14/06/2025
🚨முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்திற்கான எண்ணக்கருசார் வடிவமைப்பு - Proposed by P.Rajkumar, Jaffna
Proposed conceptual Design for Vadduvakal Bridge in Mullaitivu
சூழலுக்கு இயைவான சூழல்சார் சுற்றுலாவை மேன்மைப்படுத்தும் வகையிலும் முல்லைத்தீவின் மரபை பறைசாற்றும் வகையிலும் முன்மொழியப்படும் வட்டுவாகல் பாலத்திற்கான எண்ணக்கருசார் வடிவமைப்பு
பரந்தன் - முல்லைத்தீவு பிரதான வீதியில் முல்லைத்தீவு நகரப் பகுதியையும் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவின் ஏனைய பகுதிகளையும் இணைக்கும் பிரதான பாலமாக விளங்கும் வட்டுவாகல் பாலம் யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் காணப்பட்டு பல்வேறு தடவைகள் இதனை புணரமைப்புச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் 2020 ஆம் ஆண்டு அப்போதய கௌரவ ஆளுநர் திருமதி சாள்ஸ் அம்மையார் இணைத்தலைமையில் அரசாங்க அதிபர் திரு க.விமலநாதன் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் திரு க. கனகேஸ்வரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வட இலங்கை ஈரநில பாதுகாப்புக் கழகத்தின் (Wetland conservation society, Jaffna) நிறுவுனர் சூழலியல் மற்றும் பறவை ஆய்வாளர் திரு பா. ராஜ்குமார் அவர்களால் 5 வருடங்களாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பறவை மற்றும் சூழல்சார் சுற்றுலா வாய்ப்புக்கள் தொடர்பான ஆய்வினடிப்படையில் தன்னார்வ நோக்கில் அரசாங்க அதிபருக்கு இச் செயற்திட்ட முன்மொழிவு ஆரம்பத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதன்பின்னர் இலங்கை கோவிட் - 19 நோய்த்தொற்று மற்றும் தொடர்ச்சியான பொருளாதார நெருக்கடி காரணமாக இதற்கான நிதி உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டபொழுதிலும் பொதுமக்கள் உள்ளிட்ட இப் பாலத்தைப் பயன்படுத்தும் பல்வேறு தரப்பினர்களது தொடர்ச்சியான கோரிக்கைக்கு அமைவாக தற்போதய அரசாங்க அதிபர் உயர்திரு அ.உமாமகேஸ்வரன் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் சி.குணபாலன் ஆகியோரினது முயற்சியினாலும் முல்லைத்தீவு மாவட்ட பாராளமன்ற உறுப்பினர்கள் முயற்சியினாலும் குறிப்பாக பாராளமன்ற உறுப்பினர் கௌரவ துரைராசா ரவிகரனது முயற்சியினாலும் கௌரவ ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க மற்றும் வன்னி மாவட்ட பாராளமன்ற உறுப்பினர் கௌரவ ம. ஜெகதீஸ்வரன் ஆகியோரது முயற்றியினாலும் கௌரவ ஆளுநர் ந.வேதநாயகன் அவர்களது முயற்சியினாலும் அதி மேன்மை தங்கிய ஜனாதிபதி மற்றும் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுக மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்களின் முயற்சியினாலும் வட்டுவாகல் பாலக் கட்டுமாணத்திற்கான நிதி இவ்வாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
உண்மையில் வட்டுவாகல் பாலம் நந்திக்கடல் கடனீரேரியும் முல்லைத்தீவுக் கடலும் சங்கமிக்கும் இயற்கை எழில்மிகு பகுதியில் அமைவுபெற்றுள்ளது.
கடனீரேரியும் அதனுடன் இணைந்த கண்டல்த் தாவரங்களும் குடிபெயர் மற்றும் உள்ளூர் வதிவிடப் பறவைகளின் பிரதான வாழ்விடமாக அமைகின்றது. காலணித்துவ ஆட்சியில் குறிப்பாக பிரித்தானியர் ஆட்சிக்காலத்திலேயே இப் பகுதியில் பறவைபார்த்தல்(Bird watching) முக்கியத்துவம் பெற்றிருந்தது அது மட்டுமன்றி இப் பகுதி பாரமரியமாக சூல் லாம்பு மற்றும் கரப்பு போன்ற பாரம்பரிய மீன்பிடி முறைகளைப் பின்பற்றி மீன்கள் பிடிக்கப்படும் இடமாகவும் சப்தகன்னியர் வழிபாட்டு மரபை தொடர்ந்து நிலைநாட்டும் பகுதியாகவும் விளங்குகின்றது. எனவே சூழலியரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இப் பகுதியில் 100 வருட ஆயள்கொணடதாக கட்டப்படும் பாலங்கள் உண்மையில் உலகளாவியரீதியில் சுற்றுலா மையங்களாக கொள்ளப்படுகின்றன.இவ் வகையில் பறவைபார்த்தல், இயற்கையை ரசித்தல்,புகைபபடமெடுத்தல், இயற்கை நடை என பல்வேறு இயற்கை சூழல்சார் சுற்றுலாச் செயற்பாடுகளை மேன்மைப்படுத்தவும் கரைத்துறைப்பற்று பிரதேச சபையினுடாக பாலத்தின் இரு பகுதிகளையும் மையப்படுத்தி சுற்றுலாச் செயற்பாடுகளை மேன்மைப்படுத்தி சிறு வியாபார முயற்சியாண்மையையும் விருத்தி செய்யக்கூடிய வகையில் யுத்தத்தினல் கடின வலிகளைச் சுமந்த முல்லை தேச மக்களுக்கு ஆத்மார்த்த ரீதியில் வலி நிவாரணியாக இயற்கையுடன் இணைந்த பௌதீக கட்டுமாணம் என்ற வகையில் அசைவு (Mobility) சூழல்சார் சுற்றுலா(Ecotourism) வாழ்வாதார அபிவிருத்தி (Livelihood development )சுகாதாரம் (Health) மற்றும் கலாசார அடையாளம் (Cultural Identity ) ஆகிய அணைத்து விடயங்களையும் உள்ளடக்கி (Inclusive approach) )இப் பாலத்திற்கான முப்பரிமாண மாதிரி வடிவமைப்பு (Three D Model) மற்றும் இது தொடர்பிலான வீடியோ என்பன என்னால் வடிவமைக்கப்பட்டு தொழிநுட்ப உத்திதியோகத்தர் திரு ரோசிதன் அவர்களின் தொழிநுட்ப உதவியுடன் தயாரிக்கப்பட்டு எல்லோருடைய பார்வைக்காகவும் வெளியிடப்படுகின்றன.
இலங்கை வரலாற்றில் சூழலியல் மற்றும் சுற்றுலா நோக்கில் கலையுணர்;வுடன் வடிவமைக்கப்பட்ட முதலாவது பாலமாக அமையவேண்டும் என எதிர்பார்பார்ப்பதுடன் நான்கு வருடமாக ஆத்மமார்த்தரீதியாக இதனை நடைமுறைப்படுத்துவதற்கு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றேன். எனவே மதிப்புக்குரிய அரசாங்க அதிபர், முல்லைத்தீவு மாவட்ட கௌரவ பாராளமன்ற உறுப்பினர்கள், கௌரவ ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க் மற்றும் வன்னி மாவட்ட பாராளமன்ற உறுப்பினாகள்;; மற்றும் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுக மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து கௌரவ அமைச்சர், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைமைப்பீடம், எல்லாவற்றிற்கும் மேலாக அதி மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கள் நிதிக்கிடைப்பனவை மட்டும் வைத்து இச் செயற்திட்டத்தை வரையறுக்காமல்; முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்காக சூழல்சார் சுற்றுலாவை மேம்படுத்துமுகமாக இம் முன்மொழிவை நடைமுறைப்படுத்த அனைவரது ஒத்துழைப்பையும் எதிபார்க்கின்றேன்.
நன்றி
பா.ராஜ்குமார்
நிறுவுனர்
பறவையியல் மற்றும் சூழலியல் ஆய்வாளர்
வட இலங்கை ஈரநில பாதுகாப்புக் கழகம்
யாழ்ப்பாணம்
(தகவல் - jaffna wetland conservation society)