18/09/2026
பகலில் ரிக்ஷா வண்டி, இரவில் படிப்பு!
மூன்றாவது முயற்சியில் 609 மதிப்பெண்கள் பெற்று வைத்தியர் கனவை நனவாக்கிய சுஹைல்🚨❤️
நெகிழ வைக்கும் வெற்றி
இந்தியாவின் கடினமான மருத்துவ நுழைவுத் தேர்வுகளில் ஒன்றான NEET-UG தேர்வில், வறுமை மற்றும் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் விடாமுயற்சியுடன் போராடி 609 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த முகமது சுஹைல்.
உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த சுஹைலின் குடும்பத்தில் இதற்கு முன்பு யாரும் 12ஆம் வகுப்பிற்கு மேல் கல்வி கற்றதில்லை. அவரது தந்தை ரிக்ஷா தொழிலாளியாக பணியாற்றி வந்த நிலையில், குடும்பத்தின் கடுமையான நிதி நெருக்கடி காரணமாக பள்ளிப் படிப்பை முடித்ததும் சுஹைலும் குடும்பத்திற்காக உழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனால், தனது தந்தையின் இ-ரிக்ஷாவை ஓட்டத் தொடங்கிய சுஹைல், தினமும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை முசாபர்நகரின் வீதிகளில் பயணிகளை ஏற்றிச் சென்றார். அதன் மூலம் கிடைத்த 300 முதல் 500 ரூபாய் வரையிலான வருமானத்தைக் கொண்டு குடும்பச் செலவுகளுக்கு உதவி வந்தார்.
ஆனால், குடும்பத்தின் பொருளாதார நிலை அவரது கனவுக்கு தடையாக இருக்கவில்லை. சுஹைலின் தாயார் நீண்ட காலமாக தனது மகன் மருத்துவராக வேண்டும் என்று கனவு கண்டிருந்தார். அந்தக் கனவை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன், இ-ரிக்ஷா ஓட்டியபடியே NEET தேர்வுக்குத் தயாராகவும் முடிவு செய்தார்.
ஆரம்பத்தில் NEET தேர்வு குறித்தோ, மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான நடைமுறைகள் குறித்தோ சுஹைலுக்கு அதிகம் தெரியாது. ஒரு நண்பர் மூலம், NEET தேர்வில் வெற்றி பெற்றால் அரசு மருத்துவக் கல்லூரியில் குறைந்த செலவில் MBBS படிக்க முடியும் என்பதை அறிந்த பின்னரே அவரது வாழ்க்கையில் புதிய திருப்பம் ஏற்பட்டது.
லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கும் தனியார் பயிற்சி மையங்களில் சேரும் வசதி சுஹைலிடம் இல்லை. அதுமட்டுமின்றி, ஐந்து பேர் கொண்ட அவரது குடும்பம் ஒரே சிறிய அறையில் வசித்து வந்ததால், வீட்டிலும் அமைதியாகப் படிப்பதற்கான சூழல் இருக்கவில்லை.
சுஹைலின் சூழ்நிலையையும் கல்வி மீதான ஆர்வத்தையும் புரிந்துகொண்ட அவரது ஆசிரியர் ஹாஷிர், தனது சொந்த அறையிலேயே சுஹைல் அமைதியாகப் படிப்பதற்காக இடம் வழங்கினார்.
இதனுடன், குறைந்த கட்டணத்தில் கிடைத்த Physics Wallah ஆன்லைன் பாடநெறியில் இணைந்து கைபேசி மூலமாக பாடங்களை கற்றுக்கொண்டார். அவரது படிப்புக்கு உதவுவதற்காக அவரது சகோதரரும் தனது படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குச் சென்று குடும்பத்திற்கு ஆதரவளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பகல் முழுவதும் இ-ரிக்ஷா ஓட்டிய சுஹைல், இரவு நேரங்களில் நள்ளிரவையும் தாண்டி படிப்பில் ஈடுபட்டார். தூக்கத்தையும் சோர்வையும் ஒதுக்கி வைத்து, மருத்துவராக வேண்டும் என்ற ஒரே இலக்குடன் தொடர்ந்து முயற்சி செய்தார்.
சுஹைலின் வெற்றிப் பயணமும் அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. முதல் NEET முயற்சியில் அவர் பெற்ற மதிப்பெண் வெறும் 190. இரண்டாவது முயற்சியில் 369 மதிப்பெண்கள் பெற்றார். ஆனால், தொடர்ச்சியான தோல்விகளால் அவர் தனது கனவை கைவிடவில்லை.
அவரது விடாமுயற்சியை கவனித்த மீரட்டில் உள்ள ஒரு பயிற்சி மையம், அவருக்கு இலவசப் பயிற்சியும் வழிகாட்டுதலும் வழங்கியது. அதன்பின்னர் மூன்றாவது முறையாக NEET தேர்வை எதிர்கொண்ட சுஹைல், இந்த முறை 609 மதிப்பெண்கள் பெற்று சிறந்த தரவரிசையைப் பெற்றார்.
இதன் மூலம் அரசு மருத்துவக் கல்லூரியில் MBBS படிப்பதற்கான வாய்ப்பை அவர் உறுதி செய்துள்ளார்.
இ-ரிக்ஷா ஓட்டி குடும்பத்திற்கு வருமானம் ஈட்டிய அதே நேரத்தில், இரவு நேரங்களில் தனது மருத்துவக் கனவுக்காகப் போராடிய சுஹைலின் வெற்றி தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது
“இவ்வளவு பெரிய சாதனை படைத்தும் சுஹைலுக்கு யாரும் வாழ்த்து தெரிவிக்கவில்லை” என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், அவரது சாதனை குறித்து India Today, Times Now, Economic Times, Aaj Tak உள்ளிட்ட பல இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், உறவினர்களும் ஊர் மக்களும் அவரை நேரில் சந்தித்து வாழ்த்தியுள்ளனர்.
வறுமை கனவுகளுக்கு தடையாக இருக்கலாம், ஆனால் விடாமுயற்சிக்கு முன்னால் அது நிரந்தர தடையல்ல என்பதை சுஹைலின் பயணம் உணர்த்துகிறது.
முகமது சுஹைலுக்கு நாங்களும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்! அவரது MBBS கனவு வெற்றிகரமாக நிறைவேறட்டும். ❤️👨⚕️
.itvtamilmedia .com| *ITV Tamil media*
NEETSuccess