12/08/2026
மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய மகோற்சவம் நிறைவு: ஆடி அமாவாசை கொடியிறக்கத்துடன் பக்திபரவசத்துடன் நிறைவுற்றது!
வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் சிகர நிகழ்வான ஆடி அமாவாசை கொடியிறக்க உற்சவம் இன்று (12) புதன்கிழமை இரவு 8 மணிக்கு பக்தர்களின் அரோகரா கோஷத்திற்கு மத்தியில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முச்சிறப்புகளையும் கொண்ட இப்புனித தலத்தில், கடந்த பல நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்று வந்த வருடாந்த உற்சவத்தின் இறுதி நிகழ்வாக இக் கொடியிறக்க உற்சவம் அமைந்தது. ஆடி அமாவாசை புண்ணிய தினமான இன்று, தீர்த்தோற்சவத்தைத் தொடர்ந்து இரவு நடைபெற்ற கொடியிறக்க நிகழ்வில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு எம்பெருமானின் அருளாசியைப் பெற்றுக் கொண்டனர்.
ஆலய தொண்டர்கள், ஊர்ப் பெரியோர்கள் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தந்த பக்தி வெள்ளத்தில் மாமாங்கேஸ்வரர் ஆலய வளாகம் பக்திப் பரவசத்தில் திளைத்தது. கொடியிறக்கத்தைத் தொடர்ந்து விசேட பூஜைகளும் தீபாராதனைகளும் இடம்பெற்று, பக்தர்களுக்கு அருட்பிரசாதங்கள் வழங்கப்பட்டன.