25/02/2026
மலையகத்தின் பல பகுதிகளில் 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படும் நாட்களில் மதுபான விற்பனை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாக மதுபானசாலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏனைய நாட்களை விடவும், அரசாங்கத்தினால் அஸ்வெசும கொடுப்பனவு வங்கிகளில் வைப்புச் செய்யப்படும் நாட்களில் இந்த நிலைமை காணப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த நிலைமையானது நகரப்பகுதிகளில் மட்டுமன்றி, தொலைதூர கிராமப்புறங்களிலும் ஒரே மாதிரியாகக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அஸ்வெசும கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ளும் பல பயனாளிகள், தமது குடும்பத் தேவைகள் அல்லது அத்தியாவசியப் பொறுப்புகள் குறித்துக் கவலைப்படாமல், அத்தொகையை மதுபானத்திற்காகச் செலவிடுவதாக மதுபானசாலை உரிமையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
"அஸ்வெசும பயனாளிகள் எமது வாடிக்கையாளர்கள். அவர்கள் அந்தப் பணத்தை எங்கிருந்து கொண்டு வருகிறார்கள் என்பது எமது வியாபாரத்தைப் பொறுத்தவரை முக்கியமல்ல என்பதால், இது குறித்து எம்மால் முறைப்பாடு செய்ய முடியாது" என உரிமையாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் வழங்கும் நிதி, முறையற்ற விதத்தில் செலவிடப்படுவது குறித்துச் சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
25.02.2026 புதன்