03/06/2025
மனைவியின் தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த கணவர் - வவுனியால் கொடூரச் சம்பவம்
------------------
வவுனியாவில் ஒரு அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம் நடந்துள்ளது. ஒருவர் தனது மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, அவரது தலையை ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்து எடுத்து வந்து பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் ஆரம்பப் பிரிவு ஆசிரியையாகப் பணியாற்றிய ரஜூட் சுவர்ணலதா (வயது-32) ஆவார்.
இன்று (03.06) காலை, புளியங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு வந்த ஒருவர், தனது மனைவியைக் கொன்றுவிட்டு, அவரது தலையை எடுத்து வந்துள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளார். கொலை செய்த பின்னர் மனைவியின் உடலை நயினாமடு பகுதியில் வீசியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கணவன்-மனைவி இடையே குடும்பத் தகராறு நீண்ட காலமாக நிலவியதாகவும், இந்த விவகாரத்தை பொலிஸ் நிலையத்தில் தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறி, கணவர் மனைவியை அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் நயினாமடு காட்டுப் பகுதியில் மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். பின்னர் தலையைத் தனியாக வெட்டி, பிளாஸ்டிக் பையில் வைத்து, மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்து பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.
கொலையாளியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், பொலிஸார் நயினாமடு பகுதியில் தேடுதல் நடத்தி, ஆசிரியையின் சடலத்தைக் கண்டெடுத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.