01/02/2024
Media Unit களப் பயணம்...
இன்றைய தினம் (1/2/2024) இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் பிராந்திய ஒலிபரப்பு நிலையமான கந்துரட எஃப் எம் (Kandurata FM) வானொலியை பார்வையிடுவதற்காக நமது கல்லூரியின் ஊடகப் பிரிவில் அறிவிப்பாளர்களுக்காக விண்ணப்பித்து நேர்முக தேர்வில் பங்கு பற்றிய மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனமானது நீண்ட வரலாற்றை கொண்ட முதன்மையான வானொலி சேவையாகும். 1925 இல் Colombo Radio என்ற பெயரில் இதன் பயணம் ஆரம்பமானது. இதுவே ஆசியாவில் ஆரம்பிக்கப்பட்ட முதல் வானொலி சேவையாகும். பின்னர் Radio Ceylon என்று மாற்றமடைந்து அதன் பின்னர் 1967 முதல் Sri Lanka Broadcasting Corporation (இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்) என்ற பெயரில் இயங்கி வருகிறது. அடுத்த வருடம் 100 வருட பூர்த்தியை கொண்டாட இருப்பது விசேட அம்சமாகும்.
இன்றைய களப் பயணத்தில் மாணவர்களுக்கு, ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் வரலாறு, அதன் கட்டமைப்பு, அதன் சிறப்பம்சங்கள், வானொலி ஒலிபரப்பு இடம்பெறுகின்ற முறை, தொழில்நுட்ப ரீதியான விடயங்கள், கலையகத்தின் அமைப்பு போன்ற பல விடயங்கள் மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டன. இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் நீண்ட காலமாக செய்தியாசிரியராக கடமையாற்றுபவரும் ஊடகத்துறை சார்ந்த பயிற்சி நெறிகளில் விரிவுரையாளராக கடமையாற்றுபவருமான திரு. சதீஷ் கிருஷ்ணபிள்ளை மற்றும் அறிவிப்பாளர் முஹம்மத் சர்ஜதீன் (ஆசிரியர்) ஆகியோரால் இந்த விளக்கங்கள், வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன. மாணவர்கள் ஒரு சிலருக்கு நேரடியாக நிகழ்ச்சியில் பங்கு பற்றுவதற்கான சந்தர்ப்பமும் இதன் போது வழங்கப்பட்டது.
இன்றைய களப் பயணத்தில் கலந்துகொண்ட கல்லூரியின் ஊடகப் பிரிவை சேர்ந்த ஆசிரியர்களான Mr. K.M.M. Sarjadeen (பொறுப்பாசிரியர்), Mr. U.L.M. Rizan (பிரதி பொறுப்பாசிரியர்), Mrs. F. Fazaha (உதவி செயலாளர்), Mrs. A. Fathima Beebi (உறுப்பினர்) ஆகியோருக்கும் ஊடக பிரிவு சார்பில் நன்றிகள் உரித்தாகட்டும்.
கந்துரட FM வானொலியானது இலங்கையில் மூன்று இனத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் (சிங்கள சேவை, தமிழ் சேவை, முஸ்லிம் சேவை) ஒலிபரப்பு சேவையை வழங்கும் ஒரேயொரு பிராந்திய வானொலி நிலையமாகும். இதை FM 90.1 / 107.3 அலை வரிசைகள் மற்றும் SLBC என்ற Mobile App மூலம் உலகம் பூராகவும் கேட்கலாம். இதன் முஸ்லிம் சேவையை தினமும் பி.ப. 05:30 முதல் 06:30 வரை கேட்கலாம்.
சிறந்ததொரு ஊடக கலாசாரத்தைக் கொண்ட எதிர்கால சமூகத்தை உருவாக்குவோம்!