21/10/2025
வாழைச்சேனை வைத்தியசாலையும் யூடியூப்பர் கைதும்.
ஓரிரு தினங்களுக்கு முன்னர் வாழைச்சேனை வைத்தியசாலையில் இடம் பெற்ற சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளத்தில் பேசு பொருளாகியமை யாவரும் அறிந்ததே.
அதன் தொடர்ச்சியாக பெண் வைத்தியரின் முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைக்காக வாழைச்சேனை பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்ட குறித்த யூடியூப்பர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு ஆதரவாகவும் வைத்தியசாலை மற்றும் பெண் வைத்தியருக்கு எதிராகவும் பலர் சமூக வலைத்தள பதிவுகளை இட்டு வருவதையும் அவதானிக்க முடிந்தது.
வைத்தியசாலைகளிலும், வைத்தியத்துறை சார்ந்தோர்களிடத்திலும் பல்வேறு விமர்சனங்கள் இருப்பினும் குறித்த விடயத்தில் அந்த வைத்தியரின் தவறு என்ன என்பது பலமுறை குறித்த காணொளி பார்த்தும் எனக்கு புரியவில்லை.
குறித்த காணொளி YouTube content ற்க்காக எடுக்கப்பட்டுள்ளமையும், வழமையான காணொளி வைரலை எதிர்பார்த்துமே குறித்த காணொளி எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக தெட்டத் தெளிவாக தெரிகின்றது.
இதற்கு முதலும் நான் ஓரிரு பதிவுகளை பகிர்ந்திருக்கின்றேன். தன்னுடைய தவறை மறைக்க காணொளி எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து எதிரில் உள்ளவர்களை தவறாக சித்தரிக்கும் செயற்பாடுகள் பற்றியது.
அதே போல இதுவும் சற்றே வித்தியாசமாய் எதுவாயினும், எங்காயினும் காணொளியெடுப்பதும் பகிர்வதும் அதனூடான வைரலில் பணம் காண்பது இவைகளும் தடுக்கவும் தவிர்க்கவும் பட வேண்டியவையே.
உதாரணமாக போக்குவரத்து பொலிஸார் வாகன சாரதிகளின் போக்கு வரத்து விதிமீறல் தவறை மறைக்க அவர்களிடம் இலஞ்சத்தை பெற்றுக் கொள்வது என்பது நம்மூரில் சாதாரணமான விடயம்.
ஆனால் சில நேர்மையான அதிகாரிகள் சட்டத்திற்கு உட்பட்டு தனது கடமையை நேர்மையாக செய்ய விளையும் போதும், போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களுக்கு தண்டப்பண அறிவிட முயற்சிக்கும் போதும் தன் மீது தவறை வைத்துக் கொண்டே தனது தொலைபேசியில் காணொளி எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்வதும் ஆங்காங்கே நடக்கும்.
அதை பார்க்கும் பெரும்பாலான அடிப்படை அறிவற்ற சமூக வலைத்தள கூட்டமும் முழுமையான சம்பவத்தை அறியாமல் போக்குவரத்து பொலிஸார் என்றாலே இலஞ்சம் வாங்குபவன் தான் என்பதை மனதினில் நிறுத்திக்கொண்டு கேவலமாக வசைபாடி பகிர்வதும், பின்னூட்டமிடுவதுமே வாடிக்கை.
அதேபோல ஒரு கூட்டம் இந்த சம்பவத்திலும் தொடர்கின்றது.
குறித்த யூடியூப்பர் தனது பகிர்வு YouTube Thumbnail ல் பெண் வைத்தியரின் அடாவடி என குறிப்பிட்டுள்ளார் அதை பகிரும் மேற்குறித்த அடிப்படை அறிவற்ற சமூக வலைத்தள கூட்டமும் அதே பாணியில் பதிவிடுகின்றனர், பகிர்கின்றனர்.
சில வைத்தியர்களினாலும், வைத்தியத்துறையினாலும் நடக்கும் அலட்சியங்களையும் அதனால் ஏற்படும் இழப்புகளையும் கேள்வி கேட்க வேண்டியதும், அதற்குரிய நடவடிக்கைகளை மேற் கொள்ள பொதுமக்களை விழிப்புணர்வு வழங்குவதும் சமூகவலைத்தளத்தை பொதுநல செயற்பாட்டுக்காக பயன்படுத்தும் ஒவ்வொருவரினதும் கடமை அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
ஆனால் அடிப்படை அறிவற்று ஒரு நோயாளியை வைத்தியர் பார்வையிட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில் அத்துமீறி உள் நுழைந்து சுய விளம்பரத்துக்காகவும் YouTube Content க்காகவும் மக்களை மடைமாற்றும் செயற்பாடுகளை மேற்கொள்ளும் இவ்வகை யூடியூப்பர் களின் செயற்பாடுகளையும் அவர்களுக்கு ஆதரவானவர்களையும் பொது வெளியில் பகிரங்கப்படுத்த வேண்டிய கட்டாயமும் நமக்குள்ளது.
வேறு துறைகளில் அலட்சியம் நடந்தால் அதனால் இழப்பது வருமானமோ பணமோ மட்டுமே ஆனால் மருத்துவத்துறையில் அலட்சியம் நடந்தால் அங்கு இழக்கப்படுவது ஒரு உயிர் என்பதை நன்கு உணர்ந்தவர்களாகவே குறித்த சம்பவத்தினை உற்றுநோக்கும் போது இதில் குறித்த வைத்தியரின் தவறு எதுவும் இல்லை என்பது தெளிவாகின்றது.
அவர் ஒரு நோயாளியை பார்வையிடும் போது ஒருவர் காணொளி எடுத்தவாரே உள் நுழைவதும் அதிகாரத்தொனியில் பேசுவதும், வேலையிலிருந்து தூக்குவேன் எனும் பேச்சும் தவறானது.
நடந்த, நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு அதை பல முறை ஆராய்ந்து விமர்சனங்களை முன்வைத்தல், சட்டநடவடிக்கைக்கு முயற்சித்தல், நீதி கோரல் போன்றவை ஏற்புடையது.
ஆனால் மருத்துவத்துறையை சேவையாக செய்து கொண்டிருக்கும் ஒரு தரப்பினரை எந்தவித முகாந்திரமுமின்றி அவதூறு பரப்புதல் அல்லது சமூகவலைத்தளத்தின் செல்வாக்கை பயன்படுத்தி மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் செயற்பாடுகளை ஊக்குவிக்க முடியாது இது ஏனையோருக்கும் தவறான முன்னுதாரணமாகி விடும்.
குறித்த விசாரணையும் கைதும் கைதின் பின்னரான தண்டனையும் இது போன்ற அடிப்படை அறிவற்ற கூட்டத்திற்கு பாடமாக அமையட்டும்.
#குறிப்பு : குறித்த பெண் வைத்தியர் எனக்கு மாமியோ மச்சாளோ கிடையாது ஆனால் குறித்த வைத்தியரின் சட்ட நடவடிக்கைக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குறித்த விடயத்தில் சரியான சட்ட ஆலோசனையுடன் பின்வாங்காமல் உறுதியாக நில்லுங்கள் குறித்த தண்டனை ஏனையோருக்கு சிறந்த பாடமாகவும், வழிகாட்டுதலாகவும் அமைய உங்களின் இந்த தைரியமான முயற்சி அமையட்டும்.
குறிப்பு: அரச நிறுவனங்களில் இடம்பெறும் தவறுகள், அலட்சியங்கள், அநீதிகளை வெளிக் கொண்டு வாருங்கள் தப்பில்லை ஆனால் தவறற்ற விடயத்தை தவறாக சித்தரிக்க முயல்வதுடன் பொதுமக்களையும் தவறாக வழி நடாத்தாதீர்கள்.
நன்றி.
சஜன் செல்லையா.