21/09/2025
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் அவசர மாநாடு : சவூதி உட்பட்ட நாடுகள் இஸ்ரேல் மீது கண்டனம்.......
(எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) -ஓட்டமாவடி.)
கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவில் நடைபெற்ற இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) அவசர மாநாட்டில் கடந்த செப்டெம்பர் 9ம் திகதி ஹமாஸ்–கத்தார் தலைவர்கள் பேச்சுவார்த்தை ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் அவர்களது அரசியல் செயற்பாட்டுக் காரியாலயத்தின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலை வன்மையாகக் கண்டித்ததுடன், இது சர்வதேச சட்டத்தையும் மனிதாபிமான ஒப்பந்தங்களையும் மீறும் செயலாகும் எனத்தெரிவித்தது.
இஸ்ரேல் கத்தாரிலுள்ள ஹமாஸ் அரசியல் தலைமையகத்தின் மீது மேற்கொண்ட தாக்குதலுக்கு அரபு தேசத்தின் பலமான நாடான சவூதி அரேபியாவும் உடனடியாக தனது கண்டனத்தைத் தெரிவித்தது.
“கத்தாருக்கெதிரான இஸ்ரேலின் தாக்குதல் மற்றும் இறையாண்மையை வெளிப்படையாக மீறிய செயலை சவூதி அரேபியா கடுமையாகக்கண்டிக்கிறது. சவூதி அரேபியா தன்னுடைய அனைத்து திறன்களையும் கத்தாருக்கு வழங்கும்” என அறிவிப்பும் செய்தது.
அதன் பின்னர் கத்தாரில் செப்டம்பர் 15ல் அவசரமாக கூடிய இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) மாநாட்டின் அவசரத்தையும், அவசியத்தையும் உணர்ந்த சவூதி அரேபியா இம்மாநாட்டில் முதல் ஆளாகக்கலந்து கொண்டு, மாநாட்டிற்கு தலைமை வகித்தது.
இம்மாநாட்டில் பேசிய கத்தார் நாட்டின் அதிபர் ஷேக் தமீம் அல் தானி
"தாக்குதல் ஏற்க முடியாது, சமாதானப் பேச்சுவார்த்தையை குழப்பும் செயல்”.
பேச்சுவார்த்தை நடத்தும் ஒரு தரப்பினரை குறிவைக்க யார் விடாப்பிடியாகவும் முறையாகவும் பாடுபடுகிறாரோ, அவர் தோல்வியுற்ற பேச்சுவார்த்தைக்காகப் பாடுபடுகிறார்.
இஸ்ரேல் பலஸ்தீன மக்களை வெளியேற்றுவதற்கு ஒரு முன்நிபந்தனையாக காசாவை வாழத்தகுதியற்றதாக மாற்ற விரும்புகிறது. இஸ்ரேல் ஒவ்வொரு முறையும் அரேபியர்களை புதிய அடக்குமுறைக்குள் வைக்க நினைக்கிறது.
மேலும், அவர்கள் ஆபத்தானவர்கள். இஸ்ரேல் சிரியாவைப்பிரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது, அதன் திட்டங்கள் நிறைவேறாது. அரபுப்பகுதி இஸ்ரேலிய செல்வாக்கின் பகுதியாக மாறும் என்ற நெதன்யாகுவின் கனவுகள், இது ஒரு ஆபத்தான மாயை.
அமைதி முயற்சியை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டிருந்தால், அது அதன் சிறைப்பிடிக்கப்பட்டவர்களுடன் எண்ணற்ற பேரழிவுகளைக் காப்பாற்றியிருக்கும். இஸ்ரேலிலுள்ள தீவிரவாத அரசாங்கம் இனவெறி பயங்கரவாதக் கொள்கைகளைப் பின்பற்றுகிறது. நமது இறையாண்மையைப் பாதுகாக்கவும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்கொள்ளவும் தேவையான அனைத்தையும் செய்ய கத்தார் தீர்மானித்துள்ளது எனக்குறிப்பிட்டார்.
*பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான்,
"கத்தாரின் பாதுகாப்பு என்பது அனைத்து வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) நாடுகளின் பாதுகாப்பே எனவும் இஸ்ரேலின் தாக்குதல் சட்டவிரோத, ஆபத்தான மீறல். வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் ஒற்றுமை அடிப்படையில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கும்" என உறுதியளித்தார்.
*துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன், “இஸ்ரேல் அரசின் செயல்கள் மனிதநேயத்துக்கு எதிரானவை. அவர்கள் சட்டங்களை மதிக்காமல், கொடூரமான முறையில் செயல்படுகின்றனர்.”
“பாலஸ்தீன மக்களை இடமாற்றம் செய்யும் முயற்சியையும் இன அழிப்பு செயல்பாடுகளையும் ஒருபோதும் ஏற்க முடியாது.”
இஸ்ரேல் "இரத்தவெறி மனநிலை”யில் (bloodthirsty mentality) உள்ளது. பொருளாதார அழுத்தங்களை கொடுக்க வேண்டுமென்று வலியுறுத்தினார்.
*எகிப்து ஜனாதிபதி அப்துல் ஃபத்தா எல்-சிசி,
“இஸ்ரேல் நடத்திய தாக்குதல், சர்வதேச சட்டங்களையும் மனித உரிமைகளையும் மீறுகிறது. இது பகைமையை அதிகரிக்கும்.”
“சுயாதீனமும் பாதுகாப்பும் காக்கப்பட வேண்டும். அதற்காக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.” என வலியுறுத்தினார்.
*ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன்:
“பலஸ்தீன மக்களின் சுயநிலைக்கும் சுதந்திரத்திற்கும் ஈரான் எப்போதும் உறுதியான ஆதரவாக இருக்கும்.”
ஒருங்கிணைந்த அரபு-இஸ்லாமிய ஒன்றுமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், இஸ்ரேலின் செயற்பாடுகள் எந்த வகையிலும் அனுமதிக்கப்படக்கூடாது. அத்தகைய செயற்பாடுகளை தடுப்பதற்கு நாடுகள் செயற்பட வேண்டுமென்று கூறினார்.
*ஜோர்தான் மன்னர் அப்துல்லாஹ்,
“இஸ்ரேலின் தாக்குதல் எல்லைக்கடந்த ஆக்கிரமிப்பாகும்.”
“இதற்கு எமது பதில் தெளிவானதும் வலுவானதும் இருக்க வேண்டும். அது பயனளிக்கும் வகையில் இருக்க வேண்டும்.”
“இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இரு-நாட்டு தீர்வை கடுமையாக பாதிக்கின்றன” என குறிப்பிட்டார்.
*குவைத் பட்டத்து இளவரசர் – ஷேக் சபாஹ் காலித் அல்-ஹமத் அல்-சபாஹ்,
"கத்தாரின் பாதுகாப்பு, அரபு மற்றும் இஸ்லாமிய உலகின் நிலைத்தன்மைக்கு அடித்தளம்.
இஸ்ரேலின் தாக்குதல் நியாயமற்றதும் ஏற்றுக்கொள்ள முடியாததும்".
"கத்தாரின் சுயாதீனம் மற்றும் குடிமக்கள் பாதுகாப்பிற்கு குவைட் முழு ஆதரவு" எனக் குறிப்பிட்டார்.
*பலஸ்தீன் – ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ்,
“சர்வதேச சமூகம் தனது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். இஸ்ரேலின் குற்றங்களைத் தடுக்க வேண்டும்.”
“இஸ்ரேலின் தீவிரவாத அரசு எங்கள் பிராந்தியத்தில் சமாதானத்துக்கும் பாதுகாப்புக்கும் ஒருபோதும் கூட்டாளியாக இருக்க முடியாது.” என குறிப்பிட்டார்.
*பாகிஸ்தான் – பிரதமர் ஷஹ்பாஸ் ஷரீஃப்,
“பாகிஸ்தான், இஸ்ரேலின் தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறது. நாங்கள் கத்தாருடன் முழுமையான ஒற்றுமையில் நிற்கிறோம்.”
“பாலஸ்தீனப் பிரச்சினைக்கு நிலையான தீர்வாக இரு-நாட்டு தீர்வே முன்னேற்றப்பட வேண்டும்.” என வலியுறுத்தினார்.
*மலேசியா பிரதமர் – அன்வர் இப்ராஹிம்,
“ஒரு சுயாதீன நாட்டின் தலைநகரைத் தாக்குவது மிகக் கடுமையான குற்றம். இது எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.”
“இந்த தாக்குதல், உலக மக்கள் முன்னேற்றம் மற்றும் ஒற்றுமைக்கு எதிரானது.” எனக் கண்டித்தார்.
இவ்வாறு கலந்து கொண்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) நாடுகளின் தலைவர்கள் தங்களின் கருத்துக்களையும், கண்டனங்களையும் பதிவு செய்து கொண்டனர்.
குறித்த மாநாட்டில் பின்வரும் முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள்:
சர்வதேச சட்ட நடவடிக்கைகள்:
இஸ்ரேலின் தாக்குதல்கள் ஜெனீவா ஒப்பந்தங்கள் மற்றும் சர்வதேச சட்டங்களை மீறும் செயல்.
ஐநா மற்றும் சர்வதேச நீதி அமைப்புகளின் மூலம் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
பலஸ்தீன நாடு அமைப்பு:
1967 எல்லைகளை அடிப்படையாகக்கொண்டு, கிழக்கு ஜெரூசலேமை தலைநகராகக்கொண்ட சுயாதீன பலஸ்தீன நாடு உருவாக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
மனிதாபிமான அவசர உதவி:
போர்ச்சூழலில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உணவு, மருந்து, மருத்துவ உதவி உடனடியாக அனுப்பப்பட வேண்டும்.
கைதிகள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.
அரபு–இஸ்லாமிய ஒற்றுமை:
அரபு நாடுகளும், OIC உறுப்பு நாடுகளும் ஒன்றிணைந்து இஸ்ரேலின் தாக்குதல்களுக்கெதிராக செயற்பட வேண்டும்.
ஒற்றுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் (joint defence measures) மேற்கொள்ளப்பட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நடைமுறைப்படுத்துவதிலுள்ள சவால்கள்:
மாநாட்டின் தீர்மானங்களை நடைமுறைக்கு கொண்டு வருவதில் பல சவால்கள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டது.
சில முஸ்லிம் நாடுகளுக்கிடையேயான அரசியல் முரண்பாடுகள்.
அமெரிக்கா, ஐரோப்பா போன்ற பெரிய சக்திகளின் அழுத்தங்கள்.
இஸ்ரேலுடன் சில நாடுகள் வைத்திருக்கும் இருதரப்பு நட்பு மற்றும் வர்த்தக உறவுகள்.
சர்வதேச நீதிமன்ற நடவடிக்கைகளின் நடைமுறைச்சிக்கல்கள்.
அதேநேரம் கத்தார் தாக்குதல் தொடர்பில் இஸ்ரேலின் நிலைப்பாடு:
இஸ்ரேல், 2025 செப்டம்பர் 9 அன்று, தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை இலக்காகக்கொண்டு மேற்கொண்ட விமானத்தாக்குதலைத்தொடர்ந்து, மேலும் தாக்குதல்களை மேற்கொள்ளத்தயாராகவிருப்பதாக அறிவித்துள்ளது.
ஹமாஸ் தலைவர்கள் எங்கிருந்தாலும் தாக்குவோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நிலைப்பாடு:
அமெரிக்கா, இஸ்ரேலின் இத்தாக்குதலைத் தொடர்ந்து, அதனை "தவறான நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை" எனக்கண்டித்து, அடுத்தடுத்து இப்படியான தாக்குதல்கள் நடைபெறாது என உறுதியளித்துள்ளது. அமெரிக்கா, கத்தாருடன் தனது பாதுகாப்பு ஒப்பந்தத்தை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
ஹமாஸ் மற்றும் பலஸ்தீனின் நிலைப்பாடு:
ஹமாஸ், இஸ்ரேலின் இத்தாக்குதலை "கொடூரமான மற்றும் துரோகமான தாக்குதல்" எனக்கண்டித்து, இதற்கெதிராக சட்டநடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் எனத்தெரிவித்துள்ளது. பலஸ்தீனத்தலைவரும் இந்த தாக்குதலைக்கண்டித்து, சர்வதேச சமுதாயத்திடம் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
எனவே, கத்தார் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு, பலஸ்தீன மக்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை வலியுறுத்தி, இஸ்ரேலின் தாக்குதலுக்கெதிராக ஒற்றுமையான முஸ்லிம் குரலை வெளிப்படுத்தியது.
ஆனால், அத்தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதிலுள்ள சவால்கள் காரணமாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் எவ்வாறு அமுல்படுத்தப்படப் போகின்றது என்பதை உலக உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றது. இந்த விவகாரங்களில் சவூதி அரேபியா தனது பங்களிப்புகளை காத்திரமாக வழங்கி வருகின்றது.