
22/07/2025
ஹிங்குராண பிரதேச கரும்பு விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பில் முக்கிய சந்திப்புகள்
அம்பாறை மாவட்டத்தின் ஹிங்குறாண சீனித் தொழிற்சாலைக்குட்பட்ட வலயங்களில் கரும்புச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்காக, அங்குள்ள கரும்பு உற்பத்தியாளர் சங்கப் பிரதிநிதிகள் செவ்வாய்க்கிழமை (22) ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அவர்களைச் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் சந்தித்து உரையாடினர்.
இந்த சந்திப்பின் போது விவசாயிகள் எதிர்கொள்ளும் பல்வேறு சிக்கல்கள் குறித்து அவருடன் விரிவாகக் கலந்துரையாடினர்.
அதனையடுத்து, பிரஸ்தாப சங்கங்களின் பிரதிநிதிகள் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அவர்களின் நெறிப்படுத்தலில், கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியுடனும் அவரது பாராளுமன்ற அலுவலகத்தில் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இவ்விவகாரத்துக்கு கூடிய விரைவில் உரிய தீர்வு வழங்கப்படும் எனவும், அதையிட்டு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி உறுதியளித்தார்.
இந்த சந்திப்பில், கிராமிய அபிவிருத்தி பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, அம்பாறை மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். உதுமாலெப்பை, எம்.எஸ். வாசித், மஞ்சுல ரத்நாயக்க ஆகியோரும் பங்குபற்றினர்.