
17/09/2025
கல்முனை பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்க காரணம் சுமந்திரனின் அழுத்தமா?
கல்முனை பிரதேச செயலகம் மற்றும் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் ஆகியவற்றுக்கான பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தினை நாளை 18 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை கேட்போர் கூடத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இறுதி தருவாயில் இந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நிந்தவூரில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் அஸ்ரப் நிவைவேந்தல் நிகழ்வை தொடர்ந்து கல்முனை சிவில் அமைப்புக்கள் இலங்கை தமிழரசு கட்சி பொதுச் செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனை சந்தித்து முறையற்றவகையில் கூட்டப்பட உள்ள இந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை நிறுத்த வேண்டும். அல்லாது போனால் பலத்த எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று வலியுறுத்தியிருந்ததாகவும் இதனையடுத்து ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் பிரதமர், அமைச்சர்களை தொடர்புகொண்டு குறித்த விடயம் தொடர்பில் கண்டனங்களை தெரிவித்து களநிலவரத்தை விளக்கி இந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை உடனே நிறுத்த கோரியிருந்தாகவும் அறிய முடிகிறது.
மேலும், இந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை நிறுத்தாமல் நடத்தினால் இடம்பெறும் ஆர்ப்பாட்டத்தையும், அதனூடாக வரும் இழப்புக்களையும் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் அரச உயர்மட்டங்களுக்கு வழங்கிய அழுத்தம் காரணமாக கொழும்பிலிருந்து வந்த உத்தரவை அடுத்தே இந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கிறது.
இந்த ஒருங்கிணைப்பு குழு கூட்ட அழைப்பு வந்த நாளிலிருந்து இந்த விடயமாக இலங்கை தமிழசு கட்சி பிரமுகர்கள் பலரும் தனது அதிருப்தியை தொடர்ந்தும் பதிவு செய்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.