17/11/2023
முன்னுரையிலேயே நூலாசிரியர் புத்தகத்தின் நோக்கத்தை "நமது நாட்டில் சமூகங்களுக்கிடையிலான உறவுகள் ஆரோக்கியமற்ற நிலையில் இருப்பதை கருத்தில் கொண்டு இந் நூல் எழுதப்பட்டிருக்கிறது" என்று தெளிவாக கூறியிருக்கிறார்.
'அரகலய' எனும் அநீதிக்கு எதிரான அமைதியான ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து பல புத்தகங்களும் இதழ்களும் கட்டுரைகளும் வெளிவந்தாலும் கூட, முஸ்லிம்களை மட்டுமே முழுக்க முழுக்க மையப்படுத்தி வெளிவந்த புத்தகங்கள் என்றால் எப்படியும் இருக்காது. இருந்தாலும், இந்த புத்தகத்தை போல ரத்தின சுருக்கமாகவும் விலாவரியாகவும் தெளிவாகவும் இருக்காது என்றே நினைக்கிறேன்.
ஏழாவது அறிமுக நூல்:
இலங்கை முஸ்லிம்களை
புரிந்து கொள்ளல்
நூல் வகை:
வரலாறு
நூலாசிரியர்:
அ.வா. முஹ்சீன்
பக்கங்கள்:
146
வெளியீடு:
Ghazal Publications
முதல் பதிப்பு:
ஜனவரி 2023
விலை:
LKR - 900/= || INR - 220/=
கிடைக்குமிடங்கள்:
இலங்கையில் - Fathima Book Centre
இந்தியாவில் - CommonFolks
"ஒரு வரலாற்று பதிவு" என்ற தலைப்பின் கீழ் மகாவம்சத்தில் இடம்பெறும் சில பகுதிகளோடு ஆரம்பிக்கும் இந்த புத்தகம் "இலங்கை முஸ்லிம்களின் அரசியல் போக்குகள்" என்ற தலைப்பினூடாக பயணித்து "முடிவாக" என்ற பகுதியினூடாக புத்தகத்தின் சுருக்கத்தை நான்கு பக்கத்திற்குள் தெளித்து முடித்திருக்கிறார் நூலாசிரியர்.
ஒரு சமூகத்தை புரிந்து கொள்ள அச் சமூகத்தின் பொருளாதாரம், மதம், பண்பாடு & மரபுகள், நடத்தை பாங்குகள், வரலாறு, அரசியல் போக்குகள் என்பவை முக்கியமாக அடங்கும் என்று கூறி இவற்றை வைத்தே முழுக்க முழுக்க இலங்கை முஸ்லிம் சமூகத்தை அலசுகிறார்.
பொருளாதாரம் என்ற பகுதியில் இலங்கை முஸ்லிம்களின் விவசாயம், மீன்பிடி, பொட்டணி வியாபாரம், நடைபாதை வியாபாரிகள், இரத்தினக்கல் & ஆடை வர்த்தகம் பற்றியும் அவர்களின் பங்களிப்பு பற்றியும் விபரிக்கப்படுகின்றது.
இந்த நாட்டில் பிற சமூகங்களை விட அதிக வீதத்தில் ஏழைகளையும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்கின்றவர்களையும் கொண்ட சமூகமாக இலங்கை முஸ்லிம்கள் இருக்கின்றார்கள் என்றும் இந்த உண்மைகள் சரியாக புரிந்து கொள்ளப்படாததன் காரணமாக முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறை தாக்குதல்களில் பிரதானமாக இரண்டு உதாரணங்கள் எடுத்துக்காட்டப்படுகின்றன
2019 ஈஸ்டர் தாக்குதலுக்கு பின் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான வீடுகளும் கடைகளும் தாக்கப்பட்டன.
2014யில் பேருவளை, அளுத்கம போன்ற பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 429 வர்த்தக நிலையங்களும் 147 வீடுகளும் சேதமாக்கப்பட்டதோடு, கிட்டத்தட்ட 53 வாகனங்களும் எரியூட்டப்பட்டன. மொத்த சேதங்களின் பெருமதி 250 கோடியாக மதிப்பிடப்பட்டது என்று இலங்கை முஸ்லிம்களை பிற சமூக மக்கள் புரிந்து கொள்ளாமையினால் வந்த வினை என்று ஏக்கத்தோடும் இனி இது இடம்பெறாமல் இருக்க சமூக நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்ற உறுதியையும் இந்த புத்தகம் இந்த பகுதியில் பேசுகிறது.
மதம் என்ற பகுதியில் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் இஸ்லாமிய இயக்கங்கள், உயர்த்த ஞாயிறு கொண்டு தாக்குதல்களும் இலங்கை முஸ்லிம்களின் எதிர் வினைகளும், வஹ்ஹாபிஸமும் இலங்கை முஸ்லிம்களும், ஷரீஆ - இஸ்லாமிய சட்ட முறைமை என்பவற்றோடு அண்மையில் ஏற்பட்ட சர்ச்சையான காவி நீதிமன்றங்களில் பெண்கள் பொறுப்பேற்பது பற்றிய விடயத்தையும் பெண்களின் திருமண வயது அவர்களுக்கான சுதந்திரங்கள் பற்றியும், ஏனைய சமூகங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக தொழுகைக்காக அழைக்கும் பாங்கு, ஜும்ஆ, மத்ரசாக்கள் பற்றியும் உரையாடப்படுகின்றன.
பண்பாடு என்ற பகுதியில் சமீப காலங்களில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த இலங்கை முஸ்லிம்களின் உணவு முறை, ஹலால் சான்றிதழ், பெண்களின் ஆடை முறை போன்றவற்றை பற்றி முஸ்லிம்களும் விளங்கிக் கொள்ள வேண்டிய முக்கியமான விடயங்களை பற்றி பேசுகின்றது.
நடத்தை பாங்குகள் என்ற பகுதியில் முஸ்லிம்கள் பிற சமூகங்களுடன் எப்படி இணங்கி வாழ வேண்டும் என்பது பற்றியும், பதி இடங்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பது பற்றியும் மதரீதியான கருத்துக்களை முன்வைக்கும் போது எவ்வாறு எந்த விதத்தில் முன் வைக்க வேண்டும் என்பது பற்றியும் இலங்கை முஸ்லிம்களுக்கு அறிவுரை வழங்குகிறது.
கடைசி பகுதியான இலங்கை முஸ்லிம்களின் அரசியல் போக்குகள் என்ற பகுதியில் பல்லின சமூகங்களை கொண்ட நாடு, இனம், மதம், மொழி என ஒன்றுக்கு மேற்பட்ட அடையாளங்களின் கீழ் மக்கள் வாழ்கின்ற சூழலில் பிற சமூகங்களுடன் இணக்கமாகவும் அவர்கள் மத்தியில் வெறுப்புணர்வுகளும் பகைமையும் தூண்டப்படாத முறையில் வாழ வேண்டிய, நிலை நாட்ட வேண்டிய நடுநிலை அரசியலின் தேவை பற்றி முக்கியமாக எடுத்துரைக்கிறது.
இலங்கை முஸ்லிம்கள் பற்றி பிற சமூகங்களுக்கு மத்தியில் நிலவுகின்ற தப்பெண்ணங்களையும் இலங்கை முஸ்லிம்களிடம் நிலவுகின்ற தப்பெண்ணங்களையும் அடையாளம் காட்டும் உரையாடலாக இப் புத்தகம் அமைகின்றது. என்னைப் பொறுத்தமட்டில் இந்த புத்தகத்தை வாசிப்பதால் ஏற்படும் மிக முக்கியமான நன்மை யாதெனில், அண்மையில் சமூக ஊடகங்களில் சில தமிழ் சகோதர உறவுகள் பாலஸ்தீன - இஸ்ரேல் பிரச்சனையின் மீது தெளிவில்லாததன் காரணமாக பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இருக்கும் இலங்கை முஸ்லிம்களை தூற்றினர். தூற்றுவதற்கு காரணம் பாலஸ்தீன - இஸ்ரேல் பிரச்சனையின் மீது தெளிவில்லை என்பதை தாண்டி இருக்கும் மிக முக்கியமான காரணம் ஒன்றே ஒன்றுதான் - இலங்கை முஸ்லிம்களை பற்றிய சரியான புரிந்துணர்வு இல்லாமைதான். அதற்கு பல ஆதாரங்களோடு கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்த புத்தகம் உதவும்.
ஆக, முஸ்லிம்கள் இந்த புத்தகத்தை வாங்கி படிப்பது எவ்வளவு அவசியமோ அதை போல பிற சமூக மக்களும் வாசிப்பது அத்தியாவசியமானது என்பதை இங்கு வலியுறுத்தி கூற நான் மிக கடமைப்பட்டிருக்கிறேன்.
- றஜா முஹம்மத்
Rajaa Muhammadh