்ந்தோர் பணிபுரிந்து வருவதுடன், நமது நாட்டிலிருந்து வருடாந்தம் சுமார் 3500 ஹஜ்ஜாஜிகளும், 50,000 ற்கும் அதிகமான முஸ்லிம்கள் உம்ரா யாத்திரை நிமிர்த்தம் சவுதி செல்கின்றனர். இடைத்தரகர்கள் அற்ற ஒரு ஒழுங்கான நியாயமான நேரடி சவுதியா (SAUDIA) விமான சேவையை சவுதி அரசுடன் இணைந்து எமக்கு ஆரம்பிக்க முடியுமாக இருப்பின் ஹஜ், உம்ரா கட்டணங்களை ஒரு இலட்சம் ரூபாவினால் குறைக்க முடிவதுடன், சவுதி அரேபியா நாட்டில் தொழில் புரியும் சுமார் 3 இலட்சம் இலங்கையர்கள் நன்மை அடைவார்கள்.
அதேவேளை சவூதி அரேபியா நாட்டிலிருந்து இலங்கைக்கு வரும் உல்லாசப் பயணிகளின் தொகை அதிகரிப்பதுடன், இலங்கையின் உள்நாட்டு ஏற்றுமதியை பல மடங்கு அதிகரித்து தேசிய வெளிநாட்டுச் செலாவணி வருவாயை பல மடங்கு அதிகரிக்க முடியும்.
அதேபோல ஏனைய விமான நிலையங்களை தொட்டுச் செல்லும் விமான சேவையினால் நமது இலங்கை மக்கள் 15-20 மணித்தியாலங்கள் கொழும்பு - அபுதாபி, கொழும்பு - டுபாய், கொழும்பு - பஹ்ரைன், கொழும்பு- சார்ஜா, கொழும்பு - கத்தார், கொழும்பு - ஓமான் ஆகிய விமான நிலையங்களில் தாமதித்து தங்கி சவுதி அரேபியாவுக்கு செல்லும் நிர்ப்பந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்னாயக்க அவர்கள் சவுதி அரேபியாவில் தொழில் புரியும் எமது இலங்கை நாட்டைச்
சேர்ந்த 3 இலட்சம் பேரின் நன்மை கருதியும் தொடர்ச்சியாக “உம்ரா”, “ஹஜ்” கடமைகளை நிறைவேற்றச் செல்லும் 85 ஆயிரம் முஸ்லிம்
மக்களின் நன்மை கருதியும் இடைநிறுத்தப்பட்டுள்ள இலங்கை – சவுதி அரேபியாவுக்கான நேரடி விமான சேவையை (சவுதியா, எதிஹாத், கட்டார், எமிரேட்ஸ் ஆகிய விமான சேவைகளை) மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதுடன் நீண்டகாலமாக இரத்மலானை விமான நிலையத்திலிருந்து அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் பலாலி பிரதேசங்களுக்கான உள்ளூர் விமான சேவைகள் ஒரு வாரத்தில் 3 தடவைகள் சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டு வந்தன. இதனால் வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் நன்மையடைந்து வந்தனர்.
எனவே, வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் நன்மை கருதி மீண்டும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான உள்ளூர் விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, பொத்துவில் - அருகம்பே பிரதேசங்களில் வரையறுக்கப்பட்ட விமான நிலைய சேவைகள் ஶ்ரீறிலங்கா (தனியார்) கம்பனிகள் சீ பிளேன் சேவையினை நடாத்தி வந்தன. இச்சேவையும் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது. எனவே, இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ள சீ பிளேன் சேவையினை மீள ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நான் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சராக பதவி வகித்த காலத்தில் நீர்ப்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றினை அகலப்படுத்தி சீ பிளேன் சேவையினை ஆரம்பிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டேன். அதேபோன்று அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று பிரதேசங்களில் அமைந்துள்ள சம்புக்களப்பு ஆற்றில் சீ பிளேன் விமான சேவை ஒன்றை ஆரம்பிப்பதற்கான வளங்கள் அமைந்துள்ளன. எனவே, அட்டாளைச்சேனை சம்புக்களப்பில் சீ பிளேன் சேவை ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகளை தனியார் (விமான) கம்பனிகள் ஆரம்பிப்பதற்கான செயற்பாடுகளை விமான சேவைகள் அமைச்சு மேற்கொள்ள வேண்டும்.
எமது நாட்டின் பாராளுமன்ற வரலாற்றில் 10வது பாராளுமன்றம் மிக முக்கியமானதாகும். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் தான் ஜனாதிபதியாக வருவேன் என நினைத்திருப்பாரா? அல்லது அமைச்சர்கள், சபாநாயகர், பிரதி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் நினைத்திருப்பார்களா? இல்லை இறைவனின் நாட்டத்தினால் 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளோம் என்பதனை மறந்து விடாதீர்கள். நமது நாட்டின் அரசியல்வாதிகளில் 150ற்கும் மேற்பட்ட பெருந்தலைவரக்ள், அரசியல் தலைவர்கள் எல்லாம் கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்தும் மக்களினால் நிராகரிக்கப்பட்டனர். எனவே, பாராளுமன்ற செயற்பாடுகளில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கௌரவமான முறையில் செயற்பட வேண்டும். இன்று காலையில் பாராளுமன்ற அமர்வின் போது பாராளுமன்ற பொதுசன கலரியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள், ஆசிரியர்கள் அமர்ந்து கொண்டு சபை நடவடிக்கைகளை பார்த்துக் கொண்டிருக்கும் போது பாராளுமன்றத்தில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் அநாகரிகமான முறையில் பேசுகிறார்கள் இது மிகவும் மோசமான செயற்பாடாகும். பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பதனை நாம் எல்லோரும் சிந்தித்து செயற்பட வேண்டும். எனவே, எதிர்காலத்தில் இவ்வாறான முறையற்ற செயற்பாடுகளுக்கு சபாநாயகர்/ தலைமை தாங்கும் உறுப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை கேட்டுக் கொண்டார்.