03/09/2026
பாலமுனை 152 கிராம உத்தியோகத்தர் பிரிவை 157B செல்வாநகர் கிழக்குடன் இணைக்கும் நடவடிக்கையை மீள்பரிசீலிக்க கோரிக்கை
என்.எம்.எம். அஜ்மல்கான்
மண்முனைப்பற்று பிரதேச சபையின் இன்றைய அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு (DCC) கூட்டத்தில், பாலமுனை 152 கிராம உத்தியோகத்தர் பிரிவை 157B செல்வாநகர் கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுடன் இணைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர் சியாத் அவர்களினால் முக்கிய விடயம் ஒன்று முன்வைக்கப்பட்டது.
மண்முனைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பாலமுனை 152 கிராம உத்தியோகத்தர் பிரிவில் நீண்டகாலமாக வசித்து வரும் மக்கள், தங்களது கிராம உத்தியோகத்தர் பிரிவை 157B செல்வாநகர் கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதனால் தங்களது நிர்வாக மற்றும் அடையாள உரிமைகள் பாதிக்கப்படக்கூடும் என கவலை தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.
பாலமுனை 152 கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல், இப்பிரிவின் பூர்வீகத்தைச் சேர்ந்த 140 குடும்பங்களைச் சேர்ந்த 247 வாக்காளர்கள் அங்கு வசித்து வருகின்றனர் எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பாலமுனை 152 கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கும் 140 குடும்பங்களையும் 157B செல்வாநகர் கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுடன் இணைக்கும் நடவடிக்கையை மீள்பரிசீலனை செய்து, அப்பகுதி மக்களின் நியாயமான கோரிக்கைக்கு உரிய தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என பிரதேச சபை உறுப்பினர் சியாத் கோரிக்கை விடுத்தார்.
மேலும், குறித்த நடவடிக்கையை குறைந்தபட்சம் தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்து, மக்களின் கருத்துக்களைப் பெற்று உரிய தீர்வொன்றை எட்ட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், இவ்விடயம் காரணமாக எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய நிர்வாக மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பிலும் பிரதேச சபை உறுப்பினர் சியாத் கூட்டத்தில் எடுத்துரைத்தார்.
இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், குறித்த மக்களுக்கு மிக அவசரமாக உரிய தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், சுமார் 200 மீற்றர் தூரத்தில் உள்ள கிராம உத்தியோகத்தரை சந்தித்து தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய மக்கள், சுமார் 2 கிலோமீற்றர் தூரம் சென்று தமது தேவைகளை நிறைவேற்ற வேண்டிய நிலை ஏற்படக்கூடாது எனவும், இதன் மூலம் பொதுமக்களை தேவையற்ற சிரமத்திற்கு உள்ளாக்க வேண்டாம் எனவும் அவர் தனது கருத்தை முன்வைத்தார்.
இதன்போது கூட்டத்தில் கலந்துகொண்ட ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும், குறித்த மக்களின் பிரச்சினையை கருத்திற்கொண்டு அவர்களுக்கு நல்லதொரு தீர்வைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதற்கு பதிலளித்த பிரதேச செயலாளர், இது மண்முனைப்பற்று பிரதேச சபையினால் எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல எனவும், தேர்தல் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை தொடர்பான விடயம் முன்வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த மண்முனைப்பற்று அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, இவ்விடயம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி, அதன் பின்னர் அவர்களது தீர்மானத்திற்கு அமைவாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார்.
பாலமுனை 152 கிராம உத்தியோகத்தர் பிரிவில் நீண்டகாலமாக வசித்து வரும் மக்களின் நிர்வாகத் தேவைகள் மற்றும் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, உரிய தீர்வொன்று கிடைக்கும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.