26/09/2025
சாவகச்சேரி விபத்து - யார்மீது பிழை..?
பேஸ்புக்கில் நடக்கும் விவாதங்களைப் பார்த்தால், ஒரே ஒரு விஷயம் நன்கு புரிகிறது. இலங்கையில் இப்போதைக்கு விபத்துக்கள் குறைய வாய்ப்பேயில்லை. அந்தளவுக்கு இருக்கிறது ஒவ்வொருவரும் சொல்லும் காரணமும் விளக்கமும்.
முதலில் இந்த ஆண் - பெண் விடயத்தை தூக்கி குப்பையில் போடுங்கள். “விபத்து ஏன் நடந்தது?” என்று ஆராயும்போது, அவர் ஆண், இவர் பெண் என்பதெல்லாம் விவாதப் பொருளே அல்ல.
“விபத்தில் சிக்கிய இரண்டு நபர்கள்” என்று மட்டும் பாருங்கள்.
முதலாவது, அடிப்படைத் தவறு எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்றால் - இலங்கையில் நாம் போகும்போது “இடது” பக்கத்தாலும், வரும்போது “வலது” பக்கத்தாலும் வரவேண்டும். இதுதான் போக்குவரத்து விதிகளில் ஆகவும் அடிப்படையானது. பாலர் பாடம்..!
ஆனால் இங்கே மோதுண்ட இருவரும் நடுவில் இருக்கும் வெள்ளைக்கோட்டில் மோதியிருக்கிறார்கள். வீதியின் இன்னொரு பக்கம் சும்மா கேப்பார் மேய்ப்பார் இல்லாமல் இருக்கிறது. எனவே இந்த வீதியின் பாதி அளவு சும்மா free ஆக இருக்கும்போது, வெள்ளைக்கோட்டில் வந்து மோதியிருக்கிறார்கள்.
ரிப்பருக்கு எதிர்த்திசையில் வந்த மோட்டார்சைக்கிள் சாரதிக்கு ( உயிரிழந்தவர் ) “இடது பக்கத்தால்தான் போகவேண்டும்” என்கிற விடயம் தெரியவே தெரியாது என்பது அப்படியே விளங்குகிறது. அவர் வெள்ளைக் கோட்டில் வந்ததுக்கு ஒரு காரணமும் சொல்லவே முடியாது. அதை எந்தவகையிலும் நியாயப்படுத்தவே முடியாது. அது 100% தவறு இல்லை. 1000% தவறு.
அடுத்தது அந்த ஸ்கூட்டி.
ஏற்கனவே மின்னல் வேகத்தில் போய்க்கொண்டு இருக்கும் ரிப்பரை முந்தவேண்டுமாக ( Over Take ) “அதைவிட வேகமாகச் சென்றுதான் முந்தவேண்டும்” என்கிற அடிப்படை அறிவு, அந்த ஸ்கூட்டியின் சாரதிக்கு இருந்தது போலத் தெரியவில்லை. இந்த ரிப்பரை முந்தவேண்டும் என்கிற முடிவை அவர் எடுக்க முன்பு, வீதியின் வலதுபக்கத்தை நன்கு அவதானித்திருக்க வேண்டும்.
அந்தப் பக்கம் free ஆக இருக்கா? ஏதேனும் ஆபத்துக்கள், தடைகள் இருக்கா? என்பதை நன்கு ஆராய்ந்துவிட்டே ரிப்பரை முந்தியிருக்க வேண்டும். எதிர் திசையில் மோட்டார் சைக்கிள் வந்திருக்கவிட்டாலும் கூட, இவர் ரிப்பரை முந்த முற்பட்ட விதம் மிகவும் ஆபத்தானது. ரிப்பர் பின்பக்கத்தால் வந்து மோதியிருக்க 75% வாய்ப்பு இருக்கிறது.
இதில் ஆகவும் கொடுமை என்னவென்றால், விபத்துக்கான ஆபத்து கிட்ட நெருங்கிவிட்ட பிறகும், சிவப்பு மோட்டார் சைக்கிள் சாரதி மேலும் தனது மோட்டார் சைக்கிளை வலதுபக்கமாகவே திருப்புகிறார். அதனால் தான் ரிப்பரில் மோதுண்டார்.
“இடது பக்கம்” என்கிற சொல், அவரது அகராதியிலேயே இல்லைப் போல இருக்கிறது.
மறக்ககூடாத ஒரே ஒரு விடயம் - ஏதோ ஒரு அவரசத்துக்காக வீதியின் மத்திய பகுதிக்குப் போகிறீர்கள். அதாவது வெள்ளைக் கோட்டுக்கு அருகில் போகிறீர்கள். அதற்காக அங்கேயே பாயைப் போட்டு படுக்கக்கூடாது. உடனேயே உங்கள் position க்கு வந்துவிடவேண்டும்.
அதற்கு முதல் வீதியில் எமக்கான position எது என்று தெரிந்திருக்க வேண்டும்.
ஆகவே போகும்போது இடதுபக்கத்தால் போங்கள். நடுவில் இருக்கும் வெள்ளைக்கோட்டில் உங்களுக்கு எந்த business உம் இல்லை.