11/08/2026
லாகுகல பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளராக M.B.M.சைபுல்லாஹ் கடமைபொறுப்பேற்பு :
நிந்தவூரைச் சேர்ந்த முகையதீன்பாவா முகம்மது சைபுல்லாஹ் அம்பாரை மாவட்டத்தின் லாகுகல பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளராக கடந்த வெள்ளிக்கிழமை தனது கடமைகளை பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டார்.
சுகாதார முகாமைத்துவ உதவியாளராக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடமையாற்றிய நிலையிலேயே கடந்த (2023) ஆண்டு நடைபெற்ற மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சையின் பெறுபேறுகள் அடிப்படையில் இலங்கை நிருவாக சேவைக்கு உள்ளீர்ப்பு செய்யப்பட்டு பொதுச்சேவை ஆணைக்குழுவினால் இந் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இன் நிகழ்வில் லாகுகல பிரதேச செயலாளர் என்.நவநீதராஜா மற்றும் அக்கரைப்பற்று மற்றும் லாகுகல பதில் உதவி பிரதேச செயலாளர் ,வை.றாஷித், திணைக்களத்தின் உயர் அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் பலர் கலந்து கொன்டனர்.
கடந்த 2006ம் வருடம் அம்பாரை பொது வைத்தியசாலையில் சுகாதார முகாமைத்துவ உதவியாளராக பணிசெய்ய ஆரம்பித்த இவர், கல்முனை, கம்பளை, அக்கரைப்பற்று ஆகிய வைத்தியசாலைகளில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இவர் தனது ஆரம்பக் கல்வியை நிந்தவூர் அல் -மதீனா வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை நிந்தவூர் அல் - அஷ்றக் தேசிய பாடசாலையிலும், உயர்கல்வியை கல்முனை சாஹிரா கல்லூரியிலும், கம்பளை சாஹிரா கல்லூரியிலும் பயின்றதுடன் நிந்தவூர் - 04ம் பிரிவில் வசித்த முகையதீன்பாவா மற்றும் குழந்தையும்மா ஆகியோரின் சிரேஷ்ட புதல்வர் என்பதுடன் இலங்கை நிருவாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான எம்.பி.எம். சுபியான் என்பவரின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது