24/09/2024
சவுதி அரேபியாவின் 94வது தேசிய தினம்.
(எம்.எல்.சரிப்டீன்)
மத்திய கிழக்கு நாடுகளில் செல்வச் செழிப்பும், கனிய வளமும் நிறைந்த நாடுகளில் சவுதி அரேபியா முன்னணியில் திகழ்கிறது.
1932ஆம் ஆண்டு சவுதி அரேபியா இராச்சியத்தை, மன்னன் அப்துல்லா அப்துல் அஸீஸ் அல் சவுத், நிறுவியதனை நினைவு கூறும் முகமாக ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 23ஆம் திகதி சவுதி அரேபியா தேசிய தினத்தைக் கொண்டாடுகிறது. சவுதிஅரேபிய மக்களின் பாரம்பரியத்தை அடையாளப்படுத்துகின்ற மிகவும் பிரதான நாளாக தேசிய தினம் சவுதி மக்களால் பார்க்கப்படுகிறது.
23ஆம் திகதி திங்கட்கிழமை 94வது தேசிய தினத்தை சவுதி அரேபியா கொண்டாடியாது. இதற்காக நான்கு நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தேசிய தினத்தின் கருப்பொருள் 'நாம் கனவு காண்கிறோம், சாதிக்கிறோம்' என்பதாகும்.
தேசிய தினத்தில் விசேடமாக சவுதி அரேபியாவின் கலாசார பாரம்பரியங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. மக்கள் மத்தியில் ஒற்றுமையை வரலாற்று விழுமியங்களை கொண்டாடுவதற்கு இன்னாளில் அனைவரும் ஒன்றிணைகிறார்கள். நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகள், வாள் நடனமான அர்த்தா என்பன நாடு முழுவதும் நடைபெறும். பாதைகள் முழுவதும் நாட்டின் தேசிய கொடியால் அலங்கரிக்கப்படுவதுடன், கண்காட்சிகள், வரலாற்று ரீதியான கலை சார்ந்த பொருட்கள், பாரம்பரிய கைவினைப் பொருட்கள், சவுதி அரேபியாவின் உணவு வகைகள் போன்றவை மக்களின் பார்வைக்காக வைக்கப்படுகின்றன.
படையினரின் வான் வழி, கடல் வழி கண்ணைக் கவரும் காட்சிகள், கடற் படையினரின் அணி வகுப்புகளும் இடம் பெறும். அதே போன்று சவுதி அரேபியாவின் தேசிய தின நிகழ்வுகள் பல்வேறு நாடுகளிலும் அமைந்துள்ள தூதரகங்களில் தூதுவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டாடப்படுவது வழக்கமாகும்.