Shritharan Media

Shritharan Media Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shritharan Media, Media/News Company, Jaffna.

25/06/2025
24/06/2025

தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யுங்கள் : ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம் சிறீதரன் எம்.பி கோரிக்கை..!!!

ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசால் திட்டமிட்ட வகையில் புரியப்பட்ட இனப்படுகொலைக்கும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் உள்ளகப் பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவது இனமேலாதிக்கம் மிகுந்திருக்கும் இலங்கைத் தீவில் சாத்தியமற்றது என்பதால், பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் வகையிலான சர்வதேச விசாரணைக்கு வழிசெய்யுமாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன், இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரிடம் கோரியுள்ளார்.

இன்று மாலை கொழும்பில் நடைபெற்ற, ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளருடனான சந்திப்பின் போதே அவர் இவ்விடயத்தைக் வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது, ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் 47 உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், திருமலை மாவட்ட ஆயர் வண.நோயல் இம்மனுவல், வணபிதா ஆம்ஸ்ரோங் அடிகளார், சிவில் சமூக பிரதிநிதிகள் உள்ளிட்டோரின்; கையொப்பங்களுடன் அனுப்பப்பட்ட 2021.01.15 ஆம் திகதிய கடிதத்தில் குறிப்பிட்ட விடயங்களை மேற்கோள் காட்டி தனது கோரிக்கையை முன்வைத்த சிறீதரன் எம்.பி, எழுத்துமூல கோரிக்கை ஒன்றையும் ஆணையாளரிடம் நேரிற் கையளித்துள்ளார்.

அந்தக் கோரிக்கைக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து, அடுத்தடுத்து ஆட்சிபீடம் ஏறிய அனைத்து அரசாங்கங்களும் சிங்கள-பௌத்த பெரும்பான்மைவாதத்தை நிறுவனமயமாக்கி, ஈழத்தமிழர்களின் அடையாளத்துவ வாழ்வை சிதைத்து, சுயாட்சி மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை அடியோடு இல்லாமற் செய்தன. இதற்காக நீண்டகாலம் ஈழத்தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட அமைதியான ஜனநாயக எதிர்ப்பு போராட்டங்கள் கொடூரமாக அடக்கப்பட்ட பின்னர், ஆயுத மோதல் ஏற்பட்டிருந்ததடன், அதன் உச்சமாக 2009 மே மாதத்தில் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை என்ற இனப் பேரவலம் நிகழ்ந்திருந்தது.

போருக்குப் பின்னரும் தமிழர் தாயகப் பகுதிகள் பெரிதும் இராணுவமயமாக்கப்பட்டு, நில அபகரிப்புகள், மக்கள்தொகை மறுசீரமைப்பு, பொருளாதார புறக்கணிப்பு மற்றும் கலாசார அழிப்பு என்பவை தமிழ்த் தேசியத்தை அழிப்பதற்கான ஆயுதங்களாக அரசாலும், அரச படைகளாலும் தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போதைய ஆட்சியின் கீழும், இந்த அடக்குமுறை நடவடிக்கைகளை நிறுத்தவோ அல்லது மாற்றியமைக்கவோ புதிய அரசாங்கம் எந்த அர்த்தமுள்ள நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

மனித உரிமைகள் பேரவையின் 30/1 (2015) மற்றும் 46/1 (2021) தீர்மானங்கள் உள்ளிட்ட தொடர்ச்சியான தீர்மானங்களை ஏற்றுக்கொண்டாலும், அவை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளையும், செய்யப்பட்ட குற்றங்களின் வீரியத்தையும் ஈடுசெய்யத்தக்கவையல்ல என்பதையும் தங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறேன். அதேவேளை இலங்கை அரசு OHCHR ன் OSLAP திட்டத்தை தடையின்றி அணுகுவதைத் தொடர்ந்து மறுத்து வருகிறது. இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்த ஆதாரங்களை சேகரிப்பதற்கான சர்வதேச முயற்சிகளையும் தடுக்கிறது.

இத்தகைய உள்ளக அரசியல் நிலைமாறுதல்களை கடந்து, ஐ.நா மனித உரிமைகள் பேரவையானது தீர்மானங்களுக்கு அப்பால் நகர்ந்து, தமிழினப் படுகொலை விவகாரத்தை ஐ.நா பொதுச் சபைக்கும், ஐ.நா பாதுகாப்பு பேரவைக்கும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கும் கொண்டு செல்லும் தெளிவான குறிக்கோளுடன் கூடிய சர்வதேச நீதிப் பொறிமுறை ஒன்றை செயற்படுத்த வேண்டுமென தங்களை தயவோடு கேட்டுக்கொள்கிறேன்.

நீதிக்கான பாதைகளை திறப்பதில் ஏற்படும் தாமதம், இலங்கை அரசுக்கும் தமிழினப் படுகொலையாளிகளுக்கும் தண்டனையிலிருந்து தப்பிப்பதற்கான தைரியத்தை அதிகரிக்கும் சமநேரத்தில்; ஈழத் தமிழர்கள் தங்கள் தாயகத்தில் ஒரு தேசமாக அழிக்கப்படுவதையும் துரிதப்படுத்தும் என்ற அடிப்படையில் நீதி, உண்மை மற்றும் பொறுப்புக்கூறல் என்பவை தாமதிக்கப்படாதிருப்பதை தங்கள் கொள்கை ரீதியான தலைமைத்துவம் உறுதிசெய்ய வேண்டும் - என்றுள்ளது.

̈rk

22/06/2025
18/06/2025
06/06/2025
06/06/2025

மாவை சேனாதிராஜாவை படுகொலை செய்ய முயன்றவரே டக்ளஸ் தேவானந்தா: பாராளுமன்றில் சிறீதரன் எம்.பி தெரிவிப்பு!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் இயங்குதளத்தையும் மக்கள் அபிமானத்தையும் சிதையாமற் காத்த மாவை.சோ.சேனாதிராஜா அவர்களை படுகொலை செய்ய முயன்ற ஒட்டுக்குழுத் தலைவரே டக்ளஸ் தேவானந்தா என நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில், தமிழரசின் மேனாள் தலைவர் மாவை.சேனாதிராஜா அவர்களின் மறைவையொட்டி கொண்டுவரப்பட்ட அனுதாபப் பிரேரணை மீது உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஊர்காவற்றுறை மக்களைச் சந்திப்பதற்காகச் சென்ற மாவை.சேனாதிராஜா, நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் கனகலிங்கம் சிவாஜிலிங்கம், மேனாள் கிராம அலுவலர் சிவராசா உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது, தமிழினப் படுகொலைகளைப் புரிந்த இலங்கை அரசின் பங்காளியான டக்ளஸ் தேவானந்தாவும், அவரது ஆயுதக்குழுவும் 2001.11.28 ஆம் திகதி நாரந்தனை – தம்பாட்டிப்பகுதியில் வைத்து தாக்குதல் மேற்கொண்டதுடன், ஏரம்பு பேரம்பலம், யோகசிங்கம் கமல்ஸ்ரோங் ஆகிய இருவர் அந்த இடத்தில் படுகொலை செய்யப்பட்டதுடன் 28 பேர் படுகாயமடைந்ததையும், மாவை.சேனாதிராஜா அவர்கள் கொட்டன் பொல்லுககளாலும், துப்பாக்கிகளாலும், வாள்களாலும் சுட்டும், வெட்டியும், அடித்தும் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டு நினைவிழக்குமளவு காயமுற்றிருந்த கறைபடிந்த சம்பவத்தையும் மீள நினைவூட்டி, அவரது நினைவுகளைப் பதிவுசெய்கிறேன்.

யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் வடக்கு மாவிட்டபுரத்தில் பிறந்து, யாழ்.வீமன்காமம் வித்தியாலயத்திலும், யாழ்.நடேஸ்வராக் கல்லூரியிலும் தனது பாடசாலைக் கல்வியை நிறைவுசெய்து, இலங்கைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி மாணவனாக இளங்கலைமாணி பட்டப்படிப்பையும் மேற்கொண்ட திரு.மாவை.சோ.சேனாதிராஜா அவர்கள், ஈழத்தமிழினத்தின் மீதான அடக்குமுறைகளின் எதிர்க்குரல்களுள் ஒருவராக பதின்மங்களிலேயே தன்னையும் இணைத்துக் கொண்டவர்.

ஈழத்தமிழர்களின் தன்னாட்சிக் கோரிக்கை என்ற அரசியல் கருத்தியலின் அடிப்படையில் உருவாக்கம் பெற்ற இலங்கைத் தமிழ்த் தேசிய இயக்கத்தில் தனது 19வது வயதிலேயே இணைந்து கொண்ட மாவை அண்ணரின் அரசியற்பிரவேசத்துக்கான காலவெளி அப்போதுதான் மெல்லக் கருக்கொள்ளத் தொடங்கியது.

இலங்கைத்தீவின் இன முரண்பாடுகளை உச்சம் பெறச்செய்த தனிச்சிங்களச் சட்டம் 1956 இல் அறிமுகம் செய்யப்பட்டு கிடப்பிலிருந்த நிலையில், 1961 ஆம் ஆண்டு அதனை வடக்கு – கிழக்கிலும் நடைமுறைப்படுத்த முனைந்தமைக்கு எதிராக, 1961 ஜனவரி 21 இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் 7வது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கமைய, 1961 பெப்ரவரி 20 இல் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்கேற்றதன் மூலம் மாவை. சேனாதிராஜா அவர்களின் போராட்ட வாழ்வு ஆரம்பித்தது எனலாம்.

பின்னர், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி உறுப்பினராக, ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்தின் செயலாளராக, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தமிழ் இளைஞர் பேரவையின் செயலாளராக காலப்பெறுமதி மிக்க அரசியற் பணியாற்றிய இவர், 1969 முதல் 1983 வரையான காலப்பகுதியில் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு, மகசின், வெலிக்கடை உள்ளிட்ட எட்டு சிறைச்சாலைகளில் ஏழு ஆண்டுகள் தடுத்துவைக்கப்பட்டார்.

1989ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர், தமிழரசின் மூத்த தலைவரும் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் மறைவின் பின்னர், தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகி, ஈழத்தமிழர்களின் உரிமைக்குரலாக நாடாளுமன்றத்தின் உள்ளும், வெளியும் ஒலிக்கத் தொடங்கினார்.

ஈழவிடுதலைப் போராட்ட எழுச்சியின் போதும், அதன் வீழ்ச்சியின் பின்னான தமிழ்த்தேசிய அரசியல் தளத்திலும் மாவை.சேனாதிராஜா அவர்களது பணிகளின் கனதி மிகப்பெரியது. ஒடுக்குமுறைக்கும், இன அழிப்புக்கும் உள்ளாக்கப்பட்ட ஒரு இனத்தின் அரசியற்குரலாக இருந்து, பன்னாட்டு அரசியல் ஒழுங்கிலும், ஜெனீவா அரங்கிலும் தன்னாட்சி உரிமை கோரும் ஈழத்தமிழரின் அரசியற்பயணத்திற்கு அங்கீகாரம் தேடும் வரலாற்றுப் பணியையே அவர் தன் வாழ்வாக்கிக் கொண்டவர்.

மென்வலுப் போக்கில் நம்பிக்கை கொண்ட செயற்பாட்டு அரசியல்வாதியாக இருந்து, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி என்ற தமிழ்த்தேசிய அரசியல் பேரியக்கத்தின் ஒரு தசாப்பத கால தலைவராக, கட்சியின் இயங்குதளத்தையும் மக்கள் அபிமானத்தையும் சிதையாமற் காத்த அவர்தான், இன்று தமிழ்த்தேசிய அரசியற் தளத்திலிருக்கும் என்போன்ற பலருக்கும் அரசியல் வழிகாட்டி.

உள்நாட்டு மற்றும் பன்னாட்டு அரசியற் தளம்பல் மிகுந்திருந்த 2014 செப்டம்பரில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டது முதல், தன் அந்திமத்தின் போதான இறுதிக் கணம் வரை எமது கட்சியின் தலைவராக, தெளிவார்ந்த அரசியற் செயற்பாடுகளே அவரது தெரிவுகளாயிருந்தன.
வட்டுக்கோட்டைத் தீர்மானம் தொடக்கம் இன்றைய நாள் வரையும் தமிழ் மக்கள் அவாவி நிற்கும் தீர்க்கம்மிகு அரசியற் தீர்வை, எமக்குக் கிடைத்த ஜனநாயக சந்தர்ப்பங்களில் எல்லாம் எமது இனம் ஒருமித்து வெளிப்படுத்தியே வந்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் மேற்கொள்ளப்பட்ட கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் பிற்பாடு, பன்னாட்டு சமூகத்துடன் இணைந்து தமிழ்மக்களுக்கு அவர்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை நிறைவுசெய்யக் கூடிய அர்த்தமுள்ள அரசியல் தீர்வு நோக்கிய பயணத்தில் உலகத்தின் எதிர்பார்ப்பை அங்கீகரித்து, இலங்கை அரசாங்கத்தின் போருக்குப் பிந்திய நிலைப்பாட்டாலும், சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனையினாலும் பின்னடைவுகளை எதிர்கொள்ள நேரிட்ட போதும் அமரர்.மாவை சேனாதிராஜா அவர்கள் எல்லாவகை சமாதான முன் முயற்சிகளுக்காகவும்; மிகக்கடுமையாக உழைத்திருந்தார்.

போருக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி கட்டமைக்கப்பட்டிருந்த தமிழரசு என்ற அரசியல் ஆலமரம், கிளிநொச்சி மண்ணிலும் விழுதெறிந்து வளர்ந்ததில் மாவை அண்ணனின் பங்கே விரவியிருக்கிறது. தமிழ்த்தேசியத்தின் இருப்பையும் இனத்துவ உரித்தையும் அவாவி நிற்கும் ஓர் அரசியற் கட்சியின் பயணம் தடம் மாறாததாக இருக்கவேண்டுமெனில், அது முழுக்க முழுக்க மக்கள் மயப்பட்டதாக, மக்களின் மன உணர்வுகளுக்கு நெருக்கமானதாக இருக்க வேண்டுமென்பதை தனது அரசியல் அனுபவத்தால் உற்றுணர்ந்த மாவை அண்ணன், ஈழத்தமிழ் சமூகத்தின் இருபெரும் சக்திகளாகிய இளைஞர்களையும், மகளிரையும் சமதளத்தில் இணைத்துப் பயணிக்கும் எல்லாவகைப் பிரயத்தனங்களிலும் ஈடுபட்டிருந்தார். அத்தகைய முதிர்ச்சி மிக்க அவரது செற்பாடுகளின் பயன்விளைவினால் தான், தமிழ்த் தேசியம்; அதன் கொள்கை இறுக்கமும், கொதிநிலையும் தாழாது அடுத்த சந்ததியிடத்தே இன்று கையளிக்கப்பட்டிருக்கிறது.

ஈழத்தமிழர்களின் தன்னாட்சி உரிமைக்காகவும், நீடித்த செழுமைமிகு இருப்புக்காகவும், தொலைநோக்கான வழிகாட்டலை வழங்குகின்ற பொறுப்பை ஏற்று, இலங்கைத் தமிழரசுக் கட்சியையும், மக்களையும் கொள்கைப் பற்றுறுதியோடு தீர்க்கமான வழிமுறைகளில் முன்னேற்றிச் சென்ற ஒரு பெருந்தலைவராகவே அவரது மறைவின் பின்னும் மாவை அண்ணருக்கான அடையாளம் மக்கள் மனங்களில் நிலைபெற்றிருக்கிறது.

நாங்கள் ஒரு சுதந்திர அரசியல் இயக்கமாக – மக்கள் திரட்சி நிறைந்த தேசமாக எம்மை உருவாக்கிக் கொள்ளாதவரை, பலவீனமான அரசியல் கோரிக்கையாளர்களாகவே இருக்க வேண்டி ஏற்படும் என்பதை உணர்ந்தவராக, தமிழரசுக்கட்சியை மக்கள் பேரியக்கமாக வழிநடாத்திச் செல்ல வேண்டுமென்ற நேர்த்திமிகு சிந்தனையில் பின்வாங்காத பெருந்தலைவராக இருந்த, எனது அரசியல் வழிகாட்டியும், எமது கட்சியின் மறைந்த பெருந்தலைவருமாகிய அண்ணன் மாவை.சேனாதிராஜா அவர்களின் தடங்களை இறுகப்பற்றியபடி, சரிந்துபோயிருக்கக் கூடிய தமிழரசின் செயலூக்கத்தினை மீள நிலைநிறுத்துவதற்காக தமிழ்த்தேசிய ஆர்வலர்களோடும், தொண்டர்களோடும் இணைந்து ஒழுகி எமது அரசியல் இயக்கத்தை நிலைநிறுத்துவதன் வழி, ஈழத்தமிழினத்தின் விடுதலை நோக்கிய பயணத்தை இதயசுத்தியோடு முன்கொண்டுசெல்ல உழைப்பதுவே அன்னாருக்கான உயரிய அஞ்சலி என்பதை உணர்ந்த ஒருவனாக, அத்தகையதோர் மன உறுதியோடு அவரது மறைவுக்கான எனது அஞ்சலிகளையும், அனுதாபங்களையும் பகிர்ந்து கொள்கிறேன். – என்றார்.

Address

Jaffna

Alerts

Be the first to know and let us send you an email when Shritharan Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share