15/07/2025
அமானா வங்கியின் ATM, CDM இயந்திரங்கள் அமைக்க பிரதேச சபை உறுப்பினர் ஏ.எஸ்.எம்.றஸ்மி கோரிக்கை.
ஏறாவூர்ப்பற்று ஐயங்கேணி, மீராகேணி, மிச்நகர் ஆகிய வட்டாரங்களிலுள்ள மக்களின் வங்கித்தேவையினை நிறைவேற்ற ஏறாவூர் பற்றில் ATM, CDM பணமீளப்பெறல், பணவைப்பு ஆகிய இயந்திரங்களை பொருத்துதல் சம்பந்தமாக ஏறாவூர் அமானா வங்கியின் முகாமையாளர் முஹம்மது அலி அவர்களுடன் கலந்துரையாடி அதற்கான கடிதமும் ஒப்படைக்கப்பட்டது.
இதன் போது, ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் கீழுள்ள ஐயங்கேணி, மிச்நகர், மீராகேணி பகுதிகளிலுள்ள மக்கள் பொதுவாக வங்கிச்சேவையினைப் பெற்றுக்கொள்வதில் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
குறிப்பாக,ஏறாவூர் நகர்ப்பகுதியிலுள்ள எந்தவொரு வங்கியினது சேவையைப்பெறுவதாக இருந்தாலும் 500 ரூபாவுக்கு குறையாத தொகையினை முச்சக்கர வண்டிக்கு செலவழித்து வந்தே பெற்றுக்கொள்ள வேண்டியதாக எமது பிரதேச மக்களின் நிலையுள்ளது என்பதைச்சுட்டிக்காட்டியதோடு, இந்நிலையைக் கருத்திற்கொண்டு ஏறாவூர்ப்பற்று பிரதேசத்தை மையப்படுத்தி தங்களது வங்கியினது ATM, CDM பணமீளப்பெறல், பணவைப்பு ஆகிய இரண்டு இயந்திரங்களையும் பொருத்தித்தருமாறு வேண்டிக்கொண்டதோடு, மேலும் பொருத்தமான இடத்தினை அடையாளப்படுத்தி பெற்றுத்தருவதற்கு என்னால் முடியுமான பங்களிப்புகளை வழங்கத்தயாராகவுள்ளதாகவும் பிரதேச சபை உறுப்பினர் ஏ.எஸ்.எம்.றஸ்மி தெரிவித்தார்.