07/03/2025
ஏதோ விஜய் படம் ரீலிஸான மாதிரி பெரிய ஆரவாரமாய்க் கொண்டாடி மெஸேஜுக்கு மேல் மெஸேஜ் போட்டு போஸ்ட் எல்லாம் போட்டு மென்ஷன் பண்ணியதால் அல்ஜெஸீராவைப் போட்டேன். அடப்பாவமே... ‘If you don’t want me , I am prepared to leave.’ என்று சொல்லிக் கொண்டிருந்தார் ஒரு சிலருக்கு கடவுள் அந்தஸ்தில் இருக்கும் மாபெரும் ராஜதந்திரி.அதுவும் தன்னை விட முப்பது வயது இளமையான மஹ்தி ஹஸன் என்ற பிரசித்தி பெற்ற ஊடகவியலாளரிடம்.
முழுதாய்ப் பார்த்து முடித்தாயிற்று. என் கேள்வி எல்லாம் எந்த எருமை மாட்டுத் தைரியத்தில் இப்படி ஒரு நிகழ்ச்சிக்குப் போய் மூக்குடைபட்டார் என்பதுதான்.போரால் பாதிக்கப்பட்ட்ட டயஸ்போரா மக்கள் இருக்கும் அரங்கில் ,அல்ஜெஸீரா ஊடகத்தை எதிர்கொள்ள எந்த அசட்டுத் துணிவில் இவர் போனார்.வின்னர் படத்தில் அடிவாங்கிய வடிவேல் பரவாயில்லை என்கிற அளவுக்கு இருந்தது நிலமை.சுற்றி இருக்கும் ஜால்ராக்கள் 'உன்னை விட்டால் ஆளில்லை.நீதான் சர்வதேச புடுங்கி' என்று காதில் சதா சொன்னதால் ஒருவேளை போய் இருக்கக் கூடும்.
மஹ்தி கேட்ட கேள்விகள் எல்லாமே யாருக்குமே புதிசு அல்ல.’இரவைக்கு நெட்பிளிக்ஸ் பார்த்தபிறகா இடியாப்பமும் பால்சொதியும் சாப்பிடுகிறீர்கள் அல்லது அதற்கு முன்பா’ என்று பவ்யமாய்க் கேட்கும் ஊடகத்துறையைச் சேர்ந்தவர்களிற்கு இதெல்லாம் வியப்பை ஏற்படுத்தலாம்.ஆனால் இலங்கையின் அரசியல் சரித்திரம் தெரிந்த யாருக்குமே மிகச் சாதாரண கேள்விகள்.
ராஜபக்சேவை பிரசித்தமாய் எதிர்ப்பதாய்ச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.ஆனால் ரணில்- ராஜ்பக்சே என்று மக்கள் ஏன் சொல்கிறார்கள். நீங்கள் அவரைப் பாதுகாப்பதால் அப்படி ஒரு பெயர் வந்ததா?
உள்ளூராட்சித் தேர்தலை நடத்தப் பணம் இல்லை என்று காரணம் கூறினீர்கள்.எலிசபத் மகாராணியினதும் ஜப்பான் பிரதமரதும் மரண வீடுகளுக்குப் போவதற்கு எல்லாம் பணம் இருந்ததா
என்று அனல் தெறிக்கும் கேள்விகள்.ஒரு கட்டத்தில் நீ பிறக்க முன்பே நான் அரசியலில் இருக்கிறேன் என்று சொல்வார் ரணில் பரிதாபமாய்..
மஹ்தி விடுவதாய் இல்லை.பதினாறு வருடங்களுக்கு முன்பு தமிழ்ப் படுகொலைகளுக்கு நீதி ஏன் கிட்டவில்லை என்று கேட்கும் போது ‘I am not saying anything I said no contest . so bring next question.’ என்று முணங்கும் போது ஆறாம் வாய்ப்பாடு தெரியாத மாணவன் ஒருவன் போல இருந்தது. தமிழ்ப் படுகொலைகளுக்குப் பொறுப்புடன் பதில் கொடுக்க எந்த அரசியல்வாதியுமே லாயக்கில்லாத போது இனமுரண்பாட்டின் ஆணிவேரான ஐக்கிய தேசியக் கட்சியின் பலமிகு அமைச்சராகவும், ஆறு முறை பிரதமர்,ஜனாதிபதிப் பதவியை அலங்கரித்தவருமான இவர் ஏன் இந்நிகழ்ச்சிக்குப் போனார்.
அதைவிட நகைச்சுவை என்னவென்றால் ரணில் சார்பாய்ப் பேச என்.ஜே தேவா என்ற ஒரு தூதுவர் பொறுமையிழந்து ,'இதெல்லாம் ராஜபக்சேக்களிடம் கேட்க வேண்டிய கேள்விகள்.இவரது அரசியலை ராஜபக்சேக்கள் நாசம் செய்துவிட்டார்கள் என்று அடித்துவிட உடனே மஹ்தி,' அப்படி என்றால் இவர் ஏன் 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் மகிந்த ராஜபக்சேவின் பிறந்த நாள் விழாவில் கேக் எல்லாம் வெட்டிப் பாட்டுப் பாடினார்' என்று கேட்க மண்டபம் முழுக்க வெடிச் சிரிப்பு. திரும்பவும் கேட்கிறேன்.இவர் ஏன் இந்நிகழ்ச்சிக்குப் போனார்..
ஒருகட்டத்தில் ,’நான் உன் கேள்விக்குப் பதில் அளிக்கப் போனால் சத்தம் போடுகிறாய்.என்னைப் பேச விடாமல் தடுக்கிறாய். ‘no contest’ என்று வெறுத்துப் போய் சொல்லத் தொடங்கினார். இதென்ன சின்னப்பிள்ளைத்தனம் என்று மஹ்தி கேட்க ‘if I am childish , Ghandi was also childish ,I am only doing what ghandi did’ என்ற போது 'டேய் படவா, அந்த யூரியா பாக்டரி, படலந்த வதை முகாம்' என்று நாம் நினைப்பதெல்லாம் கேள்வியாய் இறுகி வந்தது.
படலந்த அறிக்கை என்பது சந்திரிக்கா என்ற மங்குனி தன் தேர்தல் பிரசாரத்திற்கு மட்டும் பாவித்துவிட்டு கிடப்பில் போட்ட ஒன்று.பாதிக்கப்பட்ட நிறையப் பேரின் சாட்சிகள் அதில் உண்டு.படலந்த ரிப்போர்ட்டைத் தூக்கிக் காட்டி மஹ்தி சுட்டிக் காட்டிய சாட்சியளர் வின்சன்ட் அதில் முக்கியமான நபர்.படலந்த அறிக்கை பற்றி மஹ்தி சொல்லும் போது ரணிலின் முகத்தைப் பார்க்கவேண்டும்.அவ்வளவு கொதிப்பு.பப்படம் நான்கைத் தூக்கிப் போட்டால் பொரிந்து வரும்.சஹருக்கு சாப்பிடலாம். திரும்பவும் கேட்கிறேன்.இவர் ஏன் இந்நிகழ்ச்சிக்குப் போனார்.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் பற்றிய சதியின் பின்புலம், கோட்டாபய ராஜபக்சேவிற்குத் தண்டனை வழங்காமல் விட்டது, யுத்தக் குற்றவாளி என்று அமெரிக்கா கறுப்புப் பட்டியலில் சேர்த்த சவேந்திரசில்வாவுக்குப் பதவி வழங்கி அலங்கரித்தது என்றெல்லாம் சமாளிக்கத் திராணி இல்லாத கேள்விகள்.ஒன்றன் பின்னர் ஒன்றாய் வந்து விழுந்தன.
கெட்ட கேட்டுக்கு ‘’ we are non-violent nation’ என்றார். 'அடேய் இது மட்டும் வேணாம் டா' ஜெயசூரியாவுக்கு ஃபுல்டோஸ் போடுறாயே என்று எனக்கே சலிப்பானது. நினைத்தது சரி.இருபத்தாறு வருட யுத்தத்தில் ஒரு லட்சம் பேர் கொலை செய்ப்பட்டார்கள். இதுதான் வன்முறையற்ற தேசமா என்று சுர்ரென்று வந்தது மஹதியிடமிருந்து பதில்.
ரணில் ,காந்தி - புத்தர் பற்றிப் பேசும் போது மட்டும் மஹ்தி கொஞ்சம் அமைதியாய் இருந்தார். ஆடியன்ஸாய் இருந்தால் கோனவல சுனிலையும்,சொத்தி உபாலியையும் வளர்த்தெடுத்தவர்கள் காந்தி - புத்தர் பற்றிப் பேசலாமா என்று மஹ்திக்கு பாய்ண்ட்ஸ் எடுத்துக் கொடுத்திருக்கலாம்.
போதாக்குறைக்கு ஒருவன் எழும்பி, 1983ம் ஆண்டு இன அழிப்பு நடந்துகொண்டிருந்த போது கெபினட் அமைச்சராய் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் என்று கேட்டான்.வன்முறையற்ற நாடு என்று முன்னர் சொன்ன ரணிலார் இப்போது டியூனை மாற்றி இன அழிவுகள் எங்கேயும் நடப்பதுதானே என்ற தொனியில் உருட்ட, இது போர்க்குற்றம் இல்லையா என்று மஹ்தி கேட்க பார்த்த எனக்கே பரிதாபத்தில் களைப்பாகிவிட்டது.
கடைசியாய் ஒரு விசயம் .ஆங்கிலம் என்பது வெறும் மொழி.அந்த எழவு நமக்குத் தாராளமாய் வரும் என்று கோட்டையும் சூட்டையும் மாற்றிக் கொண்டு போனால் இப்படியொரு உண்மையான ஊடகவியலாளன் டவுசரையும் அண்டர்வேரையும் தலைவழியால் கழட்டுவான்.அதுதான் அல்ஜெஸீரா நேர்காணலில் நடந்து இருக்கிறது. சரி.கடைசியாய் ஒருதடவை கேட்கிறேன். இவர் ஏன் இந்நிகழ்ச்சிக்குப் போனார். (Copy)