20/06/2025
இக்கால இளைஞர்கள் இதுவரை அறிந்திராத காத்தான்குடியில் நடந்த சில சம்பவங்கள்!
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
நான் 05.02.1944 புதன்கிழமை அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் றஹிமஹுல்லாஹ் அவர்களுக்கும், சஹ்றா உம்மா அவர்களுக்கும் மகனாக காத்தான்குடி 06ம் குறிச்சி பிரதான வீதி இரும்புத் தைக்காப் பள்ளிவாயலின் எதிரில் உள்ள “ஜாமிஉள்ளாபிரீன்” வீதியிலுள்ள களி மண்ணால் ஆன, மேற் கூரை தென்னை ஓலையினாலான, கழிவறை, குளியலறை இல்லாத சிறிய வீடொன்றில் பிறந்தேன்.
மழை பெய்தால் அவ் வீட்டின் தரை நனைந்து விடும். நுளம்பு, பூரான், நட்டுவக்காலி, புலிமுகச் சிலந்தி, பல்லி, கரப்பத்தான், தவளை, தேரை, பாம்பு முதலானவற்றின் ஒதுங்குமிடமாக அவ் வீடு மாறிவிடும். அங்கு மின் விசிறியுமில்லை, குளிரூட்டியுமில்லை, மின்சாரமுமில்லை. பனை ஓலை விசிறி வாங்க அதுவுமில்லை.
அக்கால கட்டத்தில் என் தந்தை ஊர் வீதி முஹ்யித்தீன் தைக்காப் பள்ளிவாயலை அண்மித்துள்ள “அல்மவ்ஹிபதுஸ் ஸமதானிய்யா” குர்ஆன் பாடசாலையில் மாதம் 20 ரூபாய் சம்பளத்திற்கு திருக்குர்ஆன் ஓதிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
என் பெற்றோருக்கு நான் இரண்டாவது பிள்ளை. என் பெற்றோருக்கு முதல் குழந்தை பெண் குழந்தை. எனக்குப் பின் என் பெற்றோருக்கு இரண்டு ஆண் பிள்ளைகளும், ஆறு பெண் பிள்ளைகளும் பிறந்தனர். அவர்களில் இரு பெண் பிள்ளைகள் சிறு வயதிலேயே மரணித்து விட்டார்கள்.
தற்போது என்னோடு சகோதர, சகோதரிகள் 07 பேர் உயிரோடுள்ளனர்.
என் தந்தையின் ஆரம்ப கால முதற் சம்பளம் 20 ரூபாய். 72 வயதில் (ஹிஜ்ரீ ஆண்டுக் கணக்கு) மரணிக்கும் போது பெற்ற சம்பளம் 125 ரூபாய்.
என் தந்தை பிறந்த ஆண்டு 1908. மரணித்த ஆண்டு 1978. தந்தை உயிர் வாழ்ந்த காலத்தில் நான்கு பிள்ளைகளுக்கு வளவு வாங்கி வீடு கட்டி அவர்களுக்கு திருமணமும் செய்து வைத்தார்கள். ஒருவருக்கு மாத்திரம் நான் வளவு வாங்கி வீடு கட்டி திருமணம் முடித்து வைத்தேன்.
அன்பிற்குரிய நேயர்களே!
நான் இக்கட்டுரையில் இரண்டு விடயங்கள் குறித்து விபரங்கள் எழுதியுள்ளேன். நான் இவ் விபரங்களை ஏன் எழுதினேன்? என்று வாசகர்கள் பல கோணங்களில் சிந்திக்கலாம். எவர் எவ்வாறு சிந்தித்தாலும் நான் ஏன் எழுதினேன் என்பதற்கு என் மனதில் ஒரு காரணம் இருக்க வேண்டுமல்லவா? அது என்னவென்று எனதுள்ளத்தில் உள்ளவாறு விபரம் எழுதுகிறேன்.
வறுமையிலும் பொறுமை செய்ய வேண்டும். இது வாசக நேயர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்.
பொறுமை என்பது வணக்கங்களில் மிகச் சிறந்த வணக்கமாகும். குறிப்பாக வறுமையில் பொறுமை செய்வது மா பெரும் “ஜிஹாத்” ஆகும். இதற்கான கூலி சுவர்க்கம்தான். அதாவது அல்லாஹ்வின் திரு முகக் காட்சிதான்.
பொறுமை தொடர்பாக திருக்குர்ஆன் வசனங்களும், நபீ மொழிகளும், அவ்லியாஉகளின் வழி காட்டல்களும், வரலாறுகளும் அதிகம் உள்ளன.
ஆயினும் என் தந்தை கடும் வறுமையிலும் பொறுமை செய்த ஒரு தியாகி. அவர்களின் வரலாறுகளை அறிபவர்கள் அவர்கள் போல் பொறுமை செய்து அல்லாஹ்வின் அருளையும், அன்பையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை ஆதரவு வைத்தவனாகவே அவர்களின் பொறுமை பற்றி இங்கு எழுதுகிறேன்.
சிலர் வறுமையின் சுமையை தாங்கிக் கொள்ளாமலும், அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் கொள்ளாமலும் தமது “ஈமான்” நம்பிக்கைக்கு மாறாக முடிவு செய்து வருகிறார்கள். சிலர் நஞ்சருந்தி மரணிக்கிறார்கள். இன்னும் சிலர் வேறு விதத்தில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இன்னும் சிலர் தமது மனைவி மக்களைப் பிரிந்து விடுகிறார்கள். இன்னும் சிலர் தலைமறைவாகியும் விடுகிறார்கள்.
இன்னோர் இவ்வாறு செய்வதன் மூலம் அல்லாஹ்வின் செயலைப் பொருந்திக் கொள்ளாதவர்களாகி விடுகிறார்கள்.
அல்லாஹ்வைப் பொருந்திக் கொள்வதென்றால் அவனின் செயல்களையும், அவனின் நாட்டங்களையும் பொருந்திக் கொள்வதேயாகும். அவனின் செயல்களைப் பொருந்திக் கொள்ளாமலும், அவனின் நாட்டத்தைப் பொருந்திக் கொள்ளாமலும் அவனைப் பொருந்திக் கொள்தல் என்பது அர்த்தமற்றதாகும். நாமும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொள்ள வேண்டும். அவனும் எம்மைப் பொருந்திக் கொள்ள வேண்டும். رَضِيَ اللهُ عَنْهُمْ وَرَضُوْا عَنْهُ என்ற திரு வசனம் மேற்கண்ட கருத்தையே உணர்த்துகிறது.
எதில் பொறுமை செய்ய வேண்டும்? என்ற கேள்விக்கு எதிலெல்லாம் பொறுமை செய்ய வேண்டுமென்று இஸ்லாம் வழி காட்டுகிறதோ அதிலெல்லாம் பொறுமை செய்ய வேண்டும். இஸ்லாம் கூறினாலும், கூறாவிட்டாலும் மனிதன் தனது மனச் சாட்சியை வழிகாட்டியாகக் கொண்டு செயல்பட வேண்டும். நபீ பெருமானார் கூறினார்கள். اِسْتَفْتِ قَلْبَكَ، وَإِنْ أَفْتَاكَ الْمُفْتُوْنَ “பத்வா” வழங்குவோர் “பத்வா” வழங்கினாலும் உனது உள்ளத்திடம் “பத்வா” கேள்” என்று.
சொற்களின் விபரம்:
اِسْتَفْتِ
என்ற சொல் اِسْتَفْتَى என்ற சொல்லின் اَمْرُ حَاضِرْ முன்னிலை ஏவல் வினைச் சொல்லாகும். இதன் اِسْمُ الْفَاعِلْ - مُسْتَفْتِيْ என்று வரும். أَفْتَى என்றால் “பத்வா” கொடுத்தான் என்று பொருள். مُفْتِيْ என்பது اِسْمُ الْفَاعِلْ ஆகும். இதன் பொருள் “பத்வா” கொடுப்பவன் என்று வரும். مُفْتُوْنْ என்ற சொல் مُفْتِيْ என்ற சொல்லின் பன்மைச் சொல்லாகும். اَفْتَى என்ற சொல்லின் اِسْمُ الْمَفْعُوْلْ - مُفْتَى என்று வரும். இதன் பன்மை مُفْتَوْنَ என்று வரும். இதன் பொருள் “பத்வா” வழங்கப்பட்டவர்கள் என்று வரும்.
மேற்கண்ட விபரம் பொது மக்களுக்குத் தேவையில்லை. صَرْفْ என்று சொல்லப்படுகின்ற அறபு மொழியின் சொல்லிலக்கணம் தொடர்பான விபரமாகும். அறபுக் கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் இது பொருத்தமானது.
“பத்வா” வழங்குவோர் “பத்வா” வழங்கினாலும் நீ உனது உள்ளத்திடம் “பத்வா” கேட்டுக் கொள் என்ற நபீ மொழியின் படி கெட்டவன் ஒருவன் தனது “கல்பு” உள்ளத்திடம் “பத்வா” கேட்கும் போது அவனின் “கல்பு” உள்ளம் நல்லதை நல்லதென்றும், கெட்டதை கெட்டதென்றும் சொல்லுமா? அல்லது மாறாகச் சொல்லுமா? கெட்டவனாயினும், நல்லவனாயினும் அவனின் மனம் சுத்தமானதாயிருந்தால் அது நல்லதையே சொல்லும்.
வறுமை:
வறுமை “குப்ர்” நிராகரிப்புக்கு நெருங்கிவிட்டது என்று நபீ பெருமானார் கூறியுள்ளார்கள்.
قال النبي صلى الله عليه وسلّم: كَادَ الْفَقْرُ أَنْ يَكُوْنَ كُفْرًا،
வறுமை “குப்ர்” எனும் நிராகரிப்புக்கு நெருங்கிவிட்டது என்று கூறியுள்ளார்கள். நபீ பெருமானார் அவர்கள் ஏன் இவ்வாறு சொன்னார்கள்? என்றால் களவைத் தொழில் போல் செய்து பழகியவன் அதை “ஹலால்” என்று நம்புவதற்கும் சாத்தியம் உண்டு. அவ்வாறு அவன் நம்பினால் - அதாவது மார்க்கத்தில் “ஹறாம்” ஆக்கப்பட்ட ஒன்றை “ஹலால்” என்று யாராவது நம்பினால் “குப்ர்” நிராகரித்தவராகிவிடுவார்.
“ஹறாம்” ஆக்கப்பட்ட ஒன்றை “ஹலால்” என்று சொல்வது அல்லது நம்புவது “குப்ர்” நிராகரிப்பை ஏற்படுத்துமென்பதை ஒவ்வோர் முஸ்லிமும் அறிந்திருக்க வேண்டும்.
காத்தான்குடி பள்ளிவாயல்களிலுள்ள காணிக்கை உண்டியல்களில் இரும்புத் தைக்காப் பள்ளி உண்டியல் மட்டும்தான் மாதாந்தம் அதிக பணம் சேரும் உண்டியலாகும். வஹ்ஹாபிஸம் தலை நீட்டிய பிறகு உண்டியல்களில் பணம் சேர்வது மிகவும் குறைந்து விட்டது. ஆயினும் வஹ்ஹாபிஸம் வருவதற்கு முன்னுள்ள காலத்தில் பள்ளிவாயல்கள் அனைத்திலும் உண்டியல்கள் நிறைந்துதான் இருந்தன.
இதற்கான காரணம் குறித்த பள்ளிவாயல் காத்தான்குடி பிரதான வீதியில் அமைந்திருப்பதேயாகும். பிரதான வீதியால் போக்கு வரத்துச் செய்கின்ற வாகனங்களில் பயணிப்பவர்கள் இன, மத வேறுபாடின்றி காணிக்கை செலுத்தியே செல்வார்கள். இதற்கு இன்னுமொரு காரணம் இருந்தது. குறித்த பள்ளிவாயலில் வலீமாரின் நடமாட்டமும் இருந்ததேயாகும்.
சன நடமாட்டம் குறைந்த காலத்தில் சுமார் 75 வருடங்களுக்கு முன் - நான் சுமார் ஏழு வயதுச் சிறுவனாயிருந்த காலத்தில் இப் பள்ளிவாயல் உண்டியல் அடிக்கடி கள்வர்களால் திருடப்படும்.
ஒரு நாளிரவு ஒரு திருடன் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற போது வீதியில் நாகைப் பாம்பினால் தீண்டப்பட்டு ஸ்தலத்திலேயே மரணித்தான். இது 1951ம் ஆண்டு அல்லது 52ம் ஆண்டு நடந்ததாகும்.
இன்னுமொரு திருடன் ஒரு நாளிரவு சுமார் இரண்டு மணியளவில் உண்டியலை உடைப்பதற்குச் சென்ற நேரம் என்னதான் நல்லெண்ணம் ஏற்பட்டதோ தெரியவில்லை. உண்டியலுக்கு முன்னால் நின்று, இறைவா! எனது வறுமை காரணமாக உனது பள்ளிவாயல் உண்டியலை உடைத்து பணம் திருட நான் வந்துள்ளேன். எனது கஷ்டத்தினால் நான் எடுக்கிறேன். நீ என்னை மன்னித்துக் கொள் என்று “துஆ” செய்து விட்டு உண்டியலை உடைக்க முற்பட்ட போது ஒருவர் அவனின் தோளில் தட்டி தங்கப் பவுன் 02 கொடுத்து நீ திருடாதே என்று கூறியுள்ளார். அவன் திருடாமல் வீடு சென்று மறு நாட்காலை எனது தந்தையிடம் சென்று நடந்ததைக் கூறி 2 பவுன்களையும் தகப்பனாரிடம் காட்டியுள்ளார்.
இது நடந்த காலத்தில் ஒரு பவுன் தங்கம் 15 ரூபாயாக இருந்த காலம் என்று சொல்லப்பட்டது.
والله يغني من يشاء،
والله يعطي من يشاء بغير حساب،
உப்புக் கட்டியார் ஆலை:
இரும்புத் தைக்கா பள்ளிவாயலுக்கு எதிரில் மார்க்கட் - சந்தையை நோக்கிச் செல்லும் வழியில் மையவாடியில் நின்றிருந்த ஆலை மரம் உப்புக் கட்டியார் ஆலை என்று மக்களால் அழைக்கப்பட்டு வந்தது. இது 1945 - 50ம் ஆண்டுகளில் - சுமார் 75 ஆண்டுகளுக்கு முன் காத்தான்குடியில் காணப்பட்ட ஆலை மரங்களில் மிகப் பெரிய ஆலையாக இருந்தது.
இது உப்புக் கட்டியார் ஆலை என்று அழைக்கப்படுமுன் எவ்வாறு அழைக்கப்பட்டதென்பதற்கு ஆதாரம் கிடைக்கவில்லை.
ஆயினும் இந்த மரம் உப்புக் கட்டியார் ஆலை என்று அழைக்கப்பட்டதற்கு ஒரு வரலாறு உண்டு. இது முன்னோர் சொல்ல நான் கேட்டதாகும்.
இந்த மரம் இரும்புத்தைக்காப் பள்ளிவாயலுக்கு அண்மையில் இருந்தது. இந்த மரம் இருந்த இடத்திலிருந்து சுமார் 10 மீற்றர் தூரத்தில் ஓர் வீடு இருந்தது. அந்த வீட்டுக் காரர் ஓர் ஏழை மனிதன். அவர் இரும்புத் தைக்காப் பள்ளிவாயலில் “முஅத்தின்” ஐவேளை பாங்கு சொல்வதற்காக நியமிக்கப்பட்டிருந்தார்.
அக்காலத்தில் அப் பள்ளிவாயலில் வெள்ளிக்கிழமைகளிலும், றபீஉனில் அவ்வல் மாதத்திலும் மார்க்க விஷேட நிகழ்வுகள் நடைபெற்று வந்தன. அந்த நிகழ்வுகளின் போது ஊர் மக்களால் நேர்ச்சைப் பொருட்கள் பள்ளிவாயலுக்கு வழங்கப்படுவதும், அவை ஏலத்தில் விற்கப்படுவதும் வழக்கம்.
ஒரு சமயம் “உப்பு” நேர்ச்சைப் பொருளாக வழங்கப்பட்டது. அதோடு வேறு நேர்ச்சைப் பொருட்களும் வழங்கப்பட்டன.
வழங்கப்படுகின்ற நேர்ச்சைப் பொருட்கள் தினமும் நிகழ்ச்சி முடிந்ததும் ஏலத்தில் விற்கப்படுவது வழக்கம்.
ஒரு நாள் வந்த நேர்ச்சைப் பொருட்களில் உப்பு ஒரு பெட்டி காணாமற் போய்விட்டது. நேர்ச்சைப் பொருட்களுக்குப் பொறுப்பாயிருந்த “முஅத்தின்” பாங்கு சொல்பவரிடம் வினவப்பட்ட போது அவர் அது பற்றித் தனக்குத் தெரியாதென்று சொல்லிவிட்டார்.
பள்ளிவாயல் “பேஷ் இமாம்” தொழுகை நடத்துபவர் மௌவலீ பட்டம் பெறாதவராயினும் ஓரளவு ஓதத் தெரிந்தவராயும், ஓரளவு விஷேஷமுள்ளவராயும் இருந்ததால் “உப்பு திருடப்பட்டுள்ளது தொடர்பில் நாம் ஒரு “துஆ” ஓதுவோம். உப்புத் திருடன் யாரென்று தெரிய வரும்” என்று சொன்னார். அவரே “துஆ” ஓதினார். அவர் “துஆ” ஓதும் போது இப்பள்ளிவாயலில் அடக்கம் பெற்றுள்ள அலியார் ஆலிமின் பொருட்டால் திருடன் பிடிபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். (அலீ ஆலிம் என்பவர் என் தந்தையின் தந்தையாவார்) பள்ளி கலைந்தது.
அன்று இரவு “ஸுப்ஹ்” தொழுகைக்கு பாங்கு சொல்வதற்கு “முஅத்தின்” பாங்கு சொல்பவர் வரவில்லை. தொழ வந்த யாரோ ஒருவர் பாங்கு சொன்னார். தொழுகையும் முடிந்தது. மக்கள் கலைந்து சென்றனர்.
ஆயினும் பள்ளிவாயல் தலைவரும், இன்னும் சிலரும் பாங்கு சொல்ல வராத முஅத்தினைப் பார்த்து வருவதற்காக அவரின் வீட்டிற்குச் சென்றார்கள். முஅத்தின் சுகவீனம் காரணமாக உறங்கிக் கொண்டிருக்கிறார் என்று அவரின் மனைவி சொன்னார். பள்ளிவாயல் தலைவரும், அவருடன் சென்றவர்களும் “முஅத்தின்” உறங்கிய அறைக்குள் சென்றார்கள். “முஅத்தின்” தனது உடல் முழுவதையும் துணியால் மறைத்துக் கொண்டிருந்தார். போனவர்கள் துணியை அகற்றினார்கள். ஸுப்ஹானல்லாஹ்! “முஅத்தின்” உடைய உடல் முழுவதும் உப்புக் கட்டிகள் போல் இருந்ததைக் கண்டு என்ன உப்புக் கட்டியார்? என்று கூறினார்கள். இறுதியில் அவர் நான்தான் திருடினேன். என்னை மன்னித்து விடுங்கள் என்று போனவர்களிடம் மன்னிப்புக் கேட்டார்.
அன்று முதல் அவரின் வீட்டுக்குப் பக்கத்திலிருந்த ஆலை “உப்புக் கட்டியார் ஆலை” என்று அழைக்கப்படலாயிற்று.
இந்த வரலாறில் பலருக்குப் பல பாடங்கள் உள்ளன. படித்துக் கொள்வார்களா?
திருடுதல் என்பது பாவங்களில் தண்டனைக்குரிய குற்றமாகும். எதெல்லாம் தண்டனைக்குரிய பாவங்கள் என்று “ஷரீஆ”வில் சொல்லப்பட்டுள்ளதோ அதெல்லாம் حَدٌّ தண்டனைக்குரிய பாவங்களாகும். அதாவது பெரும் பாவங்களாகும்.
இரும்புத் தைக்காப் பள்ளிவாயலில் பாங்கு சொல்வதற்காக நியமிக்கப்பட்டிருந்த “முஅத்தின்” பாங்கு சொல்பவர் திருடியது பெறுமதியான ஒரு சாமான் அல்ல. ஆயினுமது அல்லாஹ்வின் வீட்டில் செய்த களவாகும். இதனால் அல்லாஹ் அவரை ஒரே இரவில் தண்டித்து விட்டான்.
இன்று பள்ளிவாயல் நிர்வாகிகளிற் பலர் பள்ளிவாயலுக்குரிய சொத்துக்களைத் தமது சொத்துக்கள் போல் பாவிப்பதாக நாம் அறிகிறோம். இன்னோர் அல்லாஹ்வின் தண்டனையை பயந்து கொள்ள வேண்டும்.
இரும்புத் தைக்கா முஅத்தினுக்கு அல்லாஹ் வழங்கிய தண்டனையை அனைத்துப் பள்ளிவாயல்களினது நிர்வாகிகளும், வேலையாட்களும், கடமைக் காரர்களும் தமது மனதில் வைத்துச் செயல்பட வேண்டும்.