22/08/2026
புற்றுநோய் நோயாளர்களுக்கு அநீதி இழைக்கக் கூடாது – பில்கிராஸ்டிம் மருந்து பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு அவசியம்!
இன்றைய தினம் 20.08.2026 நிலையியல் கட்டளை 27(2) இன் கீழ் சுகாதார அமைச்சரிடம் நான் முன்வைத்த கேள்விகள், நாட்டில் புற்றுநோய் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்கள் எதிர்கொள்ளும் மிகவும் பாரதூரமான ஒரு பிரச்சினை தொடர்பானவை.
கீமோதெரபி, எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு புற்றுநோய் சிகிச்சைகளுக்கு அத்தியாவசியமான ‘பில்கிராஸ்டிம்’ (Filgrastim) ஊசி மருந்து, மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை உள்ளிட்ட பல அரச வைத்தியசாலைகளில் தற்போது பற்றாக்குறையாக இருப்பதாக நோயாளர்களும், அவர்களது குடும்பத்தினரும் என்னிடம் நேரடியாக தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக இந்த மாதம் Daily Mirror பத்திரிகையில் வெளியான இரண்டு செய்திக் கட்டுரைகளையும் நான் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தேன். ஏனெனில் இது சாதாரணமான ஒரு மருந்துப் பற்றாக்குறை பிரச்சினை அல்ல. புற்றுநோயாளர்களின் உயிருக்கும் சிகிச்சையின் தொடர்ச்சிக்கும் நேரடியாகத் தொடர்புடைய ஒரு முக்கியமான பிரச்சினையாகும்.
எனவே, ‘பில்கிராஸ்டிம்’ ஊசி மருந்து தற்போது மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை உள்ளிட்ட அரச வைத்தியசாலைகளில் பற்றாக்குறையாக உள்ளதா அல்லது இல்லையா என்பதை சுகாதார அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டேன்.
அவ்வாறு பற்றாக்குறை இருந்தால், எந்தெந்த அரச வைத்தியசாலைகளில் இந்த பற்றாக்குறை நிலவுகிறது? இந்த பற்றாக்குறை எப்போது முதல் ஏற்பட்டுள்ளது? என்பதையும் அமைச்சர் இந்த சபைக்கு அறிவிக்க வேண்டும்.
அதேபோன்று, அரச வைத்தியசாலை கட்டமைப்பில் ஒரு நாளைக்கு சராசரியாக எவ்வளவு ‘பில்கிராஸ்டிம்’ ஊசி மருந்து பயன்படுத்தப்படுகிறது? ஒரு மாதத்திற்கு சராசரியாக எவ்வளவு அளவு பயன்படுத்தப்படுகிறது? குறிப்பாக மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் தினசரி மற்றும் மாதாந்தம் எவ்வளவு அளவு இந்த மருந்து பயன்படுத்தப்படுகிறது? என்பதையும் நான் கேட்டேன்.
இந்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக சுகாதார அமைச்சினாலோ அல்லது அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தினாலோ ‘பில்கிராஸ்டிம்’ ஊசி மருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கான விலைமனுக்கோரல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பதையும் அறிய விரும்பினேன்.
விலைமனுக்கோரல் மேற்கொள்ளப்பட்டிருந்தால், எவ்வளவு அளவுக்கு விலைமனுக்கோரல் கோரப்பட்டுள்ளது? அந்த விலைமனுக்கோரல் எப்போது வெளியிடப்பட்டது? எந்த விநியோகஸ்தருக்கு வழங்கப்பட்டுள்ளது? அந்த மருந்துகள் எப்போது அரச வைத்தியசாலைகளுக்கு கிடைக்கப்பெறும்? என்பதையும் அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் எனக் கேட்டேன். மேலும், தற்போது விலைமனுக்கோரல் செய்யப்பட்டுள்ள மருந்துகளின் அளவு, தற்போதைய பயன்பாட்டின் அடிப்படையில் எத்தனை நாட்கள் அல்லது எத்தனை மாதங்களுக்கு போதுமானதாக இருக்கும் என்பதையும் அறிய வேண்டும்.
ஏனெனில், இன்று ஒரு பற்றாக்குறையை தீர்ப்பது மட்டும் போதுமானதல்ல. எதிர்வரும் சில மாதங்களிலும் புற்றுநோயாளர்களுக்கு இந்த அத்தியாவசிய மருந்து தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்காக சுகாதார அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்பதையும் நான் கேட்டேன்.
அதேபோன்று, அரசாங்கத்தினாலோ அல்லது அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தினாலோ கடைசியாக ‘பில்கிராஸ்டிம்’ ஊசி மருந்து கொள்வனவு செய்யப்பட்டபோது ஒரு ஊசிக்கு செலுத்தப்பட்ட விலை எவ்வளவு? அந்த மருந்தை விநியோகித்த விநியோகஸ்தர் யார்? எவ்வளவு அளவு கொள்வனவு செய்யப்பட்டது? கொள்வனவு செய்யப்பட்ட திகதி என்ன? போன்ற தகவல்களையும் அமைச்சர் வெளிப்படையாக இந்த சபைக்கு அறிவிக்க வேண்டும் எனக் கேட்டேன்.
மிகவும் முக்கியமாக, அரச வைத்தியசாலைகளில் இந்த மருந்து கிடைக்காத காரணத்தால், நோயாளர்கள் தனியார் மருந்தகங்கள் அல்லது தனியார் விநியோகஸ்தர்களிடம் இருந்து ‘பில்கிராஸ்டிம்’ ஊசி மருந்துகளை அதிக விலைக்கு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதா என்பதையும் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்.
ஒரு ஊசி மருந்து 17,000 ரூபாய் முதல் 23,000 ரூபாய் வரையிலான விலையில் தனியார் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக எங்களுக்குக் கிடைத்துள்ள தகவல்கள் உண்மையானவையா என்பதையும் நான் அமைச்சரிடம் கேட்டேன்.
ஏனெனில், அரச வைத்தியசாலையில் இலவசமாகக் கிடைக்க வேண்டிய ஒரு அத்தியாவசிய மருந்தை, பணம் உள்ளவர்கள் தனியார் சந்தையில் அதிக விலைக்கு வாங்கிக்கொள்ள முடியும்; ஆனால் நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களால் அதை வாங்க முடியாத நிலை ஏற்படுகிறது.
இதனால் ஒரு குடும்பம் தனது நோயாளியின் சிகிச்சையைத் தொடர்வதற்காக பெரும் பொருளாதாரச் சுமையை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகிறது. புற்றுநோயுடன் போராடிக் கொண்டிருக்கும் ஒரு நோயாளியின் குடும்பத்திற்கு இது இன்னுமொரு பாரிய நெருக்கடியாக மாறுகிறது.
மேலும், ‘பில்கிராஸ்டிம்’ போன்ற கீமோதெரபி மற்றும் ஏனைய புற்றுநோய் சிகிச்சைகளுக்கு அத்தியாவசியமான மருந்துகள் பற்றாக்குறையாக இருப்பதன் காரணமாக, நோயாளர்களின் சிகிச்சைகள் பிற்போடப்பட்டுள்ளனவா? சிகிச்சை முறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளனவா? அல்லது மருந்து பற்றாக்குறையின் காரணமாக சிகிச்சையில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டுள்ளதா? அவ்வாறு ஏற்பட்டிருந்தால், இதனால் எத்தனை நோயாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்? என்பதையும் நான் கேட்டேன்.
இந்த அத்தியாவசிய மருந்து அரச வைத்தியசாலைகளில் தொடர்ச்சியாகவும் தடையின்றியும் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, சுகாதார அமைச்சு உடனடியாக எடுக்கவுள்ள அவசர நடவடிக்கைகள் என்ன? நீண்டகால அடிப்படையில் மருந்துப் பற்றாக்குறை ஏற்படாத வகையில் எத்தகைய திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன? என்பதையும் அமைச்சர் இந்த சபைக்கு அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டேன்.
மேலும், ஒரு சில பகுதிகளில் நியூபோஜென் (Neupogen) ஊசி மருந்துகள் வெளியிலிருந்து கொண்டுவரப்பட்டு, ஒரு ஊசிக்கு 20,000 முதல் 30,000 ரூபாய் வரையான விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும் எனக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
இது மிகவும் பாரதூரமான நிலைமை.புற்றுநோயாளர்களுக்கு கீமோதெரபி போன்ற சிகிச்சை முறைகள் முறையாகவும் தொடர்ச்சியாகவும் வழங்கப்படாமல் போனால், அது அவர்களது உடல்நிலையிலும் சிகிச்சையின் வெற்றியிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, இந்த பிரச்சினையை சாதாரண மருந்துப் பற்றாக்குறையாக பார்க்காமல், புற்றுநோயாளர்களின் உயிருடன் தொடர்புடைய ஒரு அவசர பிரச்சினையாக அரசாங்கம் பார்க்க வேண்டும். இதற்கு உடனடியாகத் தீர்வு காணுமாறு நான் சுகாதார அமைச்சரிடம் கேட்டுக்கொண்டேன்.
சுகாதார அமைச்சரின் பதில் இதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, நான் முன்வைத்த இந்த முக்கியமான கேள்விகளுக்காக எனக்கு நன்றி தெரிவித்தார்.
ஏனையவர்கள் இந்தப் பிரச்சினைகளை சுற்றிவளைத்து பேசினார்கள். ஆனால் நான் இந்த விடயத்தை மிகவும் தெளிவாகவும் குறிப்பிட்ட கேள்விகளுடனும் பாராளுமன்றத்தில் முன்வைத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், இந்த ஊசி மருந்துக்கும் அதனுடன் தொடர்புடைய சிகிச்சைக்கும் பற்றாக்குறை காணப்படுகின்றது என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான உரிய நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் ஒரு வார காலத்துக்குள் இந்த பற்றாக்குறைக்கு தீர்வு காணப்படும் என்றும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
எனது மேலதிக கேள்வி அதற்கு மேலதிகமாக நான் கூறுகையில், கடந்த ஜனவரி மாதம் விலைமனுக்கோரல் செய்யப்பட்ட ஊசிகள் கடந்த ஜனவரி மாதத்திலேயே கிடைக்கப்பெற்றதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், நடைமுறையில் விலைமனுக்கோரல் மூலம் மருந்துகளை கொள்வனவு செய்யும் செயன்முறையில் தாமதங்கள் ஏற்படுகின்றன என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இந்த தாமதங்களின் இறுதி விளைவை நோயாளர்கள்தான் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படக்கூடாது.
இந்த ஊசிக்கான தினசரி தேவை சுமார் 9,000 ஊசிகள் என்ற நிலையில், குறிப்பாக மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் இதற்கான தேவை மிக அதிகமாக உள்ளது.
இந்த அத்தியாவசிய மருந்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், நோயாளர்கள் வெளியிலுள்ள தனியார் மருந்தகங்களில் அதிக விலைக்கு இந்த ஊசிகளை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே புற்றுநோய் சிகிச்சைக்காக பெரும் பொருளாதாரச் சுமையை எதிர்கொள்ளும் குடும்பங்களுக்கு, அத்தியாவசியமான ஒரு ஊசியைக்கூட அதிக விலைக்கு வெளியிலிருந்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அது அவர்களுக்கு இன்னுமொரு பாரிய நெருக்கடியாகும்.
யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலும், ஏனைய அரச வைத்தியசாலைகளிலும் இதுபோன்ற நெருக்கடி நிலை காணப்படுவதாக எங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
எனவே, இந்தப் பிரச்சினையை உடனடியாகக் கண்காணித்து தீர்வு காண விசேட மருத்துவக் குழு ஒன்றை அமைத்து, எந்தெந்த வைத்தியசாலைகளில் எவ்வளவு கையிருப்பு உள்ளது, எவ்வளவு தேவை உள்ளது, எவ்வளவு காலத்திற்கு அந்த கையிருப்பு போதுமானது என்பதை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும்.
இது சுகாதார அமைச்சின் பொறுப்பு. புற்றுநோயாளர்களுக்குத் தேவையான அத்தியாவசிய மருந்துகள் பற்றாக்குறையாகாமல் இருப்பதை உறுதி செய்வது அரசாங்கத்தின் அடிப்படைப் பொறுப்பாகும். ஒரு நோயாளி பணம் இல்லாத காரணத்தினாலோ அல்லது அரச வைத்தியசாலையில் மருந்து இல்லாத காரணத்தினாலோ தனது சிகிச்சையை நிறுத்த வேண்டிய நிலை ஒருபோதும் ஏற்படக்கூடாது.
அமைச்சரின் இறுதி பதில்..! இதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, நான் முன்வைத்த விடயங்கள் உண்மையானவை என்பதை ஏற்றுக்கொண்டார். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண விசேட மருத்துவக் குழு ஒன்றை அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், இந்த ஊசி மருந்தை முறையான கொள்முதல் செயன்முறையின் ஊடாக கொள்வனவு செய்வதற்கு குறைந்தது ஆறு வாரங்களாவது தேவைப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
எனவே, இந்த முக்கியமான பிரச்சினையை பாராளுமன்றத்தில் தெளிவாக முன்வைத்ததற்காக எனக்கு மீண்டும் நன்றி தெரிவிப்பதாகவும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
எனது நிலைப்பாடு மிகவும் தெளிவானது. புற்றுநோயாளர்களின் சிகிச்சையில் மருந்துப் பற்றாக்குறை காரணமாக எந்தவிதமான இடையூறும் ஏற்படக்கூடாது. அரச வைத்தியசாலைகளில் கிடைக்க வேண்டிய அத்தியாவசிய மருந்துகளை நோயாளர்கள் தனியார் சந்தையில் பல மடங்கு விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்படக்கூடாது. இந்தப் பிரச்சினைக்கு உடனடி தீர்வும், எதிர்காலத்தில் மீண்டும் பற்றாக்குறை ஏற்படாத வகையிலான நிரந்தர நடவடிக்கையும் சுகாதார அமைச்சினால் உறுதி செய்யப்பட வேண்டும்.
Government Must Act Immediately to Resolve Filgrastim Shortage Affecting Cancer Patients. Colombo, 20 August 2026
I raised in Parliament today the serious shortage of Filgrastim injections, an essential medicine used in chemotherapy, bone marrow transplantation and other cancer treatments, at the Maharagama Apeksha Hospital and other government hospitals.
Cancer patients and their families have directly brought this issue to my attention. I also tabled two recent Daily Mirror reports in Parliament highlighting the shortage.
This is not an ordinary medicine shortage. Filgrastim is directly connected to the treatment and well-being of cancer patients, and any interruption in its availability can have serious consequences for patients who are already undergoing difficult and demanding treatment.
I therefore asked the Minister of Health to provide clear information on the extent of the shortage, the hospitals affected, current stock levels, daily and monthly requirements, procurement arrangements and when adequate supplies would reach government hospitals.
I also raised serious concerns over reports that patients are being forced to purchase Filgrastim from private pharmacies at prices ranging from Rs. 17,000 to Rs. 23,000 per injection, while Neupogen injections are reportedly being sold for between Rs. 20,000 and Rs. 30,000 in some areas.
For families already facing the enormous financial and emotional burden of cancer treatment, being forced to purchase an essential medicine at such prices is unacceptable.
During the exchange in Parliament, Health Minister Dr. Nalinda Jayatissa acknowledged that there is a shortage and assured that steps are being taken to resolve the immediate problem within one week. The Minister also stated that a special medical team has been established to address the issue.
However, the Minister also indicated that procurement through the regular process could take at least six weeks. This raises an important question: what arrangements are being made to ensure that patients have uninterrupted access to the medicine during this period?
A procurement delay must never become a patient’s medical crisis.
I have also received information that similar difficulties may be affecting government hospitals in the Northern and Eastern Provinces, including Jaffna. This requires urgent verification and immediate action.
I have therefore called for continuous monitoring of Filgrastim stocks and requirements at every major government hospital. The Ministry must know, at any given time, how much medicine is available, how much is required and for how many days the existing stocks will last.
The government has a fundamental responsibility to ensure that no cancer patient is forced to delay or discontinue treatment because an essential medicine is unavailable or unaffordable.
I welcome the Minister’s assurance that the immediate shortage will be addressed within one week. However, this cannot end with a temporary solution.
The Ministry of Health must establish a reliable long-term procurement and supply mechanism for Filgrastim and other essential cancer medicines so that the same crisis does not recur.
Cancer patients should not have to choose between continuing their treatment and being able to afford it. Essential medicines that should be available in our government hospitals must not become commodities that only those with financial means can purchase from the private market.
The government must act immediately and ensure that every cancer patient receives the treatment and medicines they require, without interruption and without discrimination based on their ability to pay.