11/07/2020
பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் அமைச்சரவை அமைக்கும் முறையும், பதவி நீக்கமும்.
பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பு நடைபெற்று முடிந்ததும் வாக்கு கணிப்பீடு நடைபெறும். அதனையடுத்து கட்சிகள் அல்லது சுயேட்சைக் குழுக்களுக்கான பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டதும் பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி தலைமையில் கூடும். இதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற கட்சி தாம் அமைச்சரவையை அமைப்பதற்கான கொள்கைப்பிரகடன உரையினை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கும். இதன் பின்னர் ஜனாதிபதி முதலாவது கூட்டத்தொடரில் வெற்றி பெற்ற கட்சியின் சார்பான கொள்கை விளக்க உரையினை நிகழ்த்துவார். இதனையடுத்து வாக்கெடுப்பு இடம் பெறும். 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் இவ் வாக்கெடுப்பில் அறுதிப்பெரும்பான்மை உறுப்பினர்களின் சம்மதத்துடன் அதாவது ஆகக் குறைந்தது 113 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் உரை வெற்றி பெற்றால் முதலாவதாக சபாநாயகர் தெரிவு இடம் பெறும். அதனைத் தொடர்ந்து பிரதி சபாநாயகர், குழுக்களின் தவிசாளர் ஆகிய மூவரும் பாராளுமன்றத்தின் அறுதிப் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் தெரிவு செய்யப்படுவர். பின்னர் நடைபெறும் ஒவ்வொரு கூட்டத்தொடரும் சபாநாயகர் தலைமையில் இடம் பெறுவதோடு சபையின் நடவடிக்கைகளை நெறிப்படுத்தும் முழு அதிகாரமும் சபாநாயகரிடமே காணப்படும்.
அமைச்சரவை அமைக்கும் முறை
ஜனாதிபதி. பிரதமர், அமைச்சர்கள் ஆகியோர்களை உள்ளடக்கிய குழுவே அமைச்சரவையாகும். ஜனாதிபதியே அமைச்சரவையின் தலைவராவார். அமைச்சரவையின் ஏனைய உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இருந்து தெரிவு செய்யப்படுவர். அரசியலமைப்பின் 43 ஆம் பிரிவுக்கமைய ஜனாதிபதி பாராளுமன்ற பொதுத்தேர்தல் முடிவடைந்ததும் அதன் நம்பிக்கையைப் பெறக் கூடிய ஒருவரை அதாவது அறுதிப் பெரும்பான்மை அல்லது அரைவாசிக்கு மேற்பட்ட அல்லது 113 அல்லது 113 ற்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவினை பெறக்; கூடிய ஒருவரை ஜனாதிபதி பிரதமராக நியமிப்பார்.
1978 ஆம் ஆண்டு மூல யாப்பின் உறுப்புரை 47 இன் படி ஜனாதிபதி அமைச்சரவைக்கான ஏனைய அமைச்சர்களை தனது தற்துணிவின் அடிப்படையில் நியமிப்பார். அப்போது விரும்பினால் பிரதமரின் ஆலோசனையை ஜனாதிபதி பெறலாம். ஆனால் அமைச்சரவையை அமைப்பது தொடர்பான முழு அதிகாரமும் ஜனாதிபதியிடமே காணப்படுகின்றது. பாராளுமன்றத்தின் பெரும்பான்மை ஒரு கட்சியிடமும் ஜனாதிபதி வேறு கட்சியாகவும் இருக்கின்றபோது ஜனாதிபதி இணைவுச் செயற்பாட்டுடன் செயற்படும் நிலை ஏற்படலாம். ஆனால் 19 ஆம் திருத்தத்தின் பிரிவு 46 (03) இன் படி ஜனாதிபதியின் தற்துணிவு அதிகாரம் நீக்கப்பட்டு அமைச்சரவையினை அமைக்கும்போது பிரதமரின் ஆலோசனையை பெறுவது கட்டாயமாகும்.
அரசியலமைப்பின் 44, 45, 46 ஆகிய உறுப்புரைகளுக்கு ஏற்ப ஜனாதிபதிக்கு அமைச்சரவை தொடர்பில் தீர்மானிக்கும் முழு அதிகாரமும் உண்டு. அதாவது ஜனாதிபதி தனது சுய விருப்பப்படி அமைச்சரவையின் எண்ணிக்கையினைத் தீர்மானிப்பதோடு தமக்கு தேவையான அமைச்சர்களை ஒதுக்கிக் கொள்ளலாம். அத்துடன் எச்சந்தர்ப்பத்திலும் அமைச்சுக்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பணிகளையும் பொறுப்புக்களையும் மாற்றுவதற்கான அதிகாரமும் ஜனாதிபதியைச் சார்ந்ததாகும். ஆனால் 19 ஆம் திருத்தத்தின் பின்னர் அமைச்சர்களை நியமிக்கும்போதும் அவர்களை பதவியில் இருந்து நீக்கும்போதும் ஜனாதிபதி கட்டாயமாக பிரதமரின் ஆலோசனையை பெறுவது அவசியமாகும். இதனடிப்படையில் அமைச்சரவையினை அமைக்கும்போது 46 (1- அ) யாப்பு பிரிவுக்கு ஏற்ப அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுக்களின் எண்ணிக்கை 30 ற்கு மேற்படாமலும் 46 (1- ஆ) யாப்பு ஏற்பாட்டிற்கு அமைய இராஜாங்க அமைச்சுக்கள், பிரதி அமைச்சுக்கள் உள்ளிட்ட 40 அமைச்சுக்களுக்கு மேற்படாமலும் நியமிக்க வேண்டும் என்ற வரையறை காணப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
எனினும் 19 ஆம் திருத்தத்தின் பிரிவு 46 (04) என்ற ஏற்பாட்டிற்கு ஏற்ப தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், அமைச்சரவை அந்தஸ்த்தற்ற அமைச்சர்களை தீர்மானிக்கும் அதிகாரம் பாராளுமன்றத்தின் அனுமதியுடன் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அமைச்சுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆகவே ஆட்சியமைக்கும் அரசாங்கம் கட்டாயம் தேசிய அரசாங்கம் அமைப்பதற்காக கூடுதலான ஆசனங்களைப் பெறும் கட்சிகளை தங்களுடன் இணைப்பதற்கு பாரியளவு பிரயத்தனங்களை மேற்கொள்ளும் என்பதனை எதிர்பார்க்கலாம். 2015 இல் நல்லாட்சி அரசாங்கத்தில் இவ்வாறானதொரு அமைச்சரவை விஸ்தரிப்பு நடைபெற்றது.
அமைச்சரவை பாராளுமன்றத்துக்கு கூட்டாக பொறுப்புடையது. அமைச்சரவை மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றுவதன் மூலம் அமைச்சரவையை பதவியிலிருந்து நீக்கலாம். அமைச்சரவை நீக்கப்பட்டாலும் அமைச்சரவையின் தலைவரான ஜனாதிபதி தொடர்ந்து பதவியிலிருப்பார். அமைச்சர்களை அவர்களது கருமங்கள் தொடர்பான கேள்வி கேட்கும் உரிமை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உண்டு. இதற்கு பதிலலிக்கும் கட்டுப்பாடு அமைச்சர்களுக்கு உண்டு.
பாராளுமன்றக் கலைப்பும், பிரதமரின் பதவி நீக்கமும்
மூல யாப்பின் படி அதாவது அரசியலமைப்பின் 49(1) உறுப்புரைக்கு ஏற்ப ஜனாதிபதியானவர் பிரதமரை எந்த நேரத்திலும் பதவி நீக்க முடிவதோடு, பிரதமர் பதவி வெற்றிடமாகும்போது அமைச்சரவையும் கலைக்கப்படும். அத்துடன் ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாத சூழ்நிலையில், பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட்டு ஒரு வருடத்தின் பின்னர் எவ் வேளையிலும் பாராளுமன்றத்தினை ஜனாதிபதி கலைக்க முடியும். ஆனால் 19 ஆம் திருத்தத்தின் பின்னர் 46(2) எந்த சூழ்நிலையிலும் பிரதமரை பதவி நீக்க முடியாது. அவ்வாறு செய்வதாயின் அவரது இராஜினாமாவின் மூலமோ அல்லது பிரதமரின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும்போது தவிர பாராளுமன்றத்தின் பதவிக் காலம் 4 வருடமும் 6 மாதங்களும் முடிந்த பின்னரே கலைக்க முடியும். பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலும் புதிய அமைச்சரவை பதவி ஏற்கும் வரை பழைய அமைச்சரவை(காபந்து) தற்காலிகமாக செயற்பட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களுக்கு என செயலாளர் ஒருவர் இருப்பார். இவர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவார்கள். அமைச்சரவை அமைச்சுக்களை ஒருங்கிணைக்கும் வகையில் அமைச்சரவைக்கு என ஒரு செயலாளர் இருப்பார். இவர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவதோடு அமைச்சரவையின் அலுவலகத்துக்கு பொறுப்பாக இருந்து செயற்படுவார். கூடியுள்ள ஒரு பாராளுமன்றின் தவணைக் காலத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கும் ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு. இதன் மூலம் பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ள விடயத்தை பிற்போடுதல், நியமிக்கப்பட்ட தெரிவுக்குழுவினை இல்லாதொழித்தல் ஆகியவற்றை மேற்கொள்ள முடிகின்றது. அத்துடன் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றிலிருந்து விடுபடுவதற்கும் இவ் அதிகாரத்தை ஜனாதிபதி பயன்படுத்த முடியும்.
அமைச்சரவையில் பிரதமர்
1978 ஆம் ஆண்டு மூல அரசியல் அமைப்பின்படி பிரதமர் ஒரு சாதாரண அமைச்சருக்கு உரிய கடமைகளையே ஆற்றுகிறார். பதவியில் பெயர் மட்டுமே பிரதமர் என அழைக்கப்படுவார். அதிகாரங்கள் எதனையும் சிறப்பாக கொண்டவர் அல்ல அத்துடன் அமைச்சரவையின் தலைவரும் இவரில்லை. என்பதோடு குறைவான நிர்வாக அதிகாரங்களையே கொண்டுள்ளார். பாராளுமன்றத்தின் அரசாங்க கட்சி உறுப்பினர்களை வழிநடத்தும் பொறுப்பு இவரையே சாரும். ஜனாதிபதி பதவி வகிக்க முடியாத சந்தர்ப்பத்தில் பதில் ஜனாதிபதியாக கடமையாற்றுவார். ஆனால் 19 ஆம் திருத்தத்தின் பின்னர் அதாவது அமைச்சரவையை அமைத்தல் தொடர்பாகவும், பதவி நிலையிலும் பிரதமரின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் அரசியலமைப்பு பேரவையில் உறுப்பினராக இருப்பது இவரது அந்தஸ்தினை உயர்த்துகின்றது.
எனவே 1978 ஆம் ஆண்டு மூல அரசியலமைப்பின் கீழ் ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரம் வழங்கப்பட்டமை பிரதமரின் முக்கியத்துவம் குறைவடைய காரணமாகும். ஆனால் 19 ஆம் திருத்தத்தின் பின்னர் பிரதமரின் அதிகாரங்கள் அதிகரித்துள்ளதோடு ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. இங்கு ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அதிகாரங்களை சமப்படுத்த முயற்சித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.
நன்றி
திரு. மனோகரன் பிரதீபன் B.A Hons, LLB
ஆசிரியர்,
மகிழடித்தீவு சரஸ்வதி மகா வித்தியாலயம்.