20/08/2025
IMC கலந்துரையாடல் – மனிதநேயம் மிளிர்ந்த சிறப்பு விருந்து
யாழ்ப்பாணம், ஆகஸ்ட் 17:
ஐப்பசி மாத சிறுவர் தினத்தையொட்டி, 2025.08.17 அன்று மாலை, ஐஎம்.சி ஆலோசகர் (போதகர்) அவர்களின் தலைமையில் சிறப்பு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் பல்வேறு சமூக, கல்வி, பண்பாட்டு தொடர்பான விடயங்கள் முன்வைக்கப்பட்டன. உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து, சிறுவர் வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றம் குறித்த பல முக்கியமான அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.
கலந்துரையாடல்கள் நிறைவடைந்த பின், ஆலோசகர் (குரு) அவர்களால் சிறப்பு இரவு உணவு வழங்கப்பட்டது. அங்கு கலந்துகொண்டவர்களில் பெரும்பான்மையானோர் சைவ மதத்தவர்களாக இருந்தமையால், மேலும் நல்லூர் கந்தனுடைய திருவிழாக்காலத்தில் அசைவ உணவுகள் தவிர்க்கப்படுவதை கருத்தில் கொண்டு, அசைவ உணவு பாத்திரங்களைத் தவிர்த்து புதிய பாத்திரங்கள் வாங்கப்பட்டன.
அம்மாச்சி உணவகத்திலிருந்து மூன்று வகையான சைவ உணவுகள் ஆர்டர் செய்யப்பட்டு, பாரம்பரியமான வாழை இலைகளில் பரிமாறப்பட்டன. இதில், குருவின் துணைவியாரும் மகனும் மிகுந்த பணிவுடனும் அன்புடனும் அனைவருக்கும் உணவை வழங்கியமை, கலந்து கொண்டவர்களின் மனங்களில் ஆழ்ந்த வரவேற்பை பெற்றது.
“நாங்கள் எந்த மதத்தவர், எந்த இனத்தவர் என்பதல்ல முக்கியம்; மனிதநேயம் மற்றும் அன்புடன் வாழ்வதே உயர்ந்த பண்பு” என ஆலோசகர் வலியுறுத்தினார். விரதம் கடைப்பிடிக்காதவர்கள் இருந்த போதிலும், அனைவரும் ஒருமித்த மனப்பான்மையுடன் இவ்விழாவில் இணைந்து உணவுண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வின் மூலம், மத – இன வேறுபாடுகளை தாண்டிய மனிதநேயமும் ஒற்றுமையும் மிளிர்ந்தது. நிகழ்வு ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற செய்தியை மீண்டும் வலியுறுத்தியதாக அமைந்தது.